Published:Updated:

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமாக வந்திருக்கும் மிஷல் ஒபாமாவின் சுயசரிதை... எப்படி இருக்கிறது #Becoming?

Michelle Obama with her mother ( Michelle Obama Instagram )

"வெள்ளை மாளிகையிலிருந்து இறுதியாக வெளியேறிய தினத்தன்று எங்களை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டரில் அமர்ந்து 30 நிமிடங்கள் அழுதேன்."

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமாக வந்திருக்கும் மிஷல் ஒபாமாவின் சுயசரிதை... எப்படி இருக்கிறது #Becoming?

"வெள்ளை மாளிகையிலிருந்து இறுதியாக வெளியேறிய தினத்தன்று எங்களை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டரில் அமர்ந்து 30 நிமிடங்கள் அழுதேன்."

Published:Updated:
Michelle Obama with her mother ( Michelle Obama Instagram )
”பெண்களும் தேயிலையும் ஒன்று. கொதிக்கும் நீரில்தான் அவளது வீரியம் உலகத்துக்குப் புரியவரும்”
இலியனார் ரூஸ்வேல்ட்
Michelle - Hillary
Michelle - Hillary

அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்டுடைய இணையர் இலியனார் ரூஸ்வேல்ட் இதை அடிக்கடி சொல்வார் என ஹிலாரி கிளிண்டன் ’லிவிங் ஹிஸ்டரி’ என்கிற தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

அமெரிக்கக் குடியரசு அதன் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் காலம் தொடங்கி அதிபர்களின் இணையர்களை ’ஃபர்ஸ்ட் லேடி’ என்றுதான் அங்கீகரித்து வந்துள்ளது. இந்த முதல் பெண்மணிகளின் செயல்பாடுகள் என்ன? பொறுப்புகள் என்ன? என்பது குறித்து அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இதுநாள் வரை இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அரசியல் கூட்டங்களில் பங்கெடுப்பது, தங்களுடைய பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையை நிர்வகிப்பது, சமூகப் பணிகளில் ஈடுபடுவது, அதிகாரபூர்வ நிகழ்வுகளில் அதிபர் சார்பாகப் பங்கெடுப்பது உள்ளிட்டவை அவர்களுடைய எழுதப்படாத பொறுப்புகள். அதிபர்களின் இணையர்கள் தங்களது சுயசரிதையை எழுதும் வழக்கம் 1914-ம் ஆண்டு தொடங்கி இருந்து வந்துள்ளது. ஒரு சிலர் இரண்டு மூன்று சுயசரிதைகள் எழுதிய வரலாறும் உண்டு. சில புத்தகங்கள் அதிபர்கள் எழுதிய புத்தகங்களைவிடவும் அதிகம் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

Bush - Obama
Bush - Obama

ஜாக்குலின் கென்னடிக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் வசித்த கிளௌடியா ஜான்சன் தனது பதவியின் இறுதிக்காலங்களில் தனது அறை வாசலில் ‘நான் தனியாக இருக்க விரும்புகிறேன், யாரும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்ட தலையணையை மாட்டிவைத்திருப்பாராம். அப்படித் தனிமையில் அவர் எழுதிய சுயசரிதையில் ஜான் எஃப் கென்னடியின் கொலை குறித்த பதிவுகளும் இருந்ததாலேயே அதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அந்தப் புத்தகம் விற்றது. நான்சி ரீகன், பார்பரா பூஷ் ஆகியோர் எழுதிய புத்தகங்களும் ரீகன், ஜார்ஜ் புஷ் எழுதிய சுயசரிதை புத்தகங்களைவிட சந்தை விற்பனையில் சக்கைபோடு போட்டன.

அந்த வரிசையில் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களிலிருந்து உருவான முதல் ’ஃபர்ஸ்ட் லேடி’ மிஷல் ஒபாமா 2018-ம் ஆண்டு இறுதியில் ’பிகமிங்’ (Becoming) என்கிற தனது அனுபவச் சரிதையை வெளியிட்டார். இதுவரை இல்லாத அளவுக்கு 10 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. தற்போது நெட்பிளிக்ஸில் ஒன்றரை மணிநேர ஆவணப்படமாகவும் அது வெளியாகி இருக்கிறது. உண்மையில், அதிபர்களின் பதவிக்காலத்தைக் கடந்தும் தனது அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களின் இணையர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிபர்களின் பதவிக்காலத்துக்குப் பிறகுதான் இவர்களுக்கு அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுதலையே கிடைக்கிறது.

Becoming
Becoming
Instagram

மிஷல் அதற்கு விதிவிலக்கல்ல. ஒபாமா-மிஷல் இருவருமே சட்டம் சார்ந்த பணியில் இருப்பவர்கள். ஒபாமா முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்தில் மிஷல்தான் ஒபாமாவுக்கு வழிகாட்டி. பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. டேட்டிங் செல்லத் தொடங்குகிறார்கள். ஆனால், ஒபாமாவின் எண்ணங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் ஈடுகொடுப்பது தனக்கு அத்தனை அழுத்தமாக இருந்தன என்கிறார் மிஷல். ஒபாமாவைவிடவும் தனக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து பயணம் செய்ய வேண்டியிருந்ததாகச் சொல்கிறார். இதுவரையிலான 'முதல் பெண்கள்' பதிவு செய்யாத ஒருபகுதியை தனது புத்தகத்தில் ஒபாமா பதிவு செய்கிறார்.

தனது முதல் குழந்தையைக் கருவிலேயே இழந்தது குறித்தும், அது தங்களது குடும்பத்தில் ஏற்படுத்திய அழுத்தம் குறித்தும் மனம் திறந்திருக்கிறார். அதிலிருந்து தாங்கள் மீண்டு வந்த கதையைப் பதிவு செய்கிறார்.
The Obamas
The Obamas
Instagram

மாலியா, ஷாஷா என இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். ஒருகட்டத்தில் யாரேனும் ஒருவர் அவருடைய குறிக்கோள்களை விட்டுக்கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. மிஷல் விட்டுக் கொடுக்கிறார். ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யும்போது மிஷலுக்கு அந்த அழுத்தம் இன்னும் கூடுதலாகிறது. பாரக்குடன் தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும் அவரை ஊடகங்கள் இழிவுபடுத்துகின்றன. “தான் கறுப்பினப் பெண் என்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். இல்லாத நிறவெறியை இருப்பதாகக் கூறித் தன்னை பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஒபாமாவின் மேடைகளை வீணடிக்கிறார். ஒபாமா தோற்பதற்கு இவர்தான் காரணமாக இருப்பார்” எனக் கேலி செய்கிறார்கள்.

ஒபாமாவுக்காக வாக்களிப்பார்கள் என, தான் நம்பிய மக்களே தங்களைக் கைவிட்டதாகச் சொல்கிறார் மிஷல். இருந்தும் பாரக் ஒபாமா வெற்றி பெறுகிறார். தான் பதவியேற்கும் மேடையில், “எனது இந்த வெற்றிக்குக் காரணம் என்னுடைய 16 வருடத் தோழிதான்” எனக் கூறி மிஷலை ஆரத்தழுவி முத்தமிடுகிறார்.

“இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் வாழ்வில் இவையெல்லாம் சகஜம் எனப் பலர் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். உண்மையில் இந்த வெறுப்பரசியலுக்கு நமது ஆன்மாவையே உருமாற்றிவிடும் வல்லமை இருக்கிறது” என்கிறார் மிஷல்.

Michelle and Barack
Michelle and Barack
First Lady- Archived | twitter.com/flotus44
மிஷல் ஒபாமா
வெள்ளை மாளிகையிலிருந்து இறுதியாக வெளியேறிய தினத்தன்று எங்களை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டரில் அமர்ந்து 30 நிமிடங்கள் அழுதேன்.

ஒபாமா பொறுப்பேற்ற பிறகு அவர்கள் நால்வருடைய வாழ்க்கையுமே அமெரிக்காவின் முதல் குடும்பம் என்கிற கட்டத்துக்குள் இறுகிவிடுகிறது. “ஒபாமா பதவியேற்பதற்கு முன்பு லாரா புஷ் எங்களுக்கு வெள்ளைமாளிகையில் இரவு விருந்தளித்தார். விருந்து பரிமாறியவர்கள் அனைவருமே இறுக்கமான முகத்துடன் கோட் சூட் அணிந்து பரிமாறினார்கள். அவர்களில் சிலர் கறுப்பின மக்கள். நான் ஷாஷாவையும் மாலியாவையும் அந்த வீட்டில்தான் வளர்க்க வேண்டும். அவர்களாகவே சுதந்திரத்துடனும் பொறுப்புடனும் வளரவேண்டும் என நினைத்தேன். எதோ, ஒருவழியில் எனது உறவினராக இருந்திருக்கக் கூடியவர் எனது பிள்ளைகளுக்கு அவ்வாறு ஊழியம் செய்யக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்” என்கிறார். அதுவரையிலான எந்த முதல் பெண்மணியும் தனது வெள்ளைமாளிகை வரலாற்றில் பேசாத பகுதி இந்த நிறவெறி அரசியல். வெள்ளை மாளிகையிலிருந்து இறுதியாக வெளியேறிய தினத்தன்றுத் தங்களை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டரில் அமர்ந்து 30 நிமிடங்கள் அழுததாக பிகமிங் டாகுமென்ட்ரியில் பதிவு செய்கிறார் மிஷல்.

“இவை எதுவுமே இனி நமக்குச் சொந்தம் கிடையாது என்பதற்காக அழுதீர்களா?” எனக் கேட்கிறார் அவர் எதிரில் அமர்ந்திருப்பவர்.

“இல்லை எதோ ஒரு பெரிய அழுத்தத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தேன். அதை இனிச் சுமக்கத் தேவையில்லை என்கிற சுதந்திரம் கொடுத்த அழுகை அது” என்கிறார் மிஷல்.

Michelle Obama
Michelle Obama

மற்ற முதல் பெண்மணிகளைக் காட்டிலும் மிஷலுக்கான அடையாளம் தனித்துவமானது, தனது பாட்டியின் பியானோதான் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் கடினமான விஷயமாக இருக்கும் என நம்பிக் கொண்டிருந்த குட்டிச்சிறுமி மிஷல், தன் நிறமே தனக்கான போராட்டமாக இருக்கும் என நினைத்துப்பார்க்கவில்லை. தன் அண்ணனைப் போல பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர ஆசைப்படுகிறாள். கறுப்பினப் பெண்ணால் அதெல்லாம் சாத்தியமில்லை என்கிறார்கள் அவளது பள்ளி ஆசிரியர்கள். ஆனால், மிஷலின் விடாப்பிடித்தன்மை அவர்களுக்குத் தெரியாது. பிரின்ஸ்டன், ஹார்வர்டு எனப் படிப்பே பிரதானமெனப் பயணிக்கிறாள்.

எனது தாத்தாவுக்குத் திறமை இருந்தது, அனைத்தையும் சாதிக்கக் கூடிய வலிமை இருந்தது. ஆனால், நிறவேற்றுமை அவருக்கான வாய்ப்பைப் பறித்தது. அந்தக் கோபத்தை அவர் எங்களுக்குப் புகட்டி வளர்த்திருந்தார்.
மிஷல் ஒபாமா
Michelle with her Brother
Michelle with her Brother

அடிமைச்சங்கிலியின் தழும்புகளில் சினமேறியவர்களின் தலைமுறையில் வந்தவள் மிஷல். தனது பதவிக்காலத்தின் போதும் அதற்குப் பிறகும் கூட அதுவரை எந்த முதல் பெண்மணியும் பேசாத ’முதல் தலைமுறைக் கல்வி’ குறித்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் பதிவு செய்யக் காரணமும் அதுதான்.

மிஷல் தனது புத்தகத்துக்கான விளம்பரச் சுற்றுப்பயணத்தில் மாணவர்களைச் சந்திக்கிறார். குறிப்பாகப் பெண்களை. மிஷலுடன் உரையாட, தான் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்கிற கேள்வி அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அவற்றைக் காது கொடுத்துக் கேட்கிறார். சிலர் அவர்களது வீட்டின் முதல் தலைமுறைப் பட்டதாரி, சிலர் மிஷல் போன்ற வலிமை தனக்கும் இருப்பதாக நம்புகிறார்கள், சிலர் மிஷலின் கைப்பிடித்து அழுகிறார்கள். அவர்களை அனைவருமே அன்பையும் நம்பிக்கையையும் தேடி வந்தவர்கள். நமது கதைதான் நம்முடைய வலிமை என்கிறார் மிஷல். தன்னுடைய கதை வழியே பலகோடிக்கணக்கான அமெரிக்க மக்களின் குறிப்பாக கறுப்பின மக்களின் நம்பிக்கையாக இருக்கிறார்.

Michelle Obama
Michelle Obama
Netflix
நான் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, அடிமைகளின் வழித்தோன்றல்!
மிஷல் ஒபாமா

நூறு வயது மதிக்கத்தக்க கறுப்பினக் கிழத்தி மிஷலின் கரம்பிடித்து இப்படியாகச் சொல்கிறாள், “நீங்கள் அதிகாரத்துக்கு வந்தது எனக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. என் தந்தை அப்படி யாரையேனும் பார்க்க வேண்டும் என நினைத்தார். அவரால் பார்க்கமுடியவில்லை. ஆனால், நான் அதைப் பார்த்தேன். அவர் சார்பாக நான் அதை மனதாரப் பார்த்தேன்” என்கிறார்.

உலகத்தில் அதிகாரத்துக்குப் பல ஆயுதம் இருக்கலாம் ஆனால், ஒடுக்கப்படுபவர்களுக்கான ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. இந்தியச் சமூகம் மிஷல் ஒபாமாவின் இந்தப் புத்தகத்தையும் ஆவணப்படத்தையும் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு இந்த ஒரு காரணமே போதுமானது.

”நான் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, அடிமைகளின் வழித்தோன்றல்” எனக் கண்கள் விரிய அவர் கூறுமிடத்தில் உங்களுக்கு அம்பேத்கர் நினைவில் வர வாய்ப்பிருக்கிறது.