
WEB SERIES
வரலாறு எழுதப்படுகிறது... வெற்றியாளர்களுக்கே உரிய திரித்தலுடன்! ‘வாட்ச்மென்’ சொல்லும் அமெரிக்க வரலாறு சற்றே வித்தியாசமானது. மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைவிட மாற்றி எழுதப்பட்டிருக்கிறது எனலாம். வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்குமான (1955-1975) போரில் வியட்நாம் வென்றதுதான் உலக வரலாறு. `வாட்ச்மென்’ அந்த வரலாற்றைப் புனைவாகத் திருத்தி எழுதுகிறது. இங்கே வியட்நாம் அமெரிக் காவின் 51-வது மாகாணம். ராபர்ட் ரெட்ஃபோர்ட் அமெரிக்க அதிபர். முகமூடி அணிந்த சூப்பர் ஹீரோக்களும் இந்தக் கதையில் உண்டு; அவர்களைச் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கிய ‘நீதிடா நேர்மைடா’ நிகழ்வுகளும் உண்டு. ஒருகட்டத்தில் சூப்பர் ஹீரோக்களை அடக்கிய காவல்துறையினரே தங்களைக் காத்துக்கொள்ள முகமுடி அணியும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமாக ஒருவன் இருக்கிறான். அவன், ஜான் ஆஸ்டர்மேன்; டாக்டர்.மேன்ஹேட்டன் என்று அழைக்கப்படும் நீல நிறக்கடவுள்.
இந்த ஜான் ஆஸ்டர்மேன் எப்படி நீலக் கடவுளானான், அவனின் சக்திகள் என்னென்ன? இந்தக் கேள்விகள் சுவாரஸ்யம் கிளப்பினாலும் இதை மறக்கடிக்க வைத்து நம்மை ஈர்ப்பது என்னவோ ஜானின் காதல் கதைதான். ஜானைத் தாண்டி இந்தக் கதையின் ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கும் தொடர்பாக இருக்கும் ஒருவர் வில் ரீவ்ஸ் எனப்படும் ‘ஹூடட் ஜஸ்டிஸ்’ (Hooded Justice). ஜானுடைய காதல் மனைவியின் தாத்தா. மாற்றி எழுதப்பட்ட அமெரிக்க வரலாற்றின் முதல் சூப்பர்ஹீரோ. டாக்டர்.மேன்ஹேட்டனான ஜான் இவரை இயக்குகிறானா அல்லது இவர் அந்தக் கடவுளை வைத்துத் தன் காரியங்களைச் சாதித்துக்கொள்கிறாரா? இரண்டுமே உண்மைதான்!

ஜிக்ஸா புதிர் விளையாட்டு தான் ‘வாட்ச்மென்’ திரைக்கதை எனலாம். மறைந்திருக்கும் பெரியதொரு காட்சியைப் புரிந்துகொள்ள முதலில் ஓரத்திலிருந்து விளை யாட்டைத் தொடங்குவது போல, எங்கேயோ ஆரம்பிக்கும் கதைக்களம் எதை எதையோ தொட்டுவிட்டு இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான சயின்ஸ் ஃபிக்ஷன் காதல் அத்தியாயத்துடன் முதல் சீசனை முடித்துக்கொள்கிறது. புதிரின் மொத்தப் படமும் நமக்குப் புலப்பட்டதும் தோன்றும் விமர்சன எண்ணங்கள் அவரவர் அகநிலைகளைப் பொறுத்தது.
ஓக்லஹோமாவின் துல்சா நகரம்தான் பிரதான கதைக்களம். அங்கு நடந்த இனக்கலவரத்திலிருந்து (நிஜ வரலாறு) தன்னைக் காத்துக்கொள்ள மரப்பெட்டிக்குள் உடலைக் குறுக்கிக்கொண்டு, இருந்த இடத்தை விட்டே ஓடும் ஒரு சிறுவன், தன்னுடைய தள்ளாத வயதில் எப்படி அதே இடத்திற்கு மீண்டும் வந்து அதற்காகப் பழிதீர்த்தான் என்று ஒரு கதைக்களம். காலம் என்ற கோட்பாட்டையே உடைத்தெறிந்து முக்காலங்களையும் இக்கணமே உணரும் ஆற்றல் பெற்ற ஜான் எனும் கடவுளனுக்குள் பூக்கும் காதலும், அதற்காக அவனும் அவனின் காதலியும் போகும் எல்லைகளும் ஒரு கதைக்களம். ஒரு காலத்தில் சூப்பர்ஹீரோவாக இருந்து இன்று தன் டெக்னிக்கல் அறிவின் மூலம் உலகையே சோதனை எலியாக்கி சாகசங்கள் செய்யும் அட்ரியன் வெயிட்டின் அடாவடித்தனம் ஒரு கதைக்களம்.

இப்படி எண்ணற்ற கதாபாத்திரங்கள், அவரவருக்கு ஒரு லட்சியம் என எல்லாவற்றையும் தெளிவாக ஒரே திரைக்கதையில் கோத்திருப்பதில் இருக்கிறது இதை உருவாக்கிய டேமன் லிண்டலாஃபின் திறமை. DC காமிக்ஸின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘வாட்ச்மென்’ கதை இதற்கு முன்னமே திரைப்படமாக் கப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியாக விரியும் இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க மூன்று எபிசோடுகள் உண்டு.
Little Fear of Lightning என்ற அத்தியாயம் தொடரின் ஒரு முக்கியத் துணைக் கதாபாத்திரமான லுக்கிங் கிளாஸின் வாழ்வையும், அவனுடைய மாறுவேடத்துக்கான காரணத்தையும் விளக்குகிறது. போர் மற்றும் பேரிடர்களின் கொடுமைகளைச் சந்தித்த ஒரு சிறுவனின் எண்ண ஓட்டங்கள், அவன் பெரியவனான போதும் விட்டுவிடாத அந்த அச்சம் எனத் தெளிவாகப் பதிவு செய்து நமக்கு திகில் ஏற்றுகிறது.
This Extraordinary Being முழுக்க முழுக்க ஏஞ்சலா ஏபாரின் தாத்தா ‘வில்’லின் வாழ்வை எடுத்துரைக்கிறது. போலீஸாகவே இருந்தாலும் கறுப்பராக இருப்பதால் வில் சந்திக்கும் கொடுமைகள் எப்படி அவரை ‘ஹூடட் ஜஸ்டிஸ்’ என்ற சூப்பர்ஹீரோவாக உருமாற்றுகிறது என்ற விளக்கம் சிறப்பு. அதை நேரடியாக ப்ளாஷ்பேக் என்று முறுக்கு சுற்றாமல், பேத்தி ஏஞ்சலாவே தாத்தா வில்லின் பார்வையில் நிகழ்வுகளைப் பார்ப்பதாய் திரைக்கதை அமைத்தது சுவாரஸ்யமிக்க உத்தி!
A God Walks into Abar என்ற எபிசோடு மற்றொரு ‘வாவ்’ போடவைக்கும் திரைக்கதை உத்தியைப் பயன் படுத்துகிறது. மேன் ஹேட்டன் எனும் ஜான் அடிப் படையில் காக்கவும், அழிக்கவும், உருவாக்கவும் வல்லமை களைப் பெற்றுவிட்ட கடவுளன். அவனுடைய முக்காலத்தை அவனால் எப்போதுமே உணர முடியும். அவனுக்கு ‘Now’ என்ற பதமே கிடையாது. இப்படிப்பட்ட ஒருவனின் காதல் கதையின் டைம்லைனை வெறும் இருவருக்கிடையே நடக்கும் உரையாடலை வைத்து மட்டுமே விளக்கும் இந்த எபிசோடு ஒரு சுவாரஸ்யத் திரைக்கதையை எப்படி அமைக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
HBO-வின் தயாரிப்பான இதை ஹாட்ஸ்டாரில் ரசிக்கலாம்.