ஒரு நியூஸ் சேனலில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் சஞ்சீவ் மெஹ்ரா. அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரி ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த இந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `பாதாள் லோக்.'
தன் ஜூனியருக்கு சலாம் போட்டு, வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு தோல்வி முக காவல் அதிகாரிக்குத்தான் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு வழக்கு கிடைக்கிறது. அதில் வெற்றிபெற்றால், வீட்டிலும் அலுவல் இடத்திலும் மற்றவர்களின் ஏளனப் பார்வை மாறலாம். ஆனால், அப்படியெல்லாம் நடந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லையே. ஒரு நியூஸ் சேனலில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் சஞ்சீவ் மெஹ்ரா. அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரி ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த இந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `பாதாள் லோக்'. `Paatal Lok' அமேசான் ப்ரைமில் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோடிலும் முதல் இரண்டு நிமிடங்களிலேயே கதை சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கையை வைத்து, நமது கண்ணீரை எடுத்து சென்னைக்கே விநியோகம் செய்யும் வேலையை எங்குமே இதன் கிரியேட்டர்கள் கையாளவில்லை என்பதுதான் `பாதாள் லோக்'கின் முதல் ப்ளஸ். ஆனால், அக்காட்சிகளின் வீரியம் இறுதி எபிசோடு வரை, நமது மனதுக்குள் ஓடுகிறது. அதீத வன்முறை மற்றும் 'அடல்ட்ஸ் ஒன்'லி காட்சிகள் நிறைய இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்ப்பது நலம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்க்கைச் சூழல். நாம் கனவிலும் எதிர்பார்த்திராத கதைகளும் அதில் அடக்கம். எல்லாக் கதைகளுமே பாலாவின் படங்களில் வரும் வழக்கமான விளிம்புநிலை மனிதர்கள்தான். ஆனால், அவை நம்பும்படியாக இருக்கின்றன.
இஸ்லாமியர்கள் சாப்பிடும் அனைத்து அசைவ உணவுகளும் பீஃப்பாகவே சிலரால் பார்க்கப்படுவது ஏன் எனத் தொடங்கி, பட்டியலினத்தவர்களை ̀வா அசுர வா' என உசுப்பேற்றி பின் அவர்களைக் கைகழுவிவிடும் அரசியல் கட்சிகள்வரை `பாதாள் லோக்' யாரையும் விமர்சிப்பதில் இருந்து பின்வாங்கவில்லை. புகழ்ச்சிக்கெனப் பொய்யை விற்பனை செய்யும் மீடியா, அதிகார துஷ்பிரயோக சீண்டல்கள், ஆணாதிக்க மனப்பான்மை, சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடுஞ்செயல்கள், அரசுக்கு ஆதரவாகப் பல்லைக் கடித்துக்கொண்டு இளிக்கும் கார்ப்பரேட்டுகள் என ஒரு கதைக்குள் இத்தனை விஷயங்களை நுழைக்க முடியுமா என நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.

Also Read
ஆனால், முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் `பாதாள் லோக்'கின் கதாசிரியரான சுதீப் ஷர்மா. அபிஷேக் ஷௌபியுடன் இணைந்து இவர் எழுதிய `உட்தா பஞ்சாபு'ம், `சோஞ்சிரியா'வும் நிஜ இந்தியாவின் பிரதிபலிப்புகள். தீரன் படத்தின் வேறொரு வெர்ஷனை, கிட்டத்தட்ட இரு தரப்பின் பார்வையிலும் நகரும் கதை `சோஞ்சிரியா.' இதில் அத்தகைய இருமுனைக் கதாபாத்திரங்களை இன்னும் நெருக்கத்தில் வைத்து சீர்படுத்தியிருக்கிறார் சுதீப் ஷர்மா. அவரது எழுத்தில் ஏற்கெனவே `NH10' படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்திருந்தார். இந்தத் தொடரைத் தயாரித்து இருப்பதும் அனுஷ்காதான். வாழ்த்துகள்!
ஹதிராம் சௌத்ரியாக ஜெய்தீப். `லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் சிரீஸில் நடித்திருப்பவர். இன்னும் எளிமையாக நினைவுக்கு வர வேண்டுமென்றால், `விஸ்வரூப'த்தில் சலீமாக வருபவர். பின்லேடன் காட்சியில்கூட காணாது கண்ட மாமனியாய் துள்ளிக் குதிப்பாரே, அவரேதான். இதில் சற்றுப் பூசினாற்போல இருக்கிறார். காக்கிச் சட்டை வாழ்க்கையில், `ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னையும்', `கேட்ட மூட்றா'வையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு ஹதிராம் சௌத்ரி சற்று வித்தியாசமானவர். வீட்டிலும் யாரும் மதிப்பதில்லை. அலுவலகத்தில், தனக்கு ஜூனியராக இருந்த நபருக்கு தற்போது `ஜெய்ஹிந்த் சார்' சொல்லிக்கொண்டு வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு நபர். கிடைக்கும் சின்ன கோடுகளில் முடிந்தவரை ரோடு போட்டு, இந்த வாழ்வை இன்னும் சிலகாலம் ஓட்டிவிட முடியாதா என நினைக்கும் நம்மைப் போன்ற சாமானியர். அதே வேளையில் போலீஸுக்கான வரட்டு மிடுக்கும் குறையாத ஒரு நபராக அநாயசமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார்.

இம்ரன் அன்சாரியாக நடித்திருக்கும் ஈஷ்வக் சிங்கின் கதாபாத்திரம் தற்போதைய சூழலுக்கேற்ற அழுத்தமான வார்ப்பு. ``உங்க கம்யூனிட்டில இருந்து இப்படியான நபர்கள் பெரிய போஸ்ட்டுகளுக்கு வருவது நல்ல விஷயம்" என சீண்டும் உயர் அதிகாரி முதல், சிவில் சர்வீஸ் கேள்விகளில்கூட இது சார்ந்த விஷயங்களுக்காக குறுகி நிற்க வைக்கபடுவதற்கு ஒரு சிறுபான்மையினர் எத்தனை இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பதை அட்டகாசமாய் பிரதபலித்திருக்கிறார். அதிகமாக காட்சிகள் இல்லாவிட்டாலும், தான் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும், ஸ்கோர் செய்கிறார் டோலியாக வரும் பெங்காலி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த மீட்டருக்குள் அட்டகாசமாய்ப் பொருந்திப் போகிறார்கள்.
தொடரின் காஸ்டிங் இயக்குநரான அபிஷேக் பானர்ஜிதான் விஷால் தியாகியாக மிரட்டியிருக்கிறார். செய்தி வாசிப்பாளராக சால்ட் & பெப்பர் ஹேர்ஸ்டைலில் இருக்கும் சஞ்சிவ் மெஹ்ரா, தற்போதைய ஆங்கில ஊடக ப்ரைம் டைம் விவாத நெறியாளர்களைக் கண் முன் கொண்டுவருகிறார். `Sacred Games' தொடரிலும் கவனம் ஈர்த்த நீரஜ் கபி, மெஹ்ராவாக ஸ்மார்ட் சாய்ஸ்.
``நீங்க என்ன ஜட்ஜ் பண்ணாத வரை, நான் உங்கள எதுவும் ஜட்ஜ் பண்ண போறதில்லை", ``அவனுக்கு அதைப் பத்தின எந்த அடையாளமும் இல்லாம வளர்த்தேன், ஆனா அவனை நீங்க இப்படி மாத்தி இருக்கீங்க", ``அவன் எது நியாயமோ அதைத்தான் பண்ணான்", ``இந்த சிஸ்டம் வெளிய இருந்து பார்க்க, ரொம்பவே மோசமானது மாதிரி இருக்கும். உள்ள இருக்கிறவனுக்கு மெஷின் ரொம்ப நல்லா ஓடறதா தோணும். எந்த ஸ்பேர் பார்ட் பிரச்னை பண்ணுதோ, அதைய இந்த சிஸ்டம் மாத்திடும். இந்த சிஸ்டம் என்னிக்கும் மாறாது." கடைசியாகச் சொல்லப்பட்ட வசனமும், ஹதிராம் சௌத்ரி தொடரின் ஆரம்பத்தில் சொல்லும் `பாதாள் லோக்' கதையும், இறுதியில் சொல்லும் மகாபாரதத் தருமர் கதையும் எக்காலத்துக்குமானவை. புராணங்களில் இருக்கும் ஹாரி பாட்டர் தனங்களைப் பாராட்டி, அது சொல்லும் தத்துவங்களையும் அரசியல்களையும் கோட்டைவிடுவது இந்த உலக இயல்பு. (ஹாரி பாட்டர்கூட அரசியல் பேசியிருக்கிறது என்பது தனிக்கதை). ̀ஆரண்ய காண்டம்' படத்திலும் இப்படியாகத்தான் கதை ஆரம்பிக்கும். 2015-ம் ஆண்டு ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான பெங்காலி குறும்படமான `அகல்யா' ஒரு சின்ன உதாரணம். சமீபத்தில் Voot தளத்தில் வெளியான ̀அசுர்' தொடரும் இப்படிப் புராணங்களை மையப்படுத்தியதுதான். புராணங்களில் இருந்து மீட்டு உருவாக்கம் செய்ய இன்னும் இப்படியான ஆயிரம் கதைகள் அதனுள் கொட்டிக்கிடக்கின்றன.

̀`நாம் எல்லோரும் கௌரி லங்கேஷ் போல் இந்த சிஸ்டத்தைவிட்டு அப்புறப்படுத்த முடிபவர்கள்" என ஒரு வசனம் அதன் போக்கில் வரும். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்னும்போது பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது இப்படியான பொட்டில் அடிக்கும் வசனங்கள்தான். அதே சமயம், சென்சார் இல்லை என்பதற்காக ஊரில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளையும் கம்பிகும்பா, குபிம்கபாம் எனச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தும் வெப் சிரீஸ்கள் இனியாவது கொஞ்சம் மாறுவது நலம். அதே சமயம் சில காட்சிகள் அடுத்து இப்படித்தான் நடக்கப்போகின்றன என்றாலும், அக்காட்சிகளைப் படமாக்கியது சற்று உறுத்தல். ``ஆனால், இவற்றை தெரிந்தேதான் செய்தேன்" என மேஷபிள் தளத்துக்கு பேட்டியளித்திருக்கிறார் சுதீப் ஷர்மா. ஆனால், இவ்வளவு சீரியஸான தொடரும் ஆங்காங்கே வரும் சில காட்சிகளால் அதன் க்ரிப்பை இழக்கிறது.
இங்கு நடக்கும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கு அரசுகள் பதறுவது யாரேனும் பொறுப்பேற்றுக்கொள்ளும் வரைதான் என ஒரு ட்வீட் படித்திருக்கிறேன். இங்கு நாம் செய்தித் தாள்களில் படிக்கும் தீவிரவாத செயல்களில், எத்தனை நிஜமானவை, எத்தனை ஜோடிக்கப்பட்டவை என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் நீதிமன்றங்களிலும் சிறைகளிலும் மௌன சாட்சியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன. இந்திய சிறைகளில் மூன்றில் இருவர் விசாரணைக் கைதிகள் என்கிறது Prison Survey of India 2017 ஆய்வு. அமெரிக்கர்களுக்கு கறுப்பினத்தவர்கள், இந்தியாவில் சிறுபான்மையினர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். நிலப்பரப்புகள்தான் மாறுகின்றதே ஒழிய, அதிகார வர்க்கங்கள் ஒருபோதும் அதன் நீட்டிக்கொண்டிருக்கும் நகத்தைகூட வெட்ட யோசித்தது இல்லை. அது கேட்பதெல்லாம் காணிக்கையாக ஒடுக்கப்பட்டவர்களின் விரல்களைத்தான்.
``ஒரு விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபிறகு, அங்கே சட்டத்தைப் பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர, நியாயத்தைப் பேசமுடியாது."மேனாள் நீதியரசர் சந்துரு
ஒரு கதையின் முக்கிய குற்றவாளியைக் கொடுரனாகக் காட்டிவிட்டு, அதை இறுதியில் சமன் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பின்னணி இசையோ, பாடலோ அதற்குத் துணை நிற்க முடியும். அவ்வளவே. இப்படியான எதிர்மறைக் கதாபாத்திரங்கள் உள்ள சில படங்கள் அந்த உச்ச நிகழ்வில் சிரிப்பு மூட்டிவிடும். பார்வையாளனை அந்தக் காட்சியில் பழையனவற்றை மறந்து, அவனுக்காக இரக்கப்பட வைப்பதில் இருக்கிறது ஓர் எழுத்தாளனின் வெற்றி. அந்த வகையில் வென்று இருக்கிறது இந்த `பாதாள் லோக்.'
கொரோனா புண்ணியத்தில் Present is the new future எனச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். நிகழ்கால பிம்பங்களே நம்மை அச்சமூட்டி எல்லாவற்றிருக்கும் தயார்செய்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அறவே இருக்காது. ஏனெனில், நாணல்கள் வளைய யோசிப்பதே இல்லை.

`கௌல்', `லீலா' போன்ற தொடர்கள், எதிர்கால இந்தியா எப்படி இருக்கப்போகிறது தெரியுமா எனப் பூச்சாண்டி காட்டுபவை.
``ஒரு விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு, அங்கே சட்டத்தைப் பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர, நியாயத்தைப் பேச முடியாது" எனச் சமீபத்திய விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் மேனாள் நீதியரசர் சந்துரு. `பாதாள் லோக்'கில் வரும் கதாபாத்திரங்கள் தத்தமது வழியில் நியாயத்தைப் பேசி இருக்கிறார்கள். எந்தவித ஹீரொயோஸ பில்ட்அப் காட்சிகளும் இல்லாமல், இழையோடும் அதன் இறுதிக்காட்சியில் நின்றிருக்கும் ஹதிராம் சௌத்ரியைப்போல வழக்கம்போல் மௌனசாட்சியாய் இதையும் கடந்துசெல்வோம்.