Published:Updated:

மனிதர் பாதி காட்டேரி மீதி!

சால்வட்டோர் குடும்பத்தின் வீடுதான் அந்தச் சிறப்புப் பள்ளி.

பிரீமியம் ஸ்டோரி

மிஸ்டிக் ஃபால்ஸ் - நீளும் இரவுகளில் இருள்போல மண்டிக்கிடக்கும் நமக்குப் பழக்கப்பட்ட ரகசியங்களைத் தாண்டி, நம்பமுடியாத நிகழ்வுகள் பல அரங்கேறும் ஒரு சிறுநகரம். ரத்தம் குடிக்கும் வேம்பயர்ஸ் (காட்டேரி), துர்மந்திரங்கள் உச்சரிக்கும் விட்சஸ் (Witches), பகலில் மனிதர்களாகவும், பௌர்ணமி நாளில் வேர்வுல்வ்ஸாகவும் (Werewolves) திரிபவர்கள் என அங்கே விநோதங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், இங்கே இவையாவும் வெளிப்படையான விஷயங்களல்ல. இவர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள் எனும் முகமூடியில் இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களை நெறிப்படுத்த, மனிதர்களுடன் இயல்பு வாழ்க்கை வாழ நடத்தப்படும் ஒரு பள்ளியில் அரங்கேறும் சாகசங்கள்தான் ‘லெகசீஸ்’ (Legacies) தொடரின் ஒன்லைன்.

L.J.ஸ்மித் எழுதிய ‘தி வேம்பயர் டயரிஸ்’ புத்தகங்களை அடிப்படையாகக்கொண்டு அதே பெயரில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பதின்பருவப் பெண்ணான எலீனா கில்பர்ட்டின் வாழ்வில் நுழைகிறார்கள் ‘சால்வட்டோர்’ குடும்ப சகோதரர்களான ஸ்டெஃபன், டேமன் என்ற இரண்டு வேம்பயர்ஸ். எட்டு சீஸன்கள், 171 எபிசோடுகளாக விரிந்த இந்தத் தொடரின் பாதியிலேயே இதில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ‘தி ஒரிஜினல்ஸ்’ என்ற ஸ்பின் ஆஃப் தொடரை ஆரம்பித்தனர். அதாவது இந்த ‘தி வேம்பயர் டைரிஸ்’ உலகிலேயே அரங்கேறும் மற்றொரு கதை. தற்போது இந்த இரண்டு தொடர்களும் முடிந்த நிலையில் தொடங்கப்பட்ட அடுத்த ஸ்பின் ஆஃப் கதைதான் ‘லெகசீஸ்.’ இதில் ‘தி வேம்பயர் டைரிஸ்’ மற்றும் ‘தி ஒரிஜினல்ஸ்’ தொடரில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களைக் கொண்டு கதைக்களம் அமைத்துள்ளனர்.

மனிதர் பாதி காட்டேரி மீதி!

வேம்பயர் கதைகள் திரைக்கு ஒன்றும் புதிதில்லை. 19-ம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே வேம்பயர் இலக்கியம் வரத்தொடங்கிவிட்டாலும், அந்த நூற்றாண்டின் இறுதியில் ஐரிஷ் எழுத்தாளர் ப்ராம் ஸ்டாக்கர் எழுதிய ‘டிராகுலா’ என்ற நாவல்தான் டிராகுலாக் களைத் திரையில் பிரபலப்படுத்தியது. சமகால வேம்பயர் இலக்கியத்தில் ‘ட்வைலைட்’ புத்தகங்களுக்கு அடுத்து இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது ‘தி வேம்பயர் டைரிஸ்’ புத்தகங்கள்தான். அதை ஒரு யுனிவர்ஸாக மாற்றியிருக்கிறது CW தொலைக்காட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஒளிபரப்பாகி (2வது சீஸன்) வரும் ‘லெகசீஸ்’ தொடரில் அதே மிஸ்டிக் ஃபால்ஸ் நகரம்தான் கதைக்களம். நிக்ளாஸ் எனும் ‘ஒரிஜினல்’ வேம்பயரின் மகளான ஹோப் மைக்கல்சனின் பதின்பருவ வாழ்க்கையைப் பின்தொடர்கிறது இந்தத் தொடர். சுவாரஸ்யமாக அந்தப் பெண், வேம்பயர், விட்ச், வேர்வுல்ஃப் என்ற மூன்றின் சக்திகளையும் உள்ளடக்கியவள். கதை நிகழும் யுனிவர்ஸில் அதீத சக்திகொண்ட ஒருத்தி!

சால்வட்டோர் குடும்பத்தின் வீடுதான் அந்தச் சிறப்புப் பள்ளி. வேம்பயர்ஸ், விட்சஸ், வேர்வுல்வ்ஸ் என மனிதர்கள் அல்லாதவர்களுக்குத் தங்களின் சக்தி களை, துர் எண்ணங்களைக் கட்டுக்குள் வைத்து யாருக்கும் தீங்கில்லாத வாழ்வை எப்படி வாழ்வது என்பதைக் கற்றுத் தரும் பள்ளி. இதில் வேம்பயர் டைரிஸில் இடம்பெற்ற முக்கியக் கதாபாத்திரம் ஒன்றின் இரட்டைப் பெண் குழந்தைகளான லிஸ்ஸியும் ஜோசியும் அடக்கம். இவர்கள் இருவருமே விட்சஸ். மனிதர்களுடன் இணைந்த ஒரு வாழ்வை இப்படிப்பட்ட சக்திகொண்டவர்களும் வாழ முடியும் என்று நம்பும் `அலாரிக்’ கதாபாத்திரம்தான் பள்ளியின் தலைமையாசிரியர்.

இந்தத் தொடரின் சிறப்பே, என்னதான் சக்தி வாய்ந்த கதாபாத்திரங்கள் பல இருந்தாலும் சாதாரண மனிதர்களின் கதாபாத்திரங்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதுதான். இப்படி யாருக்கும் அஞ்சாத, எது சரியோ அதைச் செய்யத் தயங்காத மனிதர்கள்தான் இந்தத் தொடரின் பெரும் பலம். முந்தைய கதைகளில் இடம்பெற்ற நிக்ளாஸ், டேமன், எலைஜா போன்ற கதாபாத்திரங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதை அறுவடை செய்யத் தொடங்கப்பட்ட ‘லெகசீஸ்’ இப்போது அதன் முதன்மைக் கதாபாத்திரங்களான ஹோப், லிஸ்ஸி மற்றும் ஜோசியை வைத்து அப்ளாஸ் அள்ளிக்கொண்டிருக்கிறது. பாத்திரப் படைப்பு, ஒவ்வொரு பிரச்னையையும் சமாளிக்க அவர்கள் எடுக்கும் முடிவுகள் என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லாத திரைக்கதைதான் இதன் வெற்றிக்குக் காரணம். அதே சமயம், புத்தகங்களைத் தாண்டி இந்த யுனிவர்ஸ் விரிந்துவிட்டதால், ‘வேம்பயர் டயரிஸ்’ ரசிகர்களின் ஒருசாரரிடம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது ‘லெகசீஸ்.’ மொத்தமாக இந்த மூன்று தொடர்களையும் நம்மூரில் ‘ப்ரைம் வீடியோ’வில் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு