Published:Updated:

`பட்டத்தை போஸ்டரோடு நிறுத்திக்கங்க; பேனர்லாம் வேண்டாம்!' - நடிகை மீனா

மீனா
மீனா

சினிமா, சீரியல்கள் நாள்களிலேயே வெறுமனே மீனா என டைட்டில் கார்டு போடப்பட்ட நிலையில், `கரோலின் காமாட்சி'யின் போஸ்டரோ `எவர்க்ரீன் ஸ்டார்' என்று மீனாவை விளக்குகிறது.

குழந்தை நட்சத்திரமாக `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் வந்தபோது `பேபி' அடைமொழி. `என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானது முதல் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டாலும் டைட்டில் கார்டில் எந்தப் பட்டமும் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை. ஆனால், அவரது ரசிகர்கள் அவரைக் கண்ணழகி எனக் கொண்டாடினார்கள். முதலில் வெட்கப்பட்டாலும் பிறகு அந்தப் பட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளவும் செய்தார். (நடிகர் பார்த்திபன் `கண்ணே மீனா... மீனே கண்ணா' என எழுதிக் கொடுத்த நினைவுப் பரிசு அவரது வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கிறது) சினிமா பயணத்தை முடித்துவிட்டு, சில சீரியல்களில் நடித்தவர், இப்போது வெப் சீரிஸ் பக்கம் எட்டிப் பார்க்கிறார். யெஸ்... விரைவில் வெளியாக இருக்கிறது, மீனா நடித்திருக்கும் `கரோலின் காமாட்சி' எனும் வெப் சீரிஸ்.

வெப் சீரிஸில் மீனா
வெப் சீரிஸில் மீனா

சினிமா, சீரியல்கள் நாள்களிலேயே வெறுமனே மீனா என டைட்டில் கார்டு போடப்பட்ட நிலையில், `கரோலின் காமாட்சி'யின் போஸ்டரோ `எவர்க்ரீன் ஸ்டார்' என்று மீனாவை விளக்குகிறது. பட்டத்தை மீனாவுக்கு வழங்கிய இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த வெர்னிக்கிடம் பேசினேன்.

"விஜய்யின் நெகட்டிவ் ரோல்; மீண்டும் ராஜ்கிரண் - மீனா !" #CinemaVikatan2020

``அவங்களோட எக்ஸ்பீரியன்ஸுக்கு இந்தப் பட்டமெல்லாம் சாதாரணம்னுதான் நினைக்கிறேன். சினிமாவுல எந்தப் பட்டமும் வேணாம்னு இருந்தது அவங்களுடைய இயல்பான குணத்தையும், பெருந்தன்மையையுமே காட்டுது. சிவாஜி-எம்.ஜி.ஆர் தலைமுறையில தொடங்கி (குழந்தையாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தில் நடித்திருக்கிறார் மீனா) ரஜினி-கமல் காலத்துல கலக்கிட்டு விஜய்-அஜித் ஜெனரேஷன் வரைக்கும் தமிழ் சினிமாவுல நிலைச்சு நின்ற ஒருத்தர்னா வேறு யாராச்சும் இருக்காங்களா? அதனாலதான் வெப் சீரிஸ் என்ட்ரியிலயாவது அவங்களைக் கௌரவப்படுத்தற மாதிரி ஒரு பட்டம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். பல பட்டங்களைச் சூட்டிப் பார்த்து கடைசியில `எவர்க்ரீன் ஸ்டார்' பட்டத்தைத் தேர்வு செய்தோம். ஆனா, இந்தப் பட்டத்துக்கு அவங்ககிட்டச் சம்மதம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.

கரோலின் காமாட்சி
கரோலின் காமாட்சி

முதல் தடவையா பட்டம் குறித்து அவங்ககிட்டச் சொன்னதும் `கெக்க கெக்க'னு சத்தமாச் சிரிச்சிட்டாங்க. `என்ன, காமெடி பண்றீங்களா'னு கேட்டு நம்ப மாட்டேங்கிறாங்க. இப்படித்தான் வரப்போகுது'ன்னு நாங்க அழுத்தமாச் சொன்னதும் சங்கோஜப்படறாங்க. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? ஃபீல்டுல கடைசிவரை இருக்கிறவங்கதான் இப்படியெல்லாம் போட்டுக்கணும்? ரஜினி, கமல் சார் காதுலெல்லாம் இந்தப் பட்டம் விழுந்தா அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்னு எங்களையே கேட்டுச் சிரிக்கிறாங்க. ஆனாலும் நாங்க தொடர்ந்து வற்புறுத்தியதால கடைசியில 'என்னவோ பண்ணுங்க'னு சம்மதம் தந்தவங்க, கிளம்பறப்ப, 'எல்லாம் சரி, ஆனா பட்டத்தை போஸ்டரோட நிறுத்திக்கோங்க, பேனர்லாம் வச்சு வம்புல மாட்டிக்காதீங்க'னுதான் ஹைலைட்" என்றார் வெர்னிக்.

அடுத்த கட்டுரைக்கு