
WEB SERIES
என்ன சொல்றாங்கன்னா?
விடிந்தால் மரணம். எனவே, அதைத் தடுக்க இரவைத் துரத்திக்கொண்டு ஒரு பயணம் - த்ரில் குறையாத, பரபரவென நகரும் களம்தான் ‘Into The Night’ தொடரின் கதைக்கரு.
நேட்டோ (NATO) அமைப்பின் அதிகாரி டெரன்ஸியோவுக்கு, பூமிக்கு நிகழவிருக்கும் பேராபத்து ஒன்றைப் பற்றித் தெரிய வருகிறது. தன் உயிரைக் காத்துக்கொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்பவர், விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்கும் விமானம் ஒன்றைத் துப்பாக்கி முனையில் கடத்துகிறார். அவர் மூலம் பயணிகளும் பைலட்டும் பூமிக்கு நிகழவிருக்கும் ஆபத்தைப் பற்றிப் புரிந்துகொள்கிறார்கள். உயிர்வாழ உதவி செய்யும் சூரியன் இப்போது எதிரி. ஆம், சூரிய ஒளி படும் அனைவரும் இறந்து போகிற விபரீதம் அரங்கேறுகிறது. விமானத்தைக் கிளப்பிக்கொண்டு தப்பிக்கும் இந்தக் குழு உயிர்பிழைக்க இரவைப் பின்தொடர்ந்து, அதாவது மேற்கு திசையை நோக்கி மட்டுமே தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும். விடியலை விட்டு விலகி ஓடும் இவர்கள் பிழைத்தார்களா என்ற கேள்விக்கு நிறைய திருப்பங்களுடன் விடை சொல்கிறது ‘இன்டு தி நைட்.’
சேம் பிஞ்ச்
The Rain (தொடர்), Snowpiercer (படம்/தொடர்), The Mist (படம்/தொடர்)

திரைக்குப் பின்னால்...
போலந்து எழுத்தாளரான ஜேசக் டுகாஜ்ஜின் ‘The Old Axolotl’ என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்தான் மூலக்கதை. இதன் முதல் சில பக்கங்களை வைத்து மட்டுமே இந்த சீசன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே புத்தகத்தில் அதிகம் என்பதால் இன்னமும் ஒரு 6 சீசன்களுக்காவது இந்தத் தொடரை நீட்டிக்க முடியும். ஆனால், அதற்கு நெட்ஃப்ளிக்ஸ் இன்னமும் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கவேண்டியிருக்கும்.
ப்ளஸ்
பரபரப்பு குறையாத 35 நிமிடங்களே கொண்ட 6 எபிசோடுகள். ஒரே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நாளில் பார்த்துவிடக்கூடிய சீரிஸ் என்பது மிகப்பெரிய பலம். விமானக் கடத்தல் என்றவுடன் தீவிரவாதம் என்ற பழைய ரன்வேயையே சுற்றாமல், விமானம் பறக்கிறது; கீழே உலகம் அழிகிறது; சூரிய ஒளி படாமல் இரவைத் துரத்திக்கொண்டு பயணிக்க வேண்டும் என சஸ்பென்ஸைக் கூட்டி யிருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோ டுக்கும் ஒவ்வொரு முக்கியக் கதாபாத் திரத்தின் பெயரை வைத்து அவர்களின் பின்கதையை விளக்கி, நிகழ்காலத்திலும் அந்தந்த எபிசோடுகளில் அவரவர்களே கதையை நகர்த்த உதவியிருப்பது சிறப்பு.
பைலட்டுக்கு உதவும் சில்வி என்ற முன்னாள் மிலிட்டரி அதிகாரிதான் நாயகி. இல்லாத கேர்ள்ஃபிரண்டைத் தேடிச் செல்லும் செக்யூரிட்டி, சோஷியல் மீடியா செலிபிரிட்டி, பிரச்னையைப் புரிந்துகொண்டு விளக்கும் வானிலை ஆராய்ச்சியாளர், மகனுடன் அறுவைசிகிச்சைக்காகச் செல்லும் தாய், கறுப்பினப் பெண் செவிலியர் என ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் அத்தனை ஆழம். இவர்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் எப்படி தங்கள் முன் இருக்கும் பிரச்னையைப் பார்க்க வைக்கிறது, இந்த இடர்ப்பாட்டில் அறிமுகமில்லாத மற்றொருவரை எப்படிப் பார்க்கின்றனர் எனப் பக்காவான பல பாத்திரப் பகுப்பாய்வாகவும் தொடர் விரிகிறது.
மைனஸ்
‘அடுத்து எந்த நகரத்தில் இரவு?’ எனத் தேடித் தேடிப் பறக்கிறார்கள்; ஆங்காங்கே நிறுத்தி உணவுப்பொருள், எரிபொருள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக்கூட ஏற்கலாம்தான். ஆனால், அதைக் காட்சிப்படுத்திய விதம்தான் நெருடல். பெரிய பட்ஜெட் இல்லாததாலோ என்னவோ கட்டாயம் காட்சிப்படுத்தியிருக்க வேண்டிய பிரமாண்ட நிகழ்வுகளை வசனங்களால் நிரப்பியிருக்கிறார்கள். இதனால், சூரிய ஒளியால் இறப்பு என்பதன் நிஜ பதைபதைப்பு நமக்குக் கடத்தப்படவே இல்லை. என்னதான் சில்வி மிலிட்டரி ஹெலிகாப்டர் ஓட்டிய பெண் என்றாலும் யூடியூப் வீடியோ பார்த்து சர்வதேச விமானத்தைத் தரையிறக்குவதெல்லாம் ‘ஹீரோயினிசம்.’ மத்தபடி ‘வி லைக் யூ’ங்க!
யார் பார்க்கலாம்:
16+ | வன்முறை மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்துக்காக...
எங்கு பார்க்கலாம்:
இது நெட்ஃப்ளிக்ஸின் முதல் பெல்ஜிய மொழி சீரிஸ். ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.