Published:Updated:

குடும்பங்களைச் சிதைக்கும் தீவிரவாதமும் மத அடிப்படைவாதமும்... `கேலிஃபேட்' வெப்சீரிஸ் சொல்வது என்ன?

கார்த்தி
Caliphate
Caliphate ( Netflix series )

மேற்கத்திய நாடுகளில் ISIS போன்ற குழுக்களால் நிகழும் கொடூரங்களை, குடும்பங்கள் சிதையும் அவல சூழலை... யதார்த்தமாய் பதிவு செய்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `Caliphate' சீரிஸ்.

சொர்க்க‌வாச பிம்பங்களை கட்டமைப்பவர்கள் அதை ஒரு போதும் பார்த்தில்லை. அதற்குள் அனுமதிக்கப்பட்டதும் இல்லை.
டோனி மாரிசன்

மேற்கத்திய நாடுகளில் ISIS போன்ற குழுக்களால் நிகழும் கொடூரங்களை, குடும்பங்கள் சிதையும் அவல சூழலை... யதார்த்தமாய் பதிவு செய்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `Caliphate'.

Caliphate
Caliphate

சிரியாவில் இருக்கும் ஸ்வீடிஷ் பெண்ணான பெர்வினுக்கு எப்படியாவது அவளது குழந்தையுடன் அங்கிருந்து தப்பித்து ஸ்வீடனுக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். ஸ்டாக்ஹோமிலிருக்கும் பெண் காவல்துறை அதிகாரியான ஃபாத்திமாவுக்கு துறை ரீதியிலான நெருக்கடிகள் இருந்தாலும், ஸ்வீடனில் நிகழவிருக்கும் அசம்பாவிதங்களைத் தடுப்பதோடு, தன் இன்ஃபார்மரான பெர்வினை காப்பாற்ற வேண்டும் என்கிற துடிப்பு. ஸ்டாக்ஹோம் பள்ளியில் இருக்கும் ஓர் ஆசிரியருக்கு, முஸ்லிம் சிறுமிகளை மூளைச் சலவை செய்து, அவர்களை ஸ்வீடனில் இருந்து சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என்பது வேலை. இப்படிப் பல்வேறு கிளைக்கதைகளை தீவிரவாதம் எனும் ஒற்றைப் புள்ளியில் கோத்து த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர் கொரான் கெப்டனோவிக்.

ISIS பயங்கரவாதிகளின் போக்குகளை இணையத்தில் பல்வேறு முறை பல்வேறு விதங்களில் படித்திருந்தாலும், அவர்களின் மீதான சினம் என்றும் குறைந்தபாடில்லை. யாஜிதி இனப் பெண்களைக் கூட்டாகக் கொல்வது, பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, ஆசிய நாடுகளில் இருக்கும் ஏழை இஸ்லாமியர்களை மூளைச் சலவை செய்து தற்கொலைப் படையாக மாற்றுவது போன்ற செய்திகளை நாம் படித்திருக்கலாம். இதில் முழுக்க மேற்கத்திய நாடான ஸ்வீடனில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் எப்படி தங்களின் அடிப்படைவாத கருத்துகளை மதத்தின் பெயரால் எழுதி, இல்லாத மாய உலகை நோக்கி இளைஞர்களைத் திருப்பி, எப்படி அவர்களை மரணக்குழியில் விழ வைக்கிறார்கள் என்பதைப் பதைபதைப்புடன் எடுத்துச் சொல்கிறது `கேலிஃபேட்.' இஸ்லாமிய குழுத் தலைவரான கலிஃபாவின் (khalīfah) கீழ் இயங்கும் அரசைத்தான் 'கேலிஃபேட்' என்கிறார்கள். சிறுமிகளுக்கான விடுதிகளும், வயதான ஆண்களுக்கு அவர்கள் விற்கப்படுவதும் சில நிமிடங்களே இந்தத்தொடரில் வந்தாலும், நம்மை அவை அச்சம்கொள்ள வைக்கின்றன.

Caliphate
Caliphate

தொடரிலிருக்கும் பிற கதைகளைக் காட்டிலும், நம்மை அதிகம் மனம் நோகச் செய்வது ஷுல்லியின் குடும்பம்தான். ஸ்வீடனில் இருக்கும் ஒரு சராசரி இஸ்லாமிய குடும்பத்தில் வளரும் ஷுல்லி, மூளைச் சலவை செய்யப்படுகிறாள். விளையாட்டில் பெரிய நபராய் ஜொலிப்பாள் என நம்பும் அவளின் தந்தைக்கு அடுக்கடுக்கான ஏமாற்றங்களைப் பரிசளிக்கிறாள் ஷுல்லி. அவளின் ஆசிரியர் மூலம், அவளுக்கு ISIS தொடர்பான வீடியோக்களும், ஆன்லைன் தரவுகளும் தரப்படுகிறது. ஸ்வீடனில் இஸ்லாமியர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை என ஏற்கெனவே நினைத்திருக்கும் ஷுல்லிக்கு இதுமேலும், ஆத்திரத்தையும், ஸ்வீடனில் இருந்து வெளியேறுவதுதான் ஒரே லட்சியமாக இருக்க முடியும் எனவும் எண்ண வைக்கிறது. ஆசிரியரின் சகோதரி எனத் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் நபருடனான இந்தச் சிறுமிகளின் உரையாடல்தான் தொடரின் ஆன்மா.

தொடரிலிருக்கும் பிற கதைகளைக் காட்டிலும், நம்மை அதிகம் மனம் நோகச் செய்வது ஷுல்லியின் குடும்பம்தான்.

சகோதரி : நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் ஒரு விதவை.

சிறுமி : அல்லா, அய்யோ பாவம்!

சகோதரி : நான் ரெண்டு தடவை விதவை ஆனேன். இருவரும் அல்லாவுக்காக உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். சிரியாவில் இருக்கும் ரக்கா சொர்க்கம் போல இருக்கும். மால்கள், மாளிகைகள் என நீங்கள் பார்க்காத ஓர் உலகை நாங்கள் உங்களுக்கு காண்பிக்கப் போகிறோம்.

சிறுமி : அப்படியெனில், நீங்கள் ஏன் ரக்கா செல்லாமல், இங்கே இருக்கிறீர்கள்.

கேலிஃபட்
கேலிஃபட்

ஷுல்லிக்கும் அவள் தந்தைக்குமான உரையாடல்களும், எப்படியேனும் ஷுல்லியைக் காப்பாற்றிவிட வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகளும், ஸ்வீடனைத் தாண்டி நம்மையும் நிலைகுலையச் செய்கிறது. `TAKE OFF', `FAMILY MAN' என நாம் இந்திய படைப்புகளில் பார்த்த குடும்பங்கள் சுக்குநூறாகப் போவதை, இந்த முறை ஸ்வீடனில் பார்க்கிறோம். நிலப்பரப்புகள் மாறுகிறதே அன்றி அடிப்படைவாதிகளின் பைத்தியக்காரத்தனங்கள் எங்கும் மாறுவதேயில்லை.

பெர்வினும் பிற பெண்களும், ஒரு தெருவில் குழுமியிருக்க, அங்கு ஒரு நபரின் கை வெட்டப்படுகிறது. தொடரின் முதல் காட்சியே இதுதான், இந்தத் தொடர் அனைவருக்குமானது அல்ல என்பதை இப்படியாக நினைவுறுத்தி அடுத்த காட்சிகள் தொடர்கிறது. நெட்ஃபிளிக்ஸும் இத்தொடருக்கு 18+ ரேட்டிங் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எட்டு எபிசோடுகள், ஒவ்வொன்றும் நாற்பது நிமிடங்கள் என ஓர் இரவில் பார்த்துமுடிக்கக்கூடிய தொடர்தான். ஆனால், அதன் பின் நாம் படிக்க வேண்டிய செய்திகள்தான் அதிகம்.

முதலிரண்டு எபிசோடுகள் க்வாரன்டீனில் இரண்டு மாத காலமாய் நின்ற வண்டி ஸ்டார்ட் ஆக மறுப்பதுபோல், நம் கண்களை மூட வைத்தாலும், அடுத்தடுத்து காட்சிகள் சட்டென நகர்கின்றன. அதேபோல், தமிழ் சினிமாக்களிலாவது போலீஸ் க்ளைமாக்ஸ் காட்சியில் வந்துவிடுவார்கள். இதில் ஃபாத்திமா, பெர்வினை இன்னும் ஏதாவது தேடு தேடு எனச் சொல்லும்போது, நமக்கே ஒரு கட்டத்துக்கு மேல், `அட முடிங்கப்பா' என்பதுபோல் இருக்கிறது.

"மூன்று பிரிட்டிஷ் டீனேஜ் சிறுமிகள் குடும்பங்களைவிட்டு ஐஎஸ்ஐஸ்-ல் சேர்ந்திருக்கிறார்கள் எனப் படித்தேன். எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள். அதனால்தான் இதை மையமாக வைத்து இந்தத் தொடரை எடுத்தேன்."
தொடரின் கிரேயட்டர் வில்ஹெம் பெர்மேன்

தொடரிலிருக்கும் சில அமெச்சூர் காட்சிகள், பட்ஜெட் போதாமைகளை வில்ஹெம்மின் இந்தப் பதில் கொஞ்சம் ஈடு செய்துவிடுகிறது.

கேலிஃபட்
கேலிஃபட்
மீட்பாரா மீட்பர்?
உங்களுக்குப் பிடித்த மற்ற சிரீஸ்களைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு