Published:Updated:

"நீ பானர்ஜியோ, ஷர்மாவோ இல்ல… மண்டல்… தலித்"- கொங்கனா, அதிதியின் கீலி புச்சி குறும்படம் எப்படி?!

Geeli Pucchi - Ajeeb Daastaans
Geeli Pucchi - Ajeeb Daastaans

கொங்கனாவின் தலித் அடையாளம் தெரிந்ததும் நுணுக்கமாக அவரை விலக்கி வைத்து தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் காட்சிகளிலெல்லாம் ப்ரியாவின் மீதான நம் பிரியத்தைப் பறிபோக வைக்கும்படியான நடிப்பு. வெல்டன் அதிதி!

“எக்ஸலையும் டேலியையும் ஒரு வாரத்தில் என்னால கத்துக்க முடியாதா, அவளை மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டா எனக்கு வேலை கொடுத்துடுவாங்களா, எங்கிட்டயும் டிகிரி இருக்குல்ல?” எனச் சீரும் பாரதியிடம் (கொங்கனா சென்) எதிரிலிருக்கும் வயதான சக தொழிலாளி , “உன் பேருக்கு பின்னால இருப்பது பானர்ஜியோ, ஷர்மாவோ இல்ல. மண்டல்… நாம தலித்” என்கிறார். படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அதன்மூலம் தான் பேசப் போகும் விஷயத்தை நமக்குள் கடத்துகிறார் ‘மாஸான்’ திரைப்படத்தின் மூலம் நம் மனதை ஈர்த்த இயக்குநர் நீரஜ் கைவான்.

ஆந்தாலஜிகள் அணிவகுக்கும் காலத்தில் ஏப்ரலில் ரிலீசான புதுவரவு நெட்ஃப்ளிக்ஸில் வந்துள்ள 'அஜீப் தாஸ்தான்ஸ்'. நான்கு குறும்படங்களைக் கொண்ட இந்த ஆந்தாலஜியில், சாதியும் சாதியமும் ஆண்களைப் போலவே பெண்களின் வாழ்விலும் உளவியலிலும் எப்படிக் கலந்திருக்கிறது என்பதை பிரமாதமாக காட்டியிருக்கும் சற்றே நெடிய (42 நிமிடங்கள்) குறும்படம்தான் கீலி புச்சி (ஈரமான முத்தங்கள்).
Geeli Pucchi - Ajeeb Daastaans
Geeli Pucchi - Ajeeb Daastaans

தொழிற்சாலை ஒன்றில் ஆண்களுடன், அவர்களை விடவும் திறமையாகப் பணிபுரிபவர் கொங்கனா சென். 74% சதவிகித மதிப்பெண்களுடன் பிகாம் முடித்தவள். மொத்த தொழிற்சாலையிலும் வேலை பார்க்கும் ஒரே பெண் அவள்தான். தொழிற்சாலையில் வேலை பார்ப்பதைவிட அதே நிறுவனத்தின் டேட்டா ஆபரேட்டராக அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசைகொண்டவள்.

“டேட்டா ஆப்பரேட்டர் வேலை எல்லாம் காலி இல்லை” என அவளிடம் சொன்ன நிர்வாகம் 'ப்ரியா ஷர்மா'வை (அதிதி ராவ் ஹைதரி) வேலைக்கு அமர்த்துகிறது. இதைக்கண்டு நிர்வாகத்திடம் கேள்வி கேட்கும்போது, “உன்னை சீக்கிரமே ஷிஃப்ட் சூப்பர்வைசர் ஆக்கிடுவேன். உன் சேவை தொழிற்சாலையில்தான் தேவை அதை மட்டும் பாரு” என்கிறார் உயரதிகாரி. அவ்வேலை பாரதிக்கு மறுக்கப்படுவதற்கான காரணமாக, “உனக்கு டேலியும் எக்ஸலும் தெரியாது” என்கிறார் அவர். தன்னிடம் கடுகடுத்த மேனேஜரைப் பற்றி உடன் வேலைபார்க்கும் வயதானவரிடம் பாரதி கேட்கும் கேள்விகள்தான் முதல் பத்தியில் நீங்கள் வாசித்தது.

 “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

தன் சாதி அடையாளம் குறித்த உண்மையை அதிதியிடம் சொல்லியதும் கோக்கப்பட்ட கைகளை அதிதி உருவும் பொழுது கொடுக்கும் ரியாக்ஷனில் தொடங்கி, அடுத்த ஷாட்டில் மேலதிகாரியின் கண்ணாடி அறைக்குள் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குழப்பத்துடன் வெளியில் நின்றபடி பார்க்கும் காட்சியில் அவர் முகத்தில் வந்து மாறும் கலவையான உணர்வுகள்... அத்தனையும் கிளாஸ்! மேலே சொன்னவை எல்லாம் ஒரு சோறு பதம் தான். தன்னை எதனால் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள் என அதிதி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, “அப்போ உனக்கு எக்ஸல் எல்லாம் தெரியாதா?” எனக் கேட்கும் காட்சியில் அவர் முகத்தில் கொப்பளிக்கும் உணர்வுகள்தான் எத்தனை எத்தனை!

Geeli Pucchi - Ajeeb Daastaans
Geeli Pucchi - Ajeeb Daastaans
Jagtesh Kohli/Netflix

தன்னை சீண்டும் உடன் பணிபுரியும் பூபேஷின் முகத்தில் ஆக்ரோஷத்துடன் இடைவிடாமல் குத்தும் காட்சியாகட்டும், வேலை மறுக்கப்பட்டு, அதற்கான காரணமும் நடைமுறை நிதர்சனமும் புரிந்தாலும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்டும் பயனில்லை என்பதை உணர்ந்து இறுகிய முகத்துடன் அதைக் கடக்கும் காட்சியாகட்டும், ஒவ்வொரு ஃபிரேமிலும் தனிமையுடன் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளராக வரும் கொங்கனா சென், தான் ஒரு அபாரமான நடிகை என்பதை மீண்டும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்!

தன்பாலின அடையாளம் குறித்த சிறு குழப்பங்களுடனும், பால்ய சினேகிதி கவிதா பற்றிய நினைவுகளுடனும், தன் மீது உயிராக இருக்கும் கணவனுக்கு தான் தகுந்தவளா போன்ற கேள்விகளுடனும் குழம்பிய பெண் ப்ரியாவாக வரும் அதிதி ராவ் ஹைதரியும் கொங்கனாவிற்குத் தான் சளைத்தவரல்ல எனும்படி நடித்திருக்கிறார். “சீக்கிரமே உன் மாமனார் மடத்தின் தலைமை பூசாரி ஆகிடுவார். அதனால நீ யாரு கூட பேசுற பழகுற என்பதில் கவனமாய் இரு” என எச்சரிக்கும் மாமியார், முட்டை போட்ட கேக்கிற்கு பதில் பர்பியை வெட்டி பிறந்த நாள் கொண்டாடச் செய்யும் கணவன், வேலையே தெரியாவிட்டாலும் உயர் சாதி என்பதால் தன்னை வேலைக்கு எடுத்திருக்கும் உயரதிகாரி என குடும்பமும் சுற்றமும் சமூகமும் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றதோ அதற்கேற்றபடி நட(டி)க்கும் டிபிக்கல் ஷர்மா வீட்டு மருமகளாக அத்தனை பொருந்திப் போகிறார் அதிதி.

OTT கார்னர்

கொங்கனாவின் வீட்டிற்கு வந்து, ”கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறை சிக்கன் சாப்பிடுறேன்” என முகத்தில் குழந்தைத்தனமும், பீறிடும் உற்சாகமுமாக முன்பாதியில் இருப்பவர், கொங்கனாவின் தலித் அடையாளம் தெரிந்ததும் நுணுக்கமாக அவரை விலக்கி வைத்து தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் காட்சிகளிலெல்லாம் ப்ரியாவின் மீதான நம் பிரியத்தைப் பறிபோக வைக்கும்படியான நடிப்பு. வெல்டன் அதிதி!

Geeli Pucchi - Ajeeb Daastaans
Geeli Pucchi - Ajeeb Daastaans

“இந்த டேபிள் மேல உட்கார்ந்து நம்மைச் சாப்பிட அனுமதிச்சவங்க டேபிளில் உட்கார்ந்து நம்மை வேலை பார்க்க விட மாட்டாங்க”, “அவங்க எதிர்பார்க்கிறது எல்லாம் கத்துக்கிட்டாலும் அவங்க உனக்கு அந்த வேலையைக் கொடுக்க மாட்டாங்க” என ஒவ்வொரு வசனங்களும் ஒடுக்கப்பட்டோரின் வலியைப் பதிவுசெய்கின்றன.

தகுதிகள் இருந்தும் தலித் என்ற காரணத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், உயர் சாதியினராக இருப்பதால் பலருக்கும் பல வாய்ப்புகள் ஒரு நிறுவனத்தில் எளிதாக அமைவதாகவும் விரியும் திரைக்கதையில் “அது எப்படி சாத்தியம்?” என சில கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன. உயர் சாதி என்ற ஒற்றை விஷயத்திற்காக எந்த வேலையும் தெரியாதவரை ஒரு நிறுவனம் வேலைக்கு எடுக்குமா என்பதில் தொடங்கி சில கேள்விகள் எழாமல் இல்லை.

ஆனால், நடைமுறையில் இருக்கும் தலித்துகளுக்கு எதிரான உயர்சாதியினரின் மன ஓட்டத்தையும், அவர்கள் தூக்கி சுமக்கும் சாதித் திமிரையும் பெண்களின் பார்வையில் மிக நுட்பமாக அணுகி அதை ஒரு தரமான படைப்பாகக் கொடுத்ததற்காக ஏராளமான கீலி புச்சிகளை இக்குறும்படத்திற்குக் கொடுக்கலாம்!
அடுத்த கட்டுரைக்கு