Published:Updated:

`` `குயின்' வெப் சீரிஸ்ல ஜெயலலிதா இல்லை... ஆனா ஜெயலலிதா மாதிரி!" - இயக்குநர் பிரசாத் முருகேசன்

குயின், பிரசாத் முருகேசன்,

`குயின்' வெப் சீரிஸ் குறித்து அதன் இயக்குநர் பிரசாத் முருகேசன் பேட்டி!

`` `குயின்' வெப் சீரிஸ்ல ஜெயலலிதா இல்லை... ஆனா ஜெயலலிதா மாதிரி!" - இயக்குநர் பிரசாத் முருகேசன்

`குயின்' வெப் சீரிஸ் குறித்து அதன் இயக்குநர் பிரசாத் முருகேசன் பேட்டி!

Published:Updated:
குயின், பிரசாத் முருகேசன்,

`கிடாரி' படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான இயக்குநர், பிரசாத் முருகேசன். அதன்பின் இவர் எந்தப் படமும் இயக்கவில்லை. `கிடாரி' விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றபோது, இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, கெளதம் மேனனுடன் இணைந்து `குயின்' வெப் சீரிஸை இயக்கி முடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த வெப் சீரிஸ் அனுபவம்குறித்து பிரசாத்திடம் பேசினோம்.

``உங்களுக்கும் கெளதம் மேனனுக்கும் எப்படி அறிமுகம்?"

``நான், `ராஜதந்திரம்' படத்துல எக்ஸிக்யூடிவ் புரொடியூசரா வேலைபார்த்தேன். இந்தப் படத்தைத் தயாரிச்சவர், என் நண்பர் செந்தில் வீராசாமி. எல்லோருக்கும் தெரியிற மாதிரி சொல்லணும்னா, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தோட வில்லன். அவர் தயாரிப்புல நான் ஒரு படம் இயக்குற மாதிரி இருந்தது. அவர்கிட்ட கதை சொல்லப்போய்... பழக்கமாகி, நண்பர்களானோம். அதுக்குள்ள `கிடாரி' வாய்ப்பு வந்ததனால இங்கே வந்துட்டேன். `ராஜதந்திரம்' பண்ணும்போது கிரியேட்டிவ் புரொடியூசரா கெளதம் மேனன் சார் உள்ள வந்தார். அப்படித்தான் எனக்கும் கெளதம் சாருக்கும் அறிமுகம். `கிடாரி' பார்த்துட்டு பாசிட்டிவ், நெகட்டிவ்னு நிறைய விஷயங்கள் பகிர்ந்துகிட்டார். `கிடாரி' டீம்ல இருந்த நிறைய பேர் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள்தான். `கிடாரி' சிங்கிள் ட்ராக் அவர்தான் ரிலீஸ் பண்ணார். அப்போ, `கிடாரி' படத்தோட பாடல்கள் பிடிச்சு, தர்புகா சிவாவை `எனை நோக்கி பாயும் தோட்டா'ல கமிட் பண்ணார். அப்போதில் இருந்தே எனக்கும் கெளதம் சாருக்கும் நல்ல நட்பு இருக்கு."

``கெளதம் மேனன்கூட சேர்ந்து `குயின்' இயக்கிய அனுபவம் சொல்லுங்க..."

பிரசாத் முருகேசன் மற்றும் குழு
பிரசாத் முருகேசன் மற்றும் குழு

``கெளதம் சாருடைய `ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' நிறுவனமும் எம்.எக்ஸ் பிளேயரும் சேர்ந்து, `குயின்' வெப் சீரிஸை தயாரிக்கிறாங்க. எப்பவும் வெப் சீரிஸுடைய ஸ்கிரிப்ட் ரொம்பப் பெரிசு. அதை, ஒரு இயக்குநர் மட்டும் இயக்குறது ரொம்ப சிரமம். அதனாலதான், வெப் சீரிஸ்களை ரெண்டு மூணு இயக்குநர்கள் சேர்ந்து இயக்குவாங்க. அது மாதிரி கெளதம் சாருக்கு இன்னொரு இயக்குநர்கூட சேர்ந்து இயக்கலாம்னு ஐடியா இருந்திருக்கு. என்னை அவருக்கு நல்லா தெரியும்கிறதுனால என்னைக் கூப்பிட்டார். இந்தக் கதையை ஆங்கிலத்துல எழுதின ரேஷ்மா கட்டாலா, எனக்கு ஸ்கிரிப்டை அனுப்பினாங்க. தவிர, ஒன்றாக என்டர்டெயின்மென்ட்டுடைய தயாரிப்பாளர்கள்ல ரேஷ்மாவும் ஒருத்தர். `நீதானே என் பொன்வசந்தம்' படத்தோட கதாசிரியரும் இவங்கதான். எனக்கும் ரொம்பப் பிடிச்சுப்போய், இந்த சீரிஸை இயக்க ஓகே சொல்லிட்டேன். இதற்கான தமிழ் வசனங்கள் நான் எழுதினேன். மொத்தம் 11 எபிசோடு. கெளதம் சாரும் நானும் எங்களுக்கான போர்ஷன் என்னன்னு பிரிச்சுக்கிட்டு ஷூட்டிங் போனோம். ஒரே நேரத்துல ரெண்டு டீமின் ஷூட்டிங்கும் வெவ்வேற இடத்துல நடக்கும். ரெண்டு பேருமே எல்லா நடிகர்களையும் இயக்குற மாதிரி பிரிச்சிக்கிட்டோம். சில சீன்கள் அவர் விட்டதிலிருந்து நான் எடுக்கிற மாதிரி இருக்கும். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஒரு படம் சேர்ந்து பண்ணலாம்னு எண்ணம் வர்ற அளவுக்கு அருமையான அனுபவமா இருந்தது. இது கெளதம் எடுத்திருக்கார், இது பிரசாத் எடுத்திருக்கார்னு பிரிச்சுப் பார்க்கமுடியாத அளவுக்கு ரொம்ப பிளான் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் வேலையைப் புரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ணோம். அவர் போர்ஷனுக்கு எஸ்.ஆர்.கதிர்தான் ஒளிப்பதிவாளர். என் போர்ஷன்ல மணிகண்டனும் வேல்ராஜும் ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணியிருக்காங்க."

குயின், கெளதம் மேனன்
குயின், கெளதம் மேனன்

``ஜெயலலிதா மாதிரி ஒருத்தருடைய வாழ்க்கையை படமாக்கும்போது ரொம்பக் கவனமா கையாள வேண்டியிருந்திருக்குமே?"

``இதை பயோகிராஃபினு சொல்றதைவிட, ஹிஸ்டாரிக் ஃபிக்‌ஷன்னு சொல்லலாம். வரலாற்றுப் புனைவு இது. வரலாறுகள்ல இருந்து நிறைய கேரக்டர்கள், சம்பவங்கள்னு எடுத்துக்கிட்டு பண்ணியிருக்கோம். இது ஒரு பெண்ணின் ஆசை, கனவு, வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், அதை எப்படி அவங்க கடந்து ஒரு பவர்ஃபுல் பெண்ணா மாறினாங்கன்னு, ஒரு பெண்ணின் வாழ்க்கைல நடக்குற கதைதான் இது. ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதா மாதிரி ஒருத்தருடைய வாழ்க்கை. இதை எல்லாருடைய வாழ்க்கையுடனும் பொருத்திப்பார்க்க முடியும்."

``ரம்யா கிருஷ்ணன் எப்படி நடிச்சிருக்காங்க?"

பிரசாத் முருகேசன்
பிரசாத் முருகேசன்

``ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஷூட்டிங் கேப்ல ஒருத்தர்கிட்ட கூட பேசமாட்டாங்க. ரம்யா கிருஷ்ணன் மேடம் எப்படி நடிப்பாங்கன்னு எல்லோருக்கும் தெரியும். இது, அவங்களுக்கு பெருமைசேர்க்கிற கதையா இருக்கும்னு நம்புறோம். சின்னச் சின்ன முக பாவனைகள், உடல்மொழி எல்லாத்துலயும் தூள் கிளப்பிட்டாங்க. கண் முன்னாடி ஒரு ஆளுமையைக் கொண்டு வர்றதுங்கிறது சாதாரண விஷயம் கிடையாது. அதை ரொம்ப அழகா கொண்டுவந்திருக்காங்க. அவங்களை இயக்கியது எனக்கு நல்ல அனுபவம். கதையில் எழுதப்பட்ட கேரக்டர்தான் எங்களுக்கு ரெஃபரன்ஸ். அவங்களும் அந்த கேரக்டரைப் புரிஞ்சிக்கிட்டு அசத்திட்டாங்க. மத்தபடி, வீடியோவைக் காட்டி இதுமாதிரி பண்ணுங்கன்னு எல்லாம் சொல்லலை. இந்த கேரக்டருடைய சின்ன வயசு போர்ஷன்ல அனிகா நடிச்சிருக்காங்க. டீன் ஏஜ் போர்ஷன்ல அஞ்சனா ஜெயப்பிரகாஷ் நடிச்சிருக்காங்க."

``எம்.ஜி.ஆர் கேரக்டர்ல மலையாள நடிகர் இந்திரஜித் நடிச்சிருக்கார்னு கேள்விப்பட்டோமே?"

``இந்திரஜித் பண்ண கேரக்டரை வரலாற்றுல தடம் பதிச்ச பவர்ஃபுல்லான மனிதர்கள்கிட்ட இருந்து எடுத்துக்கலாம். ஏற்கெனவே சொன்ன மாதிரி, இது பயோபிக் கிடையாது; ஹிஸ்டாரிக் ஃபிக்‌ஷன். இந்தக் கதைக்குள்ள ஒரு பவர்ஃபுல் கேரக்டர் இருக்கு. அதுல இந்திரஜித் நடிச்சிருக்கார். தென்னிந்தியாவுல மிக முக்கியமான நடிகர்கள்ல ஒருவர். இப்போ இருக்கிறதைவிட பெரிய உயரத்துக்குப் போகவேண்டியவர்; நிச்சயம் போவார். ஒளிப்பதிவை புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடிக்கிற திறமையான நடிகர். அவர் நடிச்ச கேரக்டரை ரொம்ப லைவ்லியா கொண்டு வந்திருக்கார். மக்களுக்கும் அந்த கேரக்டர் ரொம்பப் பிடிக்கும்."

``இதுவரைக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாங்கிற பெயரை நீங்க குறிப்பிட்டுச் சொல்லலையே ஏன்?"

கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன்
கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன்

``இந்தக் கதையை யாரையும் குறிப்பிட்டு எடுக்கலை. இந்தக் கதையில, எல்லாருடைய பெயரும் வெவ்வேற பெயர்லதான் இருக்கும். இதைப் பார்க்கும்போது, சில வரலாற்று நாயகர்கள் ஞாபகத்துக்கு வரலாம், சிலருக்கு அவங்கவங்க பர்சனல் வாழ்க்கை கனெக்ட் ஆகலாம். மொத்தம் 11 எபிசோடு. ஒவ்வொரு எபிசோடும் குறைந்தது 40 நிமிடங்கள் இருக்கும். ஒவ்வொரு எபிசோடையும் ஒவ்வொரு படம் மாதிரிதான் எடுத்திருக்கோம். டிசம்பர் 13-ம் தேதி எம்.எக்ஸ் பிளேயர்ல `குயின்' ரிலீஸ் ஆகும்."

`` `தலைவி', `தி அயர்ன் லேடி'னு ரெண்டு படங்கள் தயாராகிட்டு இருக்கு. அதை எப்படிப் பார்க்குறீங்க?"

``அது ரெண்டும் பயோபிக் கேட்டகரில இருக்கலாம். ஆனா, நாங்க கற்பனையா பண்ணியிருக்கோம். ஒரு சாயல் கதைகள், நிறைய இடங்கள்ல வர்றது இயல்புதான். அதை அணுகுறதுலதான் வித்தியாசம் இருக்கும். அவங்க இந்தக் கதையை வேற பார்வையில பார்த்திருக்கலாம். ஒரு விஷயத்தை 100 விதமா பார்த்தா 100 கதை. அந்த 100 கதையில என்னுடைய கதைதான் நல்லாயிருக்குனு நான் சொல்ல முடியாது. எங்க வெப் சீரிஸ் மாதிரி அந்தப் படமும் அர்த்தமுள்ளதா இருக்கும்னு நம்புறேன்."

``ஆதித்யா பாஸ்கரை வெச்சு நீங்க பண்ற படத்துக்கான வேலைகள் எந்த அளவுல இருக்கு?"

``கதை எழுதி முடிச்சுட்டேன். `குயின்' ரிலீஸ் வேலைகள்ல பிஸியா ஓடிக்கிட்டு இருக்கேன். இதை முடிச்சுட்டு அந்தப் படத்துக்கான வேலைகளுக்கு வரணும்."