Published:Updated:

சிம்பிள் சயின்ஸில் ஒரு ஏலியன் கதை..! - `ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீஸன் 3

Stranger Things
Stranger Things

சிம்பிள் சயின்ஸ்... நிறைய காதல்... நிறைய நிறைய நட்பு... இப்படி மனிதனின் அடிப்படைத் தேவைகளை வைத்து அழகாய் வெளிவந்த ஓர் சீரிஸ்தான் 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்'.

இதுவரை இரண்டு சீஸன்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் இதன் மூன்றாவது சீஸன் வெளியாகியுள்ளது. அதைப் பற்றியும் மொத்த ’ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸ் பற்றியும் இக்கட்டுரையில் பார்ப்போம்!

'கடவுள் யார் அது, யார் பார்த்தார் அதைக் கண்ணில் காட்டியது சினிமாதான்' என்று 'குசேலன்' படத்தின் ஒரு பாடல் வரி உண்டு. உண்மைதான். அந்தளவிற்குதான் விஷுவல் மீடியாவின் வீச்சு, தற்போது வளர்ந்து நிற்கிறது. அதுவும் மனித உணர்ச்சிகளைத் தூண்டும் சில சினிமாக்களைப் பார்க்கும்போது நம்மை மீறி அதோடு ஒன்றிவிடுகிறோம். இந்த உத்தியைப் பயன்படுத்தி, நீண்ட நாள் நம்மோடு பயணிக்க வைக்க ஆரம்பிக்கப்பட்டதுதான், சீரிஸ். பல்வேறு சீஸன்கள், பல்வேறு எபிசோடுகள் என அதற்குள் குடியேறி வாழ்ந்து வருகிறோம். ஆங்கிலத்தில் 'ஃபீல் குட்' என்று ஓர் வார்த்தை உண்டு. இதைச் சொல்லும்போதே நமக்குள்ளே ஒரு 'பாசிட்டிவ் வைப்' வந்துவிடும். அப்படியான ஒரு சீரிஸ்தான் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'.

நான்கு நண்பர்கள். நால்வரும் ஒரே ஸ்கூலில் படித்து, சேர்ந்தே சில பல சேட்டைகள் செய்து, வீக்கெண்ட் வந்துவிட்டால் 'டன்ஜன்ஸ் அண்ட் டிராகன்ஸ்' என்ற கேமை விளையாடும் ஜிகிடி தோஸ்த்துகள். ஒருத்தன் பெயர் மைக் வீலர், இன்னொருவன் பெயர் டஸ்டின் ஹெண்டர்சன், மூன்றாவது ஆள் பெயர் லூக்கஸ் சிங்க்ளேர், கடைசி ஆள் பெயர் வில் பையர்ஸ். ஒவ்வொருவனும் ஒவ்வொரு ரகம். இந்தக் பொறுத்தவரை 'அப்சைடு டவுன்' என்ற ஒரு கான்செப்ட் உண்டு.

உன்னுடைய கதையை நீ ஆத்மார்த்தமாக நம்பினால் அதை முடித்துவிடு!
ஜோய்ஸ் பையர்ஸ்

'தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் போலவே இணையொத்த இன்னோர் உலகமும் உண்டு' என்பதுதான் அந்த கான்செப்ட் தரும் விளக்கம். சினிமா மொழியில் சொல்ல வேண்டுமென்றால் மனிதர்கள் இல்லாத அவ்வுலகில் ஏலியன்ஸ், ப்ரிடேட்டர்ஸ், ஜந்துக்கள் போன்ற உயிரினங்கள் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும். அப்படியான உயிரினங்களுக்கு இந்த சீரிஸில் 'டெமோகார்கன்ஸ்' என்று பெயர். அந்த வித்தியாச உயிரனங்களுக்கு மனிதர்களாகிய நாம் வித்தியாச உயிரினங்கள் அல்லவா. வேற்று உலகைச் சேர்ந்த அந்த டெமோகார்கன்களுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைதான் இந்த சீரிஸின் கதைக்களம்.

விஞ்ஞானத்தில் ஏற்படும் ஒரு மாபெரும் தவற்றால் அந்த பேரலல் உலகத்தின் கதவு திறந்துவிடும். அங்கிருந்து தப்பித்து வரும் அந்த டெமொகார்கன்கள், இந்த நான்கு நண்பர்களில் ஒருவரான வில் பையரஸை அதனுடைய உலகிற்கு தூக்கிச் சென்றுவிடும். டிராப்பில் மாட்டிக்கொண்ட வில்லை மீட்டு மனித உலகிற்குக் கூட்டி வருவதுதான் முதல் சீஸனின் கதை நகர்வு. ஆரம்பத்தில் இந்த நான்கு பேரை முக்கிய கதாபாத்திரங்களாகக் காட்டினாலும், எபிசோடுகள் செல்லச் செல்ல பல்வேறு கதாபாத்திரங்கள் பிரதானமாகக் காட்டப்படும். ஹாப்பர் (போலீஸ் அதிகாரி), ஜோய்ஸ் பையர்ஸ் (வில் பையர்ஸின் அம்மா), எல் (மருத்துவ ஆராய்ச்சியால் டெலிகைனட்டிக் மற்றும் டெலிபதி போன்ற சக்திகளைப் பெற்றவர்), நான்ஸி வீலர் (மைக் வீலன் அக்கா), ஜோனாதன் பையர்ஸ் (வில் பையர்ஸின் அண்ணன்), ஸ்டீவ் ஹாரிங்டன் என இவர்கள்தான் இரண்டு சீஸனின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர மூன்றாவது சீஸனில் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெறுவார்கள்.

Eleven - Maxine
Eleven - Maxine
Stranger Things
ஃப்ரெண்ட்ஸ் பொய் சொல்ல மாட்டாங்க!
எல்
ஆமா. ஆனா, பாய் ஃப்ரெண்ட்ஸ் பொய் சொல்வாங்க!
மேக்ஸ்

இரண்டாவது சீஸன், முதல் சீஸனுக்கு அப்படியே நேரெதிர். முதல் சீஸனில் டெமோகார்கன்களிடம் மாட்டிக்கொள்ளும் வில் பையர்ஸ், பல போராட்டங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு மனித உலகிற்கு வந்துவிடுவார். திறக்கப்பட்ட அந்தக் கதவையும் மூடிவிடுவார்கள். ஆனாலும் அந்த ஏலியன்களுடைய ஆக்கிரமிப்பு வில்லை விட்டு நீங்காமல் இருக்கும். வில் பையர்ஸின் உடல் முழுவதும் ஊடுருவும் அந்த டெமோகார்கன், வில்லை தன் வசப்படுத்தி மீண்டும் அந்தக் கதவைத் திறக்க ஆட்டிபடைத்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து வில்லை மீட்டு திரும்பவும் கதவை மூடுவதுதான் இரண்டாம் சீஸன். அடுத்ததாக தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது சீஸனுக்கு வருவோம். 'சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் இடம்' என முத்திரை குத்தி மூடப்பட்ட அந்த ஆராய்ச்சிக் கூடத்தை, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் இராணுவ உதவியோடு மீண்டும் திறக்க முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். இப்படித்தான் மூன்றாவது சீஸன் ஆரம்பமாகும்.

மொத்த 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீரிஸின் மிகப் பெரிய பலம் திரைக்கதை. சில அமானுஷ்யங்களிடமிருந்து நாட்டையும் சூழலையும் காப்பாற்ற, தன் அறிவுக்கும் சக்திக்கும் எட்டிய தூரத்தில் கூட்டணியமைத்து தங்களது பயணத்தை தனித்தனியே மேற்கொள்வார்கள் இந்தச் சிறுவர் சிறுமியர். அப்படி இவர்கள் பயணிக்கும் ஒவ்வொரு பாதையும் ஒவ்வொரு ரகம். வெவ்வேறு அணிகளாக பயணிக்கும் இந்த ஜோடி, க்ளைமாக்ஸில் ஒன்று சேர்ந்துவிடும். இப்படித்தான் மூன்று சீஸனின் திரைக்கதையும் நகரும்.

Robin - Steve - Dustin
Robin - Steve - Dustin
Stranger things

மேலே சொன்ன கதாபாத்திரங்களோடு மேக்ஸ், பில்லி (மேக்ஸின் அண்ணன்), ராபின், எரிக்கா (லூக்கஸின் தங்கை), போன்றவர்களும் இந்த சீஸனில் பிரதான கதாபாத்திரங்களாக இணைவார்கள். ரஷ்ய நாட்டினர் செய்த தவறால் வெளிவந்திருக்கும் அந்த ஏலியன், வில்லை முதலில் ஆக்கிரமித்ததுபோல் பில்லியை மொத்தமாக ஆக்கிரமித்து தன் வசப்படுத்தி வைத்திருக்கும். அழிவை நோக்கி காய் நகர்த்தும் அந்த ஏலியனிடமிருந்து இந்த ஊரை எப்படிக் காப்பாத்துகிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மற்ற சீஸன்களைவிட இந்த சீஸனுக்கு நிறைய விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்தன. காரணம், இதில் எக்கச்சக்க நட்பு, காதல், ஊடல், சண்டை, பாசம், எளிமை என எல்லா வகை உணர்வுகளும் அளவாகவும், அழகாகவும் வொர்க் அவுட் ஆகியிருந்தது. முக்கியமாக லூக்கஸின் தங்கையான எரிக்கா இதில் செய்யும் சேட்டைகளும், வெளிக்காட்டும் எக்ஸ்ப்ரெஷன்களும் உச்சம். இதுவரை மறைந்து மறைந்து காதலித்த மைக் - எல் ஜோடி, இதில் வெளிப்படையாகவே காதலித்து வருவார்கள். இருவருக்கும் இடையே சண்டை வந்த பின் மைக்கை விட்டு பிரிந்துவிடும் எல், ஸோடு சேர்ந்து ஊர் சுற்றுவார். 'நண்பர்கள் பொய் சொல்ல மாட்டாங்களே' என எல் கேட்க, 'ஆமா, ஃப்ரெண்ட்ஸ் சொல்ல மாட்டாங்க. ஆனா, பாய் ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க' என்ற வசனங்களெல்லாம் அதகளம். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் சீரிஸ் முழுவதுமே அமைந்திருப்பதால் ஒரு பக்கா பேக்கேஜாக இந்த சீஸன் அமைந்திருந்தது.

Hopper - Eleven
Hopper - Eleven
Stranger Things

ஒரு படைப்பை முடிப்பதுதான் படைப்பாளிக்கு இருக்கும் உச்சபட்ச சவால். இந்த சீஸனுடைய க்ளைமாக்ஸ்தான் ஒட்டுமொத்த சீஸனுடைய டாப் நாச்! எல்லின் வளர்ப்புத் தந்தையான ஹாப்பர், ரஷ்ய ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டும் முயற்சியின் போது தன் உயிரை மாய்த்துக்கொள்வார். அதன் பின்னர், எல்லுக்காக ஒரு லெட்டர் மட்டும் எழுதி ஜோய்ஸிடம் கொடுத்துச் சென்றிருப்பார். இந்த சீரிஸின் மொத்த கதாபாத்திரத் தேர்வும் கணக்கச்சிதமாக இருந்தாலும் ஹாப்பரிடம் ஒரு தனித் தன்மையிருக்கும். விரைப்பான உடல்மொழி, சிரிக்காத உதடுகள், எந்நேரமும் முறைத்துக்கொண்டே இருக்கும் முகபாவனை... இதையெல்லாம் பார்த்துப் பழகி க்ளைமாக்ஸில் அவர் குரலில் வாசிக்கப்படும் அந்த லெட்டர் சீனில் பார்த்த அனைவரின் மனமும் புதைந்திருக்கும். அந்த அளவிற்கு உருக்கம் நிறைந்த லெட்டர் அது!

இருப்பினும், ஹாப்பரின் சாவை முழுமையாக காட்டாததால் நிறைய ஃபேன் தியரிக்களை அள்ளி வீசுகிறார்கள் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகர்கள். நான்காவது சீஸனில் நடக்கவிருப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு