ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆணாதிக்கத்தாலும் இனவெறியாலும் அடிமைப்பட்டுக்கிடந்த பெண்களுக்கு அவர்களுக்கான உரிமையினைப் பெற்றுத்தர பலர் முனைகிறார்கள்.
1920களில் விதைக்கப்பட்டு, அறுபதுகளில் வேர்விட்டு, எழுபதுகளில் உச்சம் பெறுகின்றன அந்த விதைகள். யார் அதிபர் என்றாலும், இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் என உறுதியாய் நம்பப்படுகிறது. ஆனால், எல்லாம் ஒரு பெண்ணாலேயே அது மாறிப்போகிறது. அமெரிக்கப் பெண்கள் போராடிய சம உரிமைச் சட்டத் திருத்தத்தைப் (ERA Equal Rights Amendment) பற்றிப் பேசுகிறது ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Mrs America என்னும் தொடர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிலிஸ் ஸ்க்லஃப்ளி (Phyllis Schlafly) இந்தச் சட்டத் திருத்தம் குடும்பத்தலைவிகளுக்கு எதிரானது எனத் தீர்க்கமாக நம்புகிறார். பெண்களுக்கு விவாகரத்தின் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள், குழந்தைகள் மீதான உரிமைகள் பறிபோகும் என முன்முடிவுக்கு வருகிறார். குடும்பத்தலைவிகளையும், பணக்காரப் பெண்களையும் தன் பக்கம் இழுக்கிறார். ஆணாதிக்கச் சமூகமும் இதை ரசிக்க ஆரம்பிக்கிறது. பெண்ணியவாதிகள் யாரும் பிலிஸ்ஸை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அது தவறென சில நாள்களிலேயே தெரியவருகிறது. நினைத்ததைச் சாதிக்க எந்த அளவுக்கும் இறங்குவேன் என மாறும் பிலிஸ்ஸை ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகிறார்கள் புரட்சியாளர்கள். 38 மாகாணங்களிலும் இந்தத் திருத்தத்தை வெற்றிபெறச் செய்தால் மட்டுமே, அமெரிக்கா முழுமைக்கும் இது செல்லுபடியாகும். பிலிஸ்ஸின் காய் நகர்த்தலால், அவர் இறக்கும் வரையில் அந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாதபடி பார்த்துக்கொண்டார்.
பிலிஸ்ஸாக வரும் கேட் பிளான்கட் தான் இத்தொடரின் வில்லி, நாயகி எல்லாமே. பிலிஸ்ஸை நகலெடுத்து அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார் பிளான்கட். அதிபர் தேர்தலுக்கு முதல் முறையாகப் போட்டியிட்ட ஆப்ரோ அமெரிக்கப் பெண்ணான ஷிர்லி கிறிஸ்ஹோம், பத்திரிகையாளர் குளோரியா, எழுத்தாளர் ப்ரெட்டி ஃப்ரீடன், பெண்ணியவாதி பெல்லா அப்ஸக் என ஒவ்வொரு பெண்ணின் பெயரிலும் விரியும் எபிசோடுகள் அவர்களின் கதையோடு தொடரையும் நகர்த்திச் செல்கிறது.

ஒவ்வொரு ஃபிரேமிலும் அரசியல் பேசுகிறது Mrs America. 70களின் உடைகள், அதற்கேற்ற விக்குகள், ஒப்பனை, வாகனங்கள் எனப் பெரிய பட்ஜெட் சினிமாவுக்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போராட்டங்கள் என்பதால், அந்தக் காட்சிகளையும் அப்போது அதிபர்களாக இருந்த நிக்ஸன், கார்டர், ரீகன் போன்றவர்களையும் ஆங்காங்கே திரைக்கதைக்குள் நுழைய அனுமதித்திருக்கிறார்கள். வால்டர் மர்ஃப்யின் அட்டகாசமான தீம் மியூஸிக், தொடருக்கு எனர்ஜி பூஸ்டர். பீத்தோவனின் சிம்பனியை டிஸ்கோவாக மாற்றி அவர் படைத்திருக்கும் இசைத்துணுக்கு ரெட்ரோ தொடருக்கு பக்கா. தொடரில் வரும் பில்டப் காட்சிகளுக்குப் பின்னணி இசையில் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார் கிறிஸ் பவர்ஸ். அரசியல் சார்ந்த வரலாற்றுத் தொடர் என்றால் டாக்குமென்டரி ஃபீல் இயல்பாகவே தொற்றிக்கொள்ளும். ஆனால், நேர்த்தியான எடிட்டிங் மூலம் இறுதிவரை வேகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

2016-ல் இறக்கும் வரை பெண்ணியவாதிகளை எதிர்த்தார் பிலிஸ். ஆனால், தனக்குப் பிடித்த வேலையைச் செய்வது, அரசியலில் ஈடுபட்டது, புத்தகங்கள் எழுதியது எனத் தன்னையும் அறியாமல் ஒரு பெண்ணியவாதியாகத்தான் வாழ்ந்தார் பிலிஸ் என்பதுதான் உண்மை. மூன்று மாகாணங்களில் வெற்றிபெற முடியாமல், 1982-ல் சம உரிமை திருத்தச் சட்டம் நிறுத்தப்படுகிறது. 2017-ம் ஆண்டு நெவேடாவிலும், 2018-ல் இல்லினாயிலும், இந்த ஆண்டு இறுதியாக விர்ஜினியாவிலும் இந்தத் திருத்தம் வென்றது. ஆனாலும், சில மாகாணங்களில் நீக்கப்பட்டுவிட்டதால், இன்னமும் சம உரிமை நிலைநாட்டப்படவில்லை. நூறு ஆண்டுக்காலப் போராட்டம் இன்றும் அமெரிக்காவில் தொடர்கிறது.

கதையின் சுவாரஸ்யத்துக்காக பிலிஸ்ஸின் அணியில் இருந்த நபர்களாக சில கதாபாத்திரங்களைச் சேர்த்திருக்கிறார்கள். வரலாற்றுத் தொடரில் இப்படியான சின்னச்சின்ன திரிபுகள் மட்டும்தான் குறை. பெண்கள், குறிப்பாக அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர் இந்த Mrs America.