கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

அசுர ஆட்டம்!

வெப் சீரிஸ்.
பிரீமியம் ஸ்டோரி
News
வெப் சீரிஸ்.

WEB SERIES

பாரன்ஸிக் எக்ஸ்பர்ட்டாக இருந்து பேராசிரியராக மாறியவர் நிகில் நாயர். அடுத்தடுத்து நிகழும் கொலைகள் அவரை மீண்டும் சிபிஐ பக்கம் இழுத்து வருகிறது. நிகிலும் அவரின் முன்னாள் ஆசான் தனஞ்செய் ராஜ்புட்டும் இந்தத் தொடர் கொலைகளைத் துப்புத்துலக்க, ஆசானே கொலையாளி எனச் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துச் சிறைக்கு அனுப்புகிறார் நிகில். தொடரும் சம்பவங்களால் தன் ஆசான் கொலையாளி இல்லை என்பதை நிகில் கண்டறியும் தறுவாயில் அவரும் உண்மையான கொலைகாரனால் பிணைக் கைதியாக்கப்படுகிறார்.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

இவர்களை அலைக்கழித்து, தொடர் கொலைகள் நிகழ்த்தும் அந்த அசுரன் யார், அவன் நோக்கம் என்ன என்பதை சஸ்பென்ஸ், புராணங்களிலிருந்து ஏகப்பட்ட மேற்கோள்கள், கொடூரக் கொலைகள், ட்விஸ்ட்கள் கலந்து அசுர வேகத்தில் சொல்லி முடிக்கிறது வூட் (Voot) தளத்தில் வெளியாகியிருக்கும் ‘அசுர்’ (Asur) வெப் சீரிஸ்.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

வாரணாசி நகரம்தான் பிரதான கதைக்களம். அன்று, இன்று என நான்லீனியர் முறையில் விரியும் அத்தியாயங்களில் அன்றைய கதை அசுரன் உருவானது பற்றியும். இன்றைய கதை அசுரன் என்ன செய்கிறான் என்பதுமாக விரிகின்றன. வழக்கமான சீரியல் கில்லர் கதை களைப் போலக் கொலைகளைத் துப்புத்துலக்கும் ஹீரோ என்று முறுக்கு சுற்றாமல், ஃபாரன்ஸிக் எனும் அறிவியலை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை அதன் உண்மைத்தன்மையைச் சிதைக்காமல் அப்படியே காட்சிகளில் புகுத்தி சுவாரஸ்ய மைலேஜை ஏற்றியிருக்கிறார்கள்.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

கதாநாயகர்கள் இருவருமே ஃபாரன்ஸிக் அறிவியலில் ஜீனியஸ் என்பதால், ஸ்க்ரிப்ட் ஆராய்ச்சிக்காக நிறையவே உழைத்திருக்கிறது கதை, திரைக்கதை அமைத்த கௌரவ் ஷுக்லா மற்றும் இயக்குநர் ஓனி சென்னின் டீம். அதே சமயம், அறிவியலோடு நிற்காமல், கொலையாளி புராணங்களின் மேல் அதீத காதலும் ஆர்வமும் கொண்டவன் என்பதால் அந்த ஏரியாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். பாலிவுட்டின் சீனியர் நடிகரான அர்ஸத் வர்ஸி, சிபிஐ அதிகாரி தனஞ்செய் ராஜ்புட்டாக அளவான வசனங்கள், இறுக்கமான முகம் எனத் தேவையானதை மட்டுமே செய்திருக்கிறார். ‘இஸ் ப்யார் கோ க்யா நாம் தூன்’ என்ற இந்தி சீரியல் மூலம் பல இளம்பெண்களைக் கவர்ந்த நடிகர் பருண் சோப்திதான் நிகில் நாயர். குடும்பத்துக்காகத் தவறுகள் செய்துவிட்டு அந்த ஒற்றை அறையில் செய்வதறியாது பரிதவிக்கும் காட்சியிலும், இறுதியில் தான் செய்த ஒரு பெரும் தியாகம் வீணாய்ப்போனதை நினைத்து விரக்தி அடையும் காட்சியிலும் செம ஸ்கோரிங். மற்றொரு சிபிஐ அதிகாரியாக ரிதி தோக்ரா, நிகிலின் மனைவியாக அனுப்ரியா கோயங்கா என்று பெண்களுக்கும் இங்கே பலமான கதாபாத்திரங்கள் என்பதால் அவர்களும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

இவ்வளவு பலமான விஷயங்கள் இருந்தும் குறைந்த பட்ஜெட் காரணமாகவோ என்னவோ, அமெரிக்கா, டெல்லி, வாரணாசி என மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கதையை அதற்குரிய பிரமாண்டத்துடன் காட்சிப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். வாரணாசியை மட்டும் அழகியலோடு காட்டும் சாயக் பட்டாச்சார்யாவின் ட்ரோன் கேமரா, பின்னர் ஓர் அறை, சிறைச்சாலை குடோன், சிபிஐ அலுவலகம் எனச் சில செட்களுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்கிறது. என்னதான் நிகிலின் மனைவி சாப்ட்வேர் ஊழியராக இருந்தாலும் அரசாங்க ரகசியங்கள் அடங்கிய டேட்டாபேஸைப் போராடி ஹேக் செய்வதெல்லாம் பாலிவுட் பாஸ்தா.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

ஆட்டிசம், ஹைபர்லெக்ஸியா போன்ற மனநலம் சார்ந்த குறைபாடுகள் பற்றிய புரிதல் இல்லாமல் அத்தகைய குழந்தைகளை அதற்கேற்றபடி சிகிச்சையளித்து வளர்க்காமல் விட்டுவிடும் பெற்றோர்கள் இங்கே ஏராளம் உண்டு. அதிலும், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகளால் சூழப்பட்ட ஒரு தந்தையால் அப்படியொரு குழந்தை எத்தகைய மனப்பிறழ்வுக்கு உள்ளாகிறது என்பதை ‘அசுர்’ரின் ‘அன்று’ கதை விளக்குகிறது. மனித இயல்புக்கு அப்பாற்பட்டு இருப்பவர்களைக் கண்டு நாம் பயம் கொள்கிறோம்; அவர்களை அசுரர்களாகப் பாவித்துவிடுகிறோம்.

வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ்.

ஆனால், அவர்களுக்கு இருப்பது ஒரு குறைபாடு மட்டுமே, அவர்களுக்குள்ளும் மனிதம் இருக்கிறது, குழந்தைத்தன்மை இருக்கிறது என்பது மனிதர்களுக்குப் புரியாதவரை, நாம் விரும்பும் அசுரர்களாக அவர்களும் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள் என்ற அழுத்தமான கருத்தை முன்வைக்கிறது இந்த ‘அசுர்.’