Published:Updated:

`Breathe’ என்னும் ஆடுபுலி ஆட்டம்; முரண்படும் `Bodyguard'- வாசகரின் வெப்சீரிஸ் தேர்வுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

தமிழில் வெளிவரக்கூடிய வெப்சீரிஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஒருசில இயக்குநர்கள் மட்டுமே தமிழில் வெப்சீரிஸ் இயக்க முயல்கின்றனர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இணையதள சினிமா உலகில் OTT (over-the-top) கள் இன்று கோலோச்சுகின்றன.

காலத்துக்கு ஏற்ப மனிதனின் ரசனையில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அந்த வகையில் OTT கள் மனிதனின் ரசனையை மேலும் மெருகூட்டுவனவாய் உள்ளன.

கவர்ச்சிகரமான ஆண்டுக் கட்டணம், தெளிவான ஒளிபரப்பு, விரும்பும்போது ரசிக்க வாய்ப்பு, IMDb (Internet Movies Database) ரிவ்யூஸ் என OTT களில் மக்களைக் கவர்வதற்கான அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

OTT-களில் சினிமாக்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதில்லை. பாடல்கள், நகைச்சுவை, நாடகங்கள், கார்ட்டூன், வெப்சீரிஸ் என இவற்றில் இல்லாதவை இல்லை.

Representational Image
Representational Image

இதில் பல வெப்சீரிஸ்கள் OTT-களுக்கென்றெ பிரத்யோகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் திரைப்படங்களுக்கு நிகரான கதையம்சங்களும் திருப்பங்களும், தரமும் இருப்பது ஆச்சர்யமான ஒன்று.

OTT களில் Netflix, Amazon prime, Disney Hotstar போன்றவை இன்று மக்களிடம் பிரபலமாக உள்ளன. இவை தவிர தொலைக்காட்சி சேனல்களும் தங்களுக்கென தனியாக OTT கள் வைத்துள்ளன. இவற்றில் ஒளிபரப்பப்படும் வெப்சீரியஸ்களுக்கும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

வெளிநாட்டிலும் சூட்டிங், பெரிய ஸ்டார்கள், அதிரடியான திருப்பங்கள், புதுமையான கதைக்களம், பாடல்கள் மற்றும் BGM, திரைப்படங்களுக்கு நிகரான பட்ஜெட் என வெப்சீரிஸ்களின் தரமே வேறாக உள்ளது.

வருங்காலத்தில் மக்களின் பொழுதுபோக்குக்கு தீனிபோட இருப்பவை வெப்சீரிஸ்கள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனக்குப் பிடித்தமான ஐந்து வெப்சீரிஸ்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

1. Breathe:

தன் நோயாளி மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார் ஒரு தந்தை. தனது அஜாக்கிரதையால் தன்னுடைய பெண் குழந்தையின் இறப்புக்கு காரணமாகிக் குற்ற உணர்வில் தவிக்கிறார் மற்றொரு தந்தை. இவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டமே Breathe.

நுரையீரல் கோளாறு காரணமாக ஆறுமாதத்தில் இறந்துவிடக் கூடிய சூழ்நிலையில் உள்ள தன்னுடைய மகனைக் காப்பாற்ற தந்தை எடுக்கும் அதிரடியான முடிவுகளே கதை.

இயலாமையில் தவிக்கும் அப்பா கதாபாத்திரத்துக்கு அற்புதமாகப் பொருந்திப் போகிறார் கதாநாயகன் மாதவன். ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தந்தையாக,

க்ரைம் ஃபிராஞ்ச் இன்ஸ்பெக்டராக அமித்ஷா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இறந்த பின்பு உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்த கொடையாளிகளில் குறிப்பிட்ட வகையான ரத்தப் பிரிவு உள்ளவர்கள் வரிசையாக இறக்கின்றனர்.

அவர்கள் ஏன் இறக்கின்றனர் என்பதே கதைக்கரு.

தன்னுடைய மகனைக் காப்பாற்றத் தொடர் கொலைகள் செய்யும் கில்லராக தன்னுடைய நடிப்பில் மிளிர்கிறார் மாதவன்.

மாதவன் கொலைகளைச் செய்வது அவருடைய அம்மாவான நீலா குல்கர்னிக்குத் தெரியவருகையில் இருவரும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் அற்ற உணர்ச்சிகள் மிகச் சிறப்பு.

க்ரைம் ஃபிராஞ்சின் செயல்பாடுகள் அப்பட்டமாக நம் கண்முன் காட்டப்படுகின்றன.

Breathe
Breathe

ஷப்னா பாபி குழந்தையைப் பறிகொடுத்த அம்மாவாகவும் அதே நேரத்தில் தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டு புதிய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய இளம் பெண்ணாகவும் பொருந்திப் போகிறார்.

மொத்தமுள்ள எட்டு எபிசோடுகளில் முதலிரண்டில் கதை சற்று மந்தமாகத்தான் நகர்கிறது. அந்த இரண்டு எபிசோடுகளைச் சகித்துக்கொண்டால், அடுத்த ஆறு எபிசோடுகளில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இதுபோன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்க தைரியம் வேண்டும்.

இயக்குநர் மயங்க் சர்மாவுக்கு உண்மையிலேயே அந்தத் தைரியம் உள்ளது.

கண்பார்வையற்ற மாணவர்களை சாட்சிகளாக வைத்துக்கொண்டு மாதவன் செய்யும் கொலை புதுமையான ஒன்று.

வழக்கமான த்ரில்லர் கதைகளுக்கே உரிய இறுதித் திருப்பம் சுவாரஸ்யம் ஊட்டுவதாக உள்ளது.

Amazon prime-ல் இந்த சீரியஸ் இப்போது கிடைக்கிறது. எமோஷனலுடன் இணைத்த விறுவிறுப்பான த்ரில்லர் கதை. கட்டாயம் ரசிக்கலாம்.

2. Special Ops:

Disney + Hotstar இல் ஒளிபரப்பாகும் வெப்சீரிஸ் இது. இந்திய பாராளுமன்றத் தாக்குதல் முறியடிப்பில் தொடங்கும் கதை, இந்திய உளவு அமைப்பான ராவின் (RAW- Research and Analysis Wing) செயல்பாடுகளை ஆச்சர்யமூட்டும் வகையில் விளக்குகிறது.

இதில் ஹீரோவாக நடித்துள்ள கே கே மேனன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கண்களாலேயே நடிப்பைக் கொண்டுவந்து விடுகிறார்.

சாண்டில்யன் கதைகளில் வருவது போல ஒவ்வொரு எபிசோடு முடியும்போதும் ஒரு ட்விஸ்ட் வருகிறது. மொத்தம் எட்டு எபிசோடுகள்.

Special Ops
Special Ops

படப்பிடிப்பு முழுக்கவே வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருப்பதால், உலகைச் சுற்றிவந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சிறப்பான விசுவல் ட்ரீட்.

கே கே மேனனின் ஏஜென்டுகளின் துப்பறிதல் செயல்பாடுகளுக்காக அவர் செலவிடப்பட்ட தொகை குறித்த கணக்கு கேட்கப்படுகிறது. அதை அவர் தர மறுக்கிறார். ஏன் மறுக்கிறார் என்ற கேள்விக்கான விடையாகவே கதை முழுக்க விரிகிறது.

ஏஜென்ட்களின் ஒவ்வொரு ஆபரேஷன் திட்டமிடலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றது. ரா குறித்து நாம் அறியாத தகவல்கள் அவ்வப்போது வந்து போகின்றன.

இயக்குநர்களான நீரஜ் பாண்டே மற்றும் ஷிவம் நாயர் ஆகியோர் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தம் இயக்கத்தைத் தந்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என எட்டு நாள்களுக்கு தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்.

3. The family man:

தேசிய புலனாய்வு அமைப்பில் (NIA) பணியாற்றக்கூடிய ஒரு அதிகாரி குடும்பத்தையும் தன்னுடைய பணியையும் எப்படிச் சமப்படுத்துகிறார் என்பது The family man கதை.

ஒரு சாதாரண குடும்பத் தலைவனுக்கு உள்ள பொறுப்புகளும் அலுவலகத்தில் அதிகாரியாகச் செய்ய வேண்டிய பொறுப்புகளும் அவருடைய சமநிலையைக் குலைக்கும் போது, அதைச் சமப்படுத்தி எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை.

அவ்வப்போது வரும் தொழில்நுட்பத் தகவல்களும், அதிரடியான கைதுகளும், திடீரென்ற என்கவுன்டர்களும் கதையைச் சுவாரஸ்யப்படுத்துகின்றன.

The family man
The family man

நம்முடைய குடும்ப வாழ்க்கையும் பணிச்சூழலும் ஒரு மனிதனின் வாழ்வில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என இந்தக் கதை தெளிவாக விளக்குகிறது. உலகத் தரம் மிக்க உளவாளிக்கும் ஒரு குடும்பம் உண்டு என்ற கோணம் ஏற்கக்கூடியதே!

Manoj Bajpayee ஒரு நடுத்தரக் குடும்ப மனிதர், அவர் உலகத் தரம் வாய்ந்த NIA அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

அவர் தனது குடும்பப் பொறுப்புகள் மற்றும் அவர் பணிபுரியும் தேசிய புலனாய்வு அமைப்பின் ரகசியமான சிறப்புக் குழுவின் கோரிக்கைகள் என இரண்டையுமே செயல்படுத்தவும் சமப்படுத்தவும் முயல்கிறார்.

சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்பும், பணிக்குச் செல்லும் ஆண்களிடம் பெண்களின் எதிர்பார்ப்பும் திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

NIA-வின் ரகசியங்களும் குடும்பத்தின் பொறுப்புகளும் என இரட்டைக் குதிரைப் பயணமாகவே கதை முழுக்கச் செல்கிறது.

Raj Nidimoru மற்றும் Krishna D.K ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இக்கதையில் Manoj Bajpayee-யின் மனைவியாகப் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய கணவன் குடும்பத்துடன் நேரம் செலவிடாத ஏக்கமும் ஒரே வேலையை 9 ஆண்டுகளாகத் தொடரும் துக்கமும்,

குழந்தைகளை தான் மட்டுமே கவனிக்க வேண்டிய கட்டாயமும் எனக் குடும்பத்தலைவி பாத்திரத்தில் பளிச்சிடுகிறார் பிரியாமணி.

இவரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

10 எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப்சீரிஸ் Amazon prime-ல் கிடைக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய வெப்சீரிஸ். போரடிக்காமல் போகும்.

4. Bodyguard:

ஒரு போலீஸ் சார்ஜன்ட் முந்தைய தன்னுடைய அனுபவங்களுக்கும், தான் இப்போது பாடிகார்டாகப் பணியாற்றக்கூடிய அலுவலரின் செயல்பாடுகளுக்கும் இடையே எவ்வாறு முரண்படுகிறார் என்பதே பாடிகார்டின் மையக்கரு.

பாடிகார்டாக Richard Madden தன்னுடைய முரண்பட்ட மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புப் படையினருக்கு புதிய வகையிலான கண்காணிப்பு முறையினை அறிமுகப்படுத்தும் தனது சிறப்பான நோக்கத்தினை Keeley Hawes சிறப்பான நடிப்பின் மூலம் பிரதிபலித்துள்ளார். தனது உதவியாளராலே சமூக விரோதி என வர்ணிக்கப்படும் சூழலிலும் தனது முடிவு சரியானது என்ற தெளிவுடன் உறுதியாக இருக்கிறார் உள்துறைச் செயலர் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் Keeley Hawes.

Bodyguard
Bodyguard

பழமையும் புதுமையும் முட்டி மோதிக்கொள்ளும் இடமாகக் கதைக்களம் விளங்குகிறது. பாடிகார்டுகளின உடல் மொழியும், மன உணர்வுகளும் அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் ஆறு எபிசோடுகளைக் கொண்ட Bodyguard வெப்சீரிஸில் John Strickland 3 எபிசோடுகளையும், Thomas Vincent 3 எபிசோடுகளையும் இயக்கியுள்ளனர். Netflix -ல் கிடைக்கிறது. நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.

5. Criminal Justice:

ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைப் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டக்கூடிய கல்லூரி மாணவன் செய்ததாக அனைத்து விதமான தடயங்களும், சாட்சிகளும் கூறுகின்றன.

நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால், உண்மையில் அந்தக் கொலையை அவன் செய்யவில்லை. யார் கொலையாளி என்ற கேள்விக்கான தீர்வாகக் கதை முழுக்க நகர்கிறது.

சினிமாக்களில் பார்ப்பது போல் அல்லாமல் கோர்ட்டுகளின் உண்மையான முகத்தை இயல்பாகக் காட்டியிருப்பது சிறப்பு. ஒரு சிறைச்சாலை எப்படி இருக்கும் என்பதை நாம் சுற்றுலாச் சென்று பார்ப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறைச்சாலை அமைப்பும் காட்சிகளும் உள்ளன.

சிறையில் நடைபெறும் போதைப்பொருள் அரசியல், வியாபாரம் எனப் பன்முகத் தன்மையை விவரிப்பதாகத் திரைக்கதை உள்ளது. வக்கீலாக நடித்துள்ள பங்கஜ் திரிபாரி இயல்பான நடிப்பை அலட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

Criminal Justice
Criminal Justice

மூத்த சிறைக்கைதியாக வரக்கூடிய ஷாக்கி ஷெராப்பின் முகபாவனைகள் கதைக்கு சுவையூட்டுகின்றன. பெரும் திருப்பங்களுடன் ஒவ்வொரு எபிசோடும் முடிகிறது.

கல்லூரி மாணவர்-கம்-பகுதிநேர டாக்ஸி டிரைவராக வரக்கூடிய கதையின் ஹீரோ Vikrant Massey இன்றைய கல்லூரி மாணவர்களைப் பிரதிபலித்துள்ளார்.

கதையில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவர் பொருந்திப் போகும் இடங்கள் சிறப்பு.

Tigmanshu Dhulia வின் இயக்கத்தில் ஆவலைத் தூண்ட கூடிய 10 எபிசோடுகள் கொண்ட Criminal Justice வெப்சீரிஸ் Disney Hotstar இல் கிடைக்கிறது. ஒரு எபிசோடின் முடிவு, நிச்சயம் அடுத்த எபிசோடைப் பார்க்கத் தூண்டும்.

வெப்சீரியஸ்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் படைப்பாளிகளின் சுதந்திரம் முழுமையாகக் காக்கப்படுவது உண்மை.

ஆனால், அவ்வப்போது ஒலிக்கும் கெட்ட வார்த்தைகளும் அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகளும், ஆபாசவசனங்களும், காட்சிகளும் வெப்சீரியஸ்களின் மிகப்பெறும் குறைகளாக உள்ளன. எனவே, படைப்பாளிகள் தம் பொறுப்புணர்ந்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

OTT களில் சினிமாக்களை வெளியிடுவது சரியா, தவறா என்ற இருவேறு கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன.

அதே நேரத்தில் தமிழில் வெளிவரக்கூடிய வெப்சீரிஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஒருசில இயக்குநர்கள் மட்டுமே தமிழில் வெப்சீரிஸ் இயக்க முயல்கின்றனர்.

இளைஞர்களின் ரசனை தற்போது மாறிக்கொண்டே இருக்கிறது. வெப்சீரிஸ்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. எனவே, பிரபல இயக்குநர்களும் வெப்சீரிஸ்கள் இயக்க முன் வர வேண்டும்.

புதுமையான கதைக்களம், அதிரடி திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, தரமான ஒளிப்பதிவு மற்றும் இசையுடன் இணைந்த சிறப்பான இயக்கம் இருக்குமாயின வெப்சீரிஸ்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.

புதிதாக சினிமா இயக்க விரும்புபவர்கள் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வது அவசியம். வருங்காலத்தில் வெப்சீரிஸ்கள் மக்களின் பொழுதுபோக்கிலும் ரசனையிலும் மாபெரும் ஆதிக்கம் செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழில் மிகப்பெரும் ஆளுமைகளின் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து தனக்குத் தேவையான கதைகளை புதுமுக இயக்குநர்கள் வெப்சீரியஸாக இயக்க முன்வந்தால், இளைஞர்களைக் கவர முடியும். வெப்சீரிஸ்கள் வகைப் படைப்பிலும் தமிழ் முன்னணியில் இருக்கும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு