நிழலில் ஒளிந்திருக்கும் நிஜம்! -`Breathe: Into the shadows' வெப்சீரிஸ்... ஒரு பார்வை! #MyVikatan

உளவியல் த்ரில்லராக பல இடங்களில் சாதாரணமாக நம்மைக் கேள்விக்கு உள்ளாக்கவும் ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
2018-ம் ஆண்டு வெளிவந்த Breathe வெப் சீரிஸின் தொடர்ச்சியாகத் தற்போது வெளிவந்துள்ளது Breathe: Into the Shadows.
காவல்துறை அதிகாரியாக வரும் அமித்ஷாவைத் தவிர மற்றபடி நடிகர்கள், கதை உள்ளிட்ட அனைத்துமே முதல் சீரிஸில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.
கதை என்ன?
ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரின் குழந்தையும், மருத்துவ மாணவி ஒருவரும் ஒரே நாளில் காணாமல் போகின்றனர்.
நீண்டகாலமாக அவர்கள் இருவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு அந்த மனோதத்துவ நிபுணருக்கு அவருடைய குழந்தை கடத்தப்பட்டதாக ஒரு தகவல் கிடைக்கிறது.

குழந்தையை உயிருடன் மீட்க வேண்டுமானால், அந்த மனோதத்துவ நிபுணர் சில கொலைகளைச் செய்ய வேண்டும். அதிலும் கடத்தல்காரன் கூறக்கூடிய வகையில் குறிப்பிட்ட சில மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களைக் கொல்ல வேண்டும். மேலும், கொலை செய்யும்போது வீடியோ பதிவு செய்து வெளியிட வேண்டும் எனக் கடத்தல்காரன் நிபந்தனை விதிக்கிறான்.
கடத்தல்காரனின் நிபந்தனைப்படி, ராவணனின் 10 தலைகளாகக் கூறப்படும் கோபம், காமம் உள்ளிட்ட உணர்ச்சிகளைக் கொலை செய்ய வேண்டிய நபர்களிடம் தூண்டிவிட்டு, அவர்களை மனோதத்துவ நிபுணரான அபிஷேக் பச்சனும் அவரின் மனைவியான நித்யா மேனனும் தொடர் கொலைகளைச் செய்கிறார்கள். இந்தக் கொலைகளைத் துப்பறியும் அதிகாரியாக அமித்ஷா வருகிறார்.
இறுதியாகக் கொலைகாரன் மற்றும் கடத்தல்காரன் யார்? கொலைகளுக்கான மேட்டிவ் என்ன? கொலைகாரன் பிடிபட்டானா, இல்லையா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கும், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்து,உளவியல் ரீதியான ஒரு பிரச்னையைக் கூறி கதை முடிகிறது.
நடிகர்கள் யார்?
மனோதத்துவ நிபுணர் Dr.அவினாஷ் சபர்வாலாக அபிஷேக் பச்சன், அவரின் மனைவி ஆபா சபர்வாலாக நித்யாமேனன் மற்றும் காவல் அதிகாரி கபீர் சாவந்தாக, அமித்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மயங்க் சர்மா இயக்கத்தில், எஸ்.பரத்வாஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை அலோகானந்தா தாஸ்குப்தா.

ப்ளஸ் என்ன?
# அபிஷேக்பச்சன் மற்றும் நித்யா மேனனின் எதார்த்த நடிப்பு.
# சுவாரஸ்யமூட்டும் துப்பறியும் காட்சிகள்.
# அவ்வப்போது தலைகீழ் காலவரிசையில் (Reverse Chronology) வரும் விறுவிறுப்பான திரைக்கதை.
# கொலைகளுக்கு திட்டமிடும் புதுமையான காட்சிகள்.
# ஆறாவது எபிசோடில் தொடங்கும் ட்விஸ்ட்.
# பல புதிரான புராண புனைவுகள் (Mythical Fiction)
# பல எபிசோடுகள் மற்றும் தொடர் முடிவு கிளிஃப்ஹேங்கர் (Cliffhanger) வகையில் அமைந்திருப்பது.
# எஸ்.பரத்வாஜின் கேமராவொர்க் தேவையான இடங்களில், போதுமான டார்க் டோனை (Dark tone) வெளிப்படுத்தி இருக்கிறது.
# சில காட்சிகளின் தொனியும் நடிப்பும் பார்க்க சிக்கலான ஒன்றாகப் பாசாங்கு செய்கின்றன. ஆனால், கதையில் எந்த சிக்கலும் இல்லை.
# கேள்வியுடன் முடியும் கிளைமாக்ஸ்.
மைனஸ் என்ன?
# புதுமைகள் குறைந்த, வழக்கமான ஓடுதல் - துரத்துதல் வகையிலான (Cat & Rat) கதை.
# பல படங்களில் பார்த்துப் பழகிய பழைய க்ளீஷேவான (Cliche) ப்ளாஸ்பேக்.
# ஒரு பொருள் குறித்த பலரது படைப்புகள் (Anthology) போன்ற எபிசோடுகள் அமைப்பு.
# ஏற்கெனவே ரசிகர்களுக்கு நன்கு பழக்கமான பல ஆளுமை (Multiple Personality) சார்ந்த வியாதி.
# ஊகிக்கக் கூடிய வகையிலான கதையின் முடிவு.

எதில் கிடைக்கிறது?
Breathe - Into the shadows 12 எபிசோடுகளாக Amazon prime இல் கிடைக்கிறது. இந்தி வெப் சீரீஸாக இருப்பினும், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சப்-டைட்டில் கிடைக்கிறது.
பார்க்கலாமா?
உளவியல் த்ரில்லராக பல இடங்களில் சாதாரணமாக நம்மைக் கேள்விக்கு உள்ளாக்கவும் ஆச்சர்யப்படுத்தவும் செய்கிறது Breathe - Into the shadows. புதிர் மற்றும் சைக்கலாஜிகல் த்ரில்லர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.
அடுத்த சீஸன் உண்டா?
பாகுபலி முதல் பாகம் கேள்வியுடன் முடிந்தது போன்று, C-16 என்று அபிஷேக் ரகசியக் குறிப்பு அளிக்கும் பதிலற்ற கேள்வியுடன் சீஸன் 2 முடிவதால் நிச்சயம் 3 வது சீஸன் உண்டு என்று நம்பலாம்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.