ஷக்தி சேஷாத்ரிக்கு எதுவுமே தான் கனவு கண்டதுபோல நடக்கவில்லை. தன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ ஒருவரின் பிடியிலேயே, கட்டுப்பாட்டிலேயே அவரின் எதிர்காலத்துக்கான முடிவுகள் இருக்கின்றன. இப்படியாக ஷக்தியின் வாழ்க்கைக் கதை `குயின்' வெப் சீரிஸில் விரிகிறது. வெளியுலகத்துக்கு ஒரு திறமையான நடிகையாகவும், 70'களின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் அறியப்பட்ட ஷக்தியின் அறியப்படாத பக்கங்கள் அத்தனை இனிமையானதாக இல்லை. அந்தப் பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த `குயின்'.

நீண்டகாலமாக மக்கள் மனதில் ஆணித்தரமாக நிலைத்து நிற்கும் அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து புனைவாகத் தழுவி ஒரு படமாகவோ தொடராகவோ உருவாக்கும்போது, பார்வையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதில் அதிகபட்சமாக மெனக்கெடவேண்டியிருக்கும். கெளதம் மேனின் `குயின்' படக்குழு அதையும் தாண்டிய மெனக்கெடல்களை முன்னெடுத்திருக்கிறது. அது, திரைக்கதை எழுதுவதிலிருந்தே தொடங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தபின், கட்சியின் பிளவு, அதைத் தொடர்ந்து இணைப்பு, தேர்தலில் போட்டியிட்டு முதல்வரானது, இரும்புப் பெண்மணியானது என ஊரறிந்த கதைகளை எல்லாம் திரைக்கதையில் தவிர்த்திருக்கிறார்கள். இதுவே, அதன் முதல் பலம். பள்ளியில் முதன்மையான மாணவி, வழக்கறிஞராகும் கனவு கண்ட சிறுமியின் பாதை எப்படியெல்லாம் மாறி, அரசியலின் படிக்கட்டுகளுக்கு அவரை நகர்த்திச் சென்றது என்கிற கதையை மட்டும் இந்த சீஸனில் காட்சிப்படுத்தியிருக்கிறது, `குயின்'.
`நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் உளவியலின் ஒரு முக்கிய கோட்பாட்டை மேற்கோள்காட்டியிருப்பார் கெளதம். ஒருவரின் அடிப்படை மனப்பான்மையும், மன இயல்பும் பள்ளிப்பருவத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. `குயின்' திரைக்கதையும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு, பேச்சாற்றல் என எல்லாவற்றிலும் 16 வயதிலேயே சிறந்து விளங்குகிறார் ஷக்தி. அந்த ஆற்றலைத் தனக்கே உரிய ஆற்றலாக மாற்றி நடித்திருக்கிறார் அனிகா.
ஒவ்வொரு காட்சியும் ஷக்தி முதல்வராக இருந்தபோது அளிக்கும் பேட்டியொன்றின் பின்னணியில் நிகழ்கின்றன. அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் ஷக்தியின் கடந்த காலத்தை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. அப்படியே அரசியல் நோக்கிய அவர் பயணத்தின் கதை நமக்குச் சொல்லப்படுகிறது. ரேஷ்மா கட்டாலா எழுதியிருக்கும் இந்தத் திரைக்கதை வடிவம்தான், ஷக்தியின் கதாபாத்திரத்தைத் திடமாக நிறுவ உதவுகிறது. தான் நினைத்தபடி வாழமுடியாத பெண்ணாக இருந்தாலும், ஷக்தியின் கால்தடம் பதிந்த திசை எல்லாவற்றிலும், துறைகள் எல்லாவற்றிலும் அவர் உச்சத்தையே தொடுகிறார்.

இப்படி திரைக்கதை நான்-லீனியர் முறையில் பயணிப்பதால் ஷக்தியின் ஒவ்வொரு முடிவுக்குமான பின்னணி காரணங்கள் எல்லாம் நம்மை சர்ப்ரைஸ் செய்கின்றன. கெளதம் மேனன், பிரசாந்த் முருகேசன் என இரு இயக்குநர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியிருந்தாலும், இருவரின் பாணியும் திரைக்கதையோடு மட்டுமே ஒருங்கிணைந்திருப்பதால், ரேஷ்மாவின் பாணியே மேலோங்கியிருக்கிறது. அதனால், ஷக்திக்கும் இதில் அவ்வப்போது வாய்ஸ் ஓவர் இருக்கிறது. அதுவும் சரியான இடத்தில் இருக்கிறது!
"நீங்கள் ஸ்டியரிங்கைக் கட்டுப்படுத்துகிறீர்களா அல்லது வேறொரு ஓட்டுநரால் அழைத்துச் செல்லப்படுகிறீர்களா என்பதில்தான் ஒரு பயணம் உங்களுக்கானதா இல்லையா என்பதே இருக்கிறது"ஷக்தி நேர்காணலில் கூறும் பதில்.
இப்படி மற்றவர்களின் பயணத்தில் முதல் பயணியாக இருக்கும் அவர், இறுதியில் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறார். தன் வாழ்க்கையைத் தனக்கான பயணமாக மாற்றிக்கொள்கிறார். இந்தப் பயணத்தில் வளரிளம் பருவ ஷக்தி, சினிமாவில் எதிர்கொள்ளும் சிக்கல்களே அவரின் எதிர்காலத்துக்கான வடிவத்தை முடிவுசெய்கிறது. இந்த வளரிளம் பருவ தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சனா அந்த வயதுக்கான மனச் சலனம், ஈர்ப்பு என எல்லாவற்றையும் தத்ரூபமாக நடிப்பில் வெளிகாட்டியிருப்பதே இந்தத் ஒட்டுமொத்த தொடரின் சிறப்பம்சம்.

ஆதிக்கம் செய்யும் ஆண்கள் ஒரு பக்கம், தாய், தோழிகள் என நம்பிக்கைத் துரோகம் செய்யும் பெண்கள் மறுபக்கம் என ஷக்தி வாழ்வில் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் அவ்வளவு நேர்மையானவர்கள் இல்லை. வெறும் சுயநலமானவர்கள். ஆனாலும், இயக்குநர் ஶ்ரீதர் வாசுதேவன், சிஸ்டர் ஃப்ளாவியா என தன் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள, தன் வாழ்வின் இக்கட்டான காலங்களில் தன்னைத் தாங்கிப் பிடித்தவர்கள் இருந்ததையும் நினைவுபடுத்துகிறார்.
அந்த அன்பே ஷக்தியை ஒவ்வொரு முறையும் உந்தி முன்னேற வைத்திருக்கிறது. `குயினி'ன் திரைக்கதை, இதை நிறுவும் விதமும் அத்தனை அழகு. ஒவ்வொரு முறை எதிர்மறையின் உச்சக்கட்டத்தைத் திரைக்கதை தொடும்போதும் அடுத்த சில நிமிடங்களில் ஃப்ளாவியா அல்லது ஶ்ரீதரின் கதாபாத்திரம் தோன்றி ஷக்திக்கும், பார்வையாளர்களுக்கும் நேர்மறை ஆற்றலைக் கடத்தி மேஜிக் செய்கின்றன.

எல்லா முறையும் வாழ்க்கை நம்மைச் சோதிப்பதில்லை. அந்த சோதனைகள் எல்லாம் பின்னாளில் என்றோ ஒருநாள் நம் கைகளுக்கு ஸ்டியரிங் வரவிருக்கும் தருணத்துக்கான ஒத்திகைதான் என்கிறது `குயின்'. உதாசீனப்படுத்துபவர்களுக்கும், ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படியொரு காலம் வரும். அந்த நம்பிக்கையை `வீழ்ச்சி', `எழுச்சி' என கடைசி இரண்டு எபிசோடுகளின் வாயிலாக உரக்கச் சொல்கிறது `குயின்' சீரிஸ்.