Published:Updated:

வேலையில்லா முதியவரின் ஒப்புதல் வாக்குமூலம்... `Inhuman Resources' வெப் சீரிஸ் ஒரு பார்வை!

கார்த்தி
Inhuman Resources
Inhuman Resources

இரண்டு வழக்குகள், பணயக் கைதிகள், மூழ்கும் வீடு... அடுத்தது என்ன என்னும் கேள்விகளுடன் ஆரம்பிக்கும் தொடரில் `ட்விஸ்ட் ட்விஸ்ட்டேய்' என ரயிலில் வெஜ் ரைஸ் விற்பதுபோல், ட்விஸ்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கொரோனா நம்முடைய உயிரைப் பிடுங்குகிறதோ இல்லையோ, நம்மிடம் எஞ்சி இருக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கையை உறிஞ்சி எடுக்காமல் போகாது போலிருக்கிறது. அமெரிக்காவில் 40 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் வேலையில்லை எனப் பதிவுசெய்திருக்கிறார்கள். அங்கு நான்கில் ஒருவருக்கு வேலையில்லை என்கிறது நியூயார்க் டைம்ஸ் செய்திக்குறிப்பு. கண்டிப்பாக இது வேலையிழப்பு பற்றிய பதிவு அல்ல... கமென்ட் பாக்ஸிற்கு செல்லாமல், அடுத்த இரு பாராக்கள் வாசியுங்கள்! ஃபிரெஞ்சில் வெளியான `Dérapages' என்னும் தொடரை மணி ஹெய்ஸ்ட் போலவே வாங்கி ஆங்கிலத்தில் `Inhuman Resources' எனக் கடந்த மாதம் வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்.

Inhuman Resources
Inhuman Resources

பாரீஸில் தன் மனைவி நிக்கோலுடன் வாழ்ந்து வருகிறார் ஏலன் டெலாம்பர். 57 வயதான ஏலனுக்கு போதிய வருமானம் இல்லை.

``உங்கள் அலுவலகத்தில் நிதி நெருக்கடி சூழலில் ஒரு அனுபவம் வாய்ந்த சீனியரை அனுப்ப வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பார்களோ, அந்த சீனியர்தான் நான்."

ஏலனின் மொழியில் அவருக்கான அறிமுகம் இதுதான். 50-வது வயதில் தான் நேசித்த வேலையிலிருந்து தூக்கியெறியப்பட, அடுத்த ஆறு ஆண்டுகள் எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார். அப்பார்ட்மென்ட் லோனும் கழுத்தை நெரிக்கிறது. என்ன செய்வதெனத் திகைக்கும் நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் மேனேஜரை அடித்துவிட, ஏழரை டபுள் பெட் போட்டு ஏலன் அருகில் உட்கார்கிறது. இந்த நேரத்தில்தான் ஃபிரான்ஸின் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. தவறான பதில்களைத் தேர்வு செய்துகொடுத்தும் ஏலனை அடுத்த ரவுண்டுக்கு வரச் சொல்கிறார்கள். அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை ஒரு ஹாஸ்டேஜ் நிலையில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்க வேண்டும். யார் பயந்து நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிடுகிறார்களோ அவர்களை வேலையைவிட்டு அனுப்பிவிடத் திட்டமிடுகிறார் அந்த நிறுவனத்தின் CEO. இந்த டெஸ்ட்டில் வெற்றிபெறுபவர்கள் அவர்களின் தொழிற்சாலையில் இருக்கும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதற்குத் தகுந்த நபரைத் தேர்வு செய்ய இப்படியொரு திட்டம் தீட்டுகிறார் அந்த CEO.

இந்த வேலைக்குத் திட்டமிடுகிறேன் பேர்வழியென என இன்னொரு வழக்கில் சிக்கிக்கொள்கிறார் ஏலன். இரண்டு வழக்குகள், பணயக் கைதிகள், மூழ்கும் வீடு அடுத்தது என்ன என்னும் கேள்விகளுடன் ஆரம்பிக்கும் தொடரில் `ட்விஸ்ட் ட்விஸ்ட்டேய்' என ரயிலில் வெஜ் ரைஸ் விற்பதுபோல், ட்விஸ்ட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

Inhuman Resources
Inhuman Resources
வேலையிழந்த இன்னொரு நண்பரின் உதவியுடன் ஏலன், ஒரு மல்டிநேஷனல் கம்பெனியையே ஓடவிடுவதுதான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `Inhuman Resources' தொடரின் கதை.

Breaking the Fourth Wall முறையில், பார்வையாளர்களிடம் தன் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டே கதையை நகர்த்துகிறார் ஏலன். ஏலனாக முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான Eric Cantona அட்டகாசமாக நடித்திருக்கிறார். Pierre Lemaitre எழுதிய Cadres noirs என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர் ஃபிரான்ஸில் நிலவும் வேலையிழப்புகளைப் பற்றிப் பேசுவதால் வைரல் ஹிட் அடித்திருக்கிறது. ஒருவர் தன் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், வயதின் மூப்பு காரணமாக வேலையிழப்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர்.

Inhuman Resources
Inhuman Resources
தங்க வேட்டை, புரட்சி, போலீஸ் அராஜகம்... எப்படி இருக்கிறது #MoneyHeist4?

பிரமாண்டங்களுக்காகச் செலவு செய்யாமல், அதை வெறும் வார்த்தைகளிலேயே பார்வையாளனின் மனதில் வளர விடுவது அருமையாக இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் எடுக்க விரும்புபவர்கள் இந்தத் தொடரின் சில விஷயங்களை அப்படியே பின்பற்றலாம். அதேபோல், இங்கு `கேப்பிடலிஸ்ட்' என்று தனியாக யாரும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது ஒவ்வொரு போராளியும் அவன் அளவில் கேப்பிடலிஸ எல்லையைத் தொடத்தான் செய்கிறார்கள் எனத் தொடரின் வில்லன் சொல்லும்போது, யார் ஹீரோ, யார் வில்லன் என்னும் கேள்வியெழுகிறது.

`த்ரிஷ்யம்' படத்தில் (நம்ம பாபநாசம்தான் பாஸ்!) எப்படி மோகன்லால் அனைவரையும் ஓர் உலகுக்குள் கொண்டு வருகிறாரோ, அதுபோல் இதில் ஏலன் ஒரு உலகத்தை உருவாக்குகிறார். அதில் அவரது விருப்பத்திற்கேற்ப அனைவரும் காய்களாக நகர்கிறார்கள். அதில் சிலர் ஆறாத தழும்புகளுடன் ஏலனைவிட்டு வெளியேறுகிறார்கள். சிலர் துணை நிற்கிறார்கள்.

முதல் பத்தியில் ஸ்பானிஷ் தொடரான மணி ஹெய்ஸ்டை குறிப்பிட்டதற்குக் காரணம், அதற்கும் இதற்கும் சில ஒற்றுமைகள்... மணி ஹெய்ஸ்டைப் போலவே இதிலும் தவறு செய்பவர்கள் மக்கள் மத்தியில் ஹீரோக்களாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இங்கிருக்கும் வேலையின்மைக்குக் காரணம் இந்த அரசாங்கத்தின் திட்டங்களும் சட்டங்களும்தான் உரக்கப்பேசுகின்றன இத்தகைய தொடர்கள். அதே சமயம், மணி ஹெய்ஸ்ட் போல் நீட்டி முழக்கி நாலு சீசனைக் கடந்து நம்மைச் சோதிக்காமல், ஆறு எபிசோடில் சரியான விகிதத்தில் முடித்திருக்கிறார்கள்.

Inhuman Resources
Inhuman Resources

2016-ம் ஆண்டு வெளியான `Dont Breathe' பார்க்கும்போது, `இதை அப்படியே தமிழில் எடுத்தா செமயா இருக்கும்ல?' எனத் தோன்றியது. அப்படிப் பத்துப் பொருத்தமும் பக்காவாக பொருந்திப்போகும் இன்னொரு படைப்பு இந்த InHuman Resources.

அடுத்த கட்டுரைக்கு