சினிமா
Published:Updated:

டிஜிட்டல் சொர்க்கம்

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

என்ன சொல்றாங்கன்னா

‘இறப்புக்குப் பின் வாழ்க்கை எப்படியிருக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கில்ல? கவலைப்படாதீங்க பாஸ், இறப்புக்குப் பிறகு ஃபைவ் ஸ்டார் சர்வீஸ் தர நாங்க இருக்கோம்’ எனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்வு சொன்னால்? எல்லாம் டிஜிட்டல் ஆனது போலவே எதிர்காலத்தில் சொர்க்கமும் டிஜிட்டலானால் என்ன நடக்கும் என்பதுதான் அமேசான் ப்ரைமின் ‘அப்லோடு’(Upload) வெப்சீரிஸ் ஒன்லைன்.

டிஜிட்டல் சொர்க்கம்
டிஜிட்டல் சொர்க்கம்

2033, தானியங்கி வாகனங்கள், 3D பிரின்டிங்கில் உருவாகும் உணவு என ‘சர்வம் தொழில்நுட்பமயமாக’ இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் 27 வயதான மென்பொருள் வடிவமைப்பாளர் நேதன் பிரவுன். மிடில் கிளாஸ் குடும்பம், ஹை-கிளாஸ் கேர்ள் ஃபிரெண்ட் என வாழ்ந்தவர், சொல் பேச்சு கேட்காத தானியங்கிக் காரால் கோர விபத்தில் சிக்கிக்கொள்கிறார். வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் அவர்முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள். ஒன்று ரிஸ்க் எடுத்து உயிர்வாழப் போராடுவது, இல்லை டிஜிட்டல் சொர்க்கத்தில் ‘அப்லோடு’ ஆவது. செலவுகளை ஏற்றக்கொள்வதாக கேர்ள் ஃபிரெண்ட் சொல்ல, நேதன் இரண்டாவது ஆப்ஷனை டிக் அடிக்கிறார். அங்கு செல்லும் நேதனுக்கு அனைத்தும் இருந்தும் அது சொர்க்கமாக இல்லை, கேர்ள் ஃபிரெண்டின் கட்டுப்பாட்டில் ஏதோ சிறையில் அடைபட்டதாக உணர்கிறார். சில நினைவுகள் வேறு மிஸ்ஸிங். ஒரே ஆறுதல், டெக் சப்போர்ட்டாக அங்கு வேலைசெய்யும் நோரா. நிஜ உலகில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் இவருடன் நேதனுக்குக் காதல் மலர்கிறது. தொலைந்துபோன நினைவுகளை நேதனுக்காகத் தேடுகிறார் நோரா. நேதன் உண்மையில் விபத்துக்குள்ளானாரா, இல்லை அது கொலையா எனப் பல கேள்விகள். இவையனைத்துக்கும் விடைதேடுவதுதான் முதல் சீசன்.

ஸ்டார்ஸ்

நேதனாக ராபி அமேல் நடித்திருக்கிறார். ‘The Flash’ தொடரின் ரசிகர்கள் இவரைப் பார்த்திருப்பீர்கள். நோராவாக நடித்திருக்கும் அண்டி அல்லோக்கு இதுதான் முதல் பெரிய கதாபாத்திரம். தொடரின் முக்கிய ஸ்டார்ஸ் இவர்கள் இல்லை. அது இந்தத் தொடரை உருவாக்கியிருக்கும் கிரெக் டேனியல்ஸ்தான். ‘தி ஆபீஸ்’, ‘தி சிம்ப்ஸ்சன்ஸ்’ போன்ற பிரபல தொடர்களில் எழுத்து, இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளைப் பார்த்த இவரின் ஐடியாதான் ‘அப்லோடு.’ இந்த சீசனின் சில முக்கிய எபிசோடுகளை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் கிரெக்.

டிஜிட்டல் சொர்க்கம்
டிஜிட்டல் சொர்க்கம்

சேம்பிஞ்ச்

வெஸ்ட்வேர்ல்டு (தொடர்), ஆல்டர்டு கார்பன் (தொடர்)

திரைக்குப்பின்னால்

இந்தத் தொடரில் வரும் டெக் நிறுவனங்களின் பெயர் இன்றைய நிஜ நிறுவனங்களின் பெயர்களை நினைவுபடுத்துவதாக அமைத்திருக்கும். உதாரணத்திற்கு நேதன் செல்லும் டிஜிட்டல் சொர்க்கமான லேக் வியூவை ஹோரைசன் (Horizon) என்ற நிறுவனம் நிர்வகிப்பதாகக் குறிப்பிடுவார்கள். இது வேரைசன் (Verizon) என்ற பிரபல அமெரிக்க டெலிகாம் நிறுவனத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் பெயர்.

ப்ளஸ்

டிஜிட்டல் மயமானாலும் மாறாத சமூக ஏற்றத்தாழ்வு, டேட்டிங் கலாசாரம், உணவு அரசியல் என சீரியஸ் விஷயங்களையும் ஆங்காங்கே இந்த வெப்சீரிஸில் தொட்டுவிடுகிறார்கள். 

டிஜிட்டல் சொர்க்கம்

எதிர்காலத்தில் நடக்கும் கதை என்பதால் கிரியேட்டிவ்வான டெக் ஐடியாக்களும் பிடித்திருக்கிறார்கள். இவை உண்மையாகி எதிர்காலத்தில் இவர்களுக்கு ‘இலுமினாட்டி’ பெயர் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்னொரு முக்கிய ப்ளஸ், நாதன் & நோரா கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் செம ஃப்ரெஷ்.

மைனஸ்

AR, VR போன்ற தொழில்நுட்பங்கள் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட தொழில்நுட்பத்தின் பெயரில் காதில் அவ்வப்போது சுற்றப்படும் பூவைப் பிய்த்து எறிந்துவிடுவார்கள். கதையின் முக்கிய இடத்திற்கே கடைசி சில எபிசோடுகளில்தான் வந்துசேர்கிறார்கள். விறுவிறுப்பாகக் கதைச் சொல்லியிருந்தாலும் இந்த முதல் சீசன் டீஸர் போலவே நமக்குத் தெரிகிறது.

செம லவ் ஸ்டோரி, எபிசோடுக்கு எபிசோடு காத்திருக்கும் ட்விஸ்ட், எதிர்கால டெக் உலகம் என அடுத்த சீசன் எப்போது அப்லோடாகும் எனக் காத்திருக்கவைக்கிறது ‘அப்லோடு.’