பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மாய உலகில் ஒரு பயணம்!

மாய உலகில் ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாய உலகில் ஒரு பயணம்!

WEB SERIES

பில்லி சூனியம், டிராகன்ஸ், வித விதமான மான்ஸ்டர்ஸ், அற்புத விளக்கு ஜீனி, மந்திரவாதிகள் என ஒவ்வொரு ஊரிலும் கொட்டிக்கிடக்கும் கற்பனைக் கதைகள் ஏராளம். இந்தக் கற்பனை விஷயங்கள் அனைத்துமே வலம்வரும் உலகம்தான் நெட்ஃப்ளிக்ஸின் ‘தி விட்சர்’ தொடரின் உலகம்.

WEB SERIES
WEB SERIES

1993-ல் போலந்து மொழியில் வெளிவந்தது ‘விட்ச்மின்’(Wiedzmin) புத்தகத்தின் முதல் பாகம். இந்த வரிசையில் வந்த அனைத்துப் புத்தகங்களுமே பெரிய ஹிட். இருந்தும் மொத்த உலகையும் இந்தக் கதைகளுக்குள் இழுத்துவந்தவை ‘தி விட்சர்’ கேம்கள்தான். கேமின் மூன்று பாகங்களுமே அதிரிபுதிரி ஹிட். இதைப் பார்த்த நெட்ஃப்ளிக்ஸ், ‘அதே பதத்துல நமக்கு ஒரு சீரிஸ் பார்சல்’ எனச் சுடச்சுட இந்தத் தொடரை நமக்குப் பரிமாறியி ருக்கிறது.

மூன்று முக்கியக் கதைகளாக இந்தத் தொடரைப் பிரித்துவிடலாம். அமானுஷ்ய மிருகங்களை வேட்டையாடும் அபார சக்திகளைப் பெற்றிருக்கும் ‘விட்சர்’ கேரால்ட் ஆஃப் ரிவியா. இந்தச் சக்திகளை வைத்து, மக்களுக்குத் தொல்லை தரும் மான்ஸ்டர்களை அசுர வேட்டை நடத்தி அதில் பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்திவருகிறான். அடுத்து, நில்ஃப்கார்டு என்னும் படை மொத்தக் கண்டத்தையும் கைப்பற்றிவருகிறது. அதில் அழியும் ஒரு ராஜ்ஜியமான சின்ட்ராவின் இளவரசி சிரில்லா மட்டும் தப்பித்துக் காட்டிற்குள் செல்கிறாள். அடுத்தது, கூன் விழுந்த யேனேஃபர் மந்திர உலகின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்கத் தொடங்குகிறாள். விதி எப்படி இவர்கள் மூவரையும் கட்டிப்போடுகிறது என்பதுதான் ஒன்லைன்.

சமீபத்திய DCEU படங்களில் சூப்பர்மேனாகக் கலக்கிய ஹென்றி கவில் ‘விட்சர்’ கேரால்ட்டாக மிரட்டுகிறார். ஆனால், நடிப்பில் அவரை ஓவர்டேக் செய்கிறார் யேனேஃபராக நடித்திருக்கும் அன்யா சல்கோத்ரா. இந்திய வம்சாவளியான இவர் கூன் விழுந்த பெண்ணாகவும், அழகிலேயே வசியம் செய்யும் மந்திரவாதியாகவும் வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிரில்லாவாக இந்த சீசனில் ஓடி ஒளியும் வேலைதான் என்றாலும் அடுத்தடுத்த சீசன்களைத் தாங்கி நிற்கவேண்டிய கடமை ப்ரேயா ஆலனின் இளம் தோள்களுக்கு. இந்த முக்கிய கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் கவர்வது ஜஸ்கீயர் என்னும் பாடகராக வரும் ஜோயி பேட்டி. படு சீரியஸான தொடரில் சிரிக்கவைக்கும் ஒரே கதாபாத்திரம். இவர் பாடியிருக்கும் ‘Toss a coin to your witcher’ பாடல்தான் விட்சர் ரசிகர்களின் தற்போதைய ரிங்டோன். நடிப்பு மட்டுமல்லாமல் டெக்னிக்கலாகவும் செம ஸ்ட்ராங் இந்த விட்சர். குறிப்பாக வாள் சண்டை காட்சிகள் எல்லாம் வெறித்தனம். ஆனால் VFX சில இடங்களில் சொதப்புகிறது.

HBO-வின் கேம் ஆஃப் த்ரோன்ஸின் அபார வெற்றிக்குப் பிறகு அனைத்து நிறுவனங்களுமே அந்த உயரத்தைத் தொட பல முயற்சிகளை எடுத்துவருகின்றன. போர், காதல், காமம், மாயாஜாலம் என அனைத்தும் இருக்கும் களமாக ‘தி விட்சர்’ இருந்ததால், அதைச் செய்ய நெட்ஃப்ளிக்ஸுக்கு இந்தத் தொடர் சரியான சாய்ஸானது.

மாய உலகில் ஒரு பயணம்!
மாய உலகில் ஒரு பயணம்!

இதில் டிராகன்கள்கூட உண்டு. இருந்தும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரூட்டை எடுக்காமல் வேறு திசையில் பயணம் செய்கிறான் விட்சர். இந்தத் தொடரின் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே அதுதான்.

மேலே குறிப்பிட்ட கதைகள் அனைத்துமே அதற்கெனத் தனி டைம்லைன்களைக் கொண்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கதை 100 வருடங்களுக்கு முன் தொடங்கும், இன்னொரு கதை 50 வருடங்களுக்கு முன் தொடங்கும், மற்றொரு கதை 10 வருடங்களுக்கு முன் தொடங்கும். இந்த டைம்லைன்கள் அனைத்தும் இந்த சீசனின் இறுதி எபிசோடுகளில் சந்தித்துக்கொள்ளும். சந்தித்துக்கொள்ளும் இடங்கள் அனைத்தும் வேற லெவல். ஆனால், விட்சர் பற்றி எதுவும் தெரியாமல் முதல்முறை பார்ப்பவர்களுக்கு இந்த டைம்லைன்கள் புரிவதற்குள்ளாகவே முதல் சீசன் முடிந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் விட்சர்களுக்கும், மந்திரவாதிகளுக்கும் விரைவில் முதுமை வராது. ஒவ்வொரு டைம்லைனிலும் நடக்கும் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கிடையே பல வருட இடைவெளி இருக்கிறது. ஆனால், பார்ப்பவர்களால் அதை உணரவே முடியாது. முதல் சீசனின் மொத்த எட்டு எபிசோடுகளில் கிட்டத்தட்ட 65 வருடக் கதை சொல்கிறார்கள். இதனால் வெளியான சில நாள்களிலேயே அதிக ரிப்பீட் ஆடியன்ஸ் கொண்ட தொடராக இது மாறியிருக்கிறது.