Published:Updated:

Maharani: ராப்ரி தேவியின் பாதிப்பில் 90-களில் நடக்கும் கதை... ஆனால், தமிழ் டப்பிங்கிலோ `ரகிட ரகிட'!

maharani ( SonyLiv )

தொடரை ராப்ரி தேவி பார்த்தால், டைம் டிராவல் செய்து குறைந்தபட்ச நன்மையாவது பீகார் மக்களுக்குச் செய்திருப்பார் என நம்பலாம்.

Published:Updated:

Maharani: ராப்ரி தேவியின் பாதிப்பில் 90-களில் நடக்கும் கதை... ஆனால், தமிழ் டப்பிங்கிலோ `ரகிட ரகிட'!

தொடரை ராப்ரி தேவி பார்த்தால், டைம் டிராவல் செய்து குறைந்தபட்ச நன்மையாவது பீகார் மக்களுக்குச் செய்திருப்பார் என நம்பலாம்.

maharani ( SonyLiv )
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு பெண், ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகிறார். அந்த மாநிலத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது சோனி லைவில் வெளியாகியிருக்கும் மகாராணி.

வளர்ச்சிகள் ஏதுமற்ற மாநிலமான பீகாரில் சாதி கலவரங்களுக்குப் பஞ்சமில்லை. துப்பாக்கிச் சூட்டில் முதல்வர் பீமா பாரதி படுத்த படுக்கையாகிவிட, நாற்காலி சண்டைக்கான களமும் சூடுபிடிக்கிறது. நவீன் குமார் தலைமையில் ஒரு பக்கம் அடுத்த முதல்வருக்கான உட்கட்சி பூசல் ஆரம்பமாக, பதவியை ராஜினாமா செய்கிறார் பீமா பாரதி. 'ராஜினாமா செய்துவிட்டார், ஊருக்குச் செல்லலாம்' என இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறார் பீமாவின் மனைவி ராணி பாரதி.

maharani
maharani
SonyLiv

ஆனால், ட்விஸ்ட்டாக, அரசியல், படிப்பறிவு என ஏதுமற்ற ராணி பாரதியை முதல்வராக அறிவித்துவிடுகிறார். தனக்கு எதிராக பின்னப்படும் அரசியல் சூழ்ச்சிகளையும், கணவரை சுட்டது யார் என்கிற கேள்விக்கான விடைகளையும் எப்படி கண்டுபிடித்து மாநிலத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் மகாராணியின் கதை.

பீகார், ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர், ராணி பாரதி, தாழ்த்தப்பட்டவர்கள், 90-களில் நடக்கும் கதை என எல்லாவற்றையும் படித்ததும் நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆம், அதுவேதான். மாட்டுத் தீவன ஊழலில் லல்லு பிரசாத் கைதாகயிருந்த சூழலில், தன் மனைவி ராப்ரி தேவியை 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக மாற்றி இந்திய அரசியலில் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பினார். தமிழில் கூட விஜயகாந்த்தின் 'தென்னவன்' படத்தில் இந்த வெர்சனில் ஊர்வசியை வைத்து காமெடி செய்திருப்பார்கள். அதைத்தான் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டு , பீகாரிலேயே எடுத்திருக்கிறார்கள். ராப்ரி தேவி போல் அல்லாமல், நிஜமாகவே 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆட்சி, அதிகாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதாய் கதையை எழுதியிருக்கிறார் சுபாஷ் கபூர்.
இந்த ஆண்டு மேடம் சீஃப் மினிஸ்டர் என மாயாவதியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமும், இவரின் கைவண்ணம்தான்.

maharani
maharani
Sonyliv

ராணி பாரதியாக ஹூமா குரேஷி. கிராமத்துப் பெண்ணாக வீட்டு வேலைகள், கால்நடைகளைப் பார்த்துக்கொள்வது; அரசியல் ஆரம்ப காலங்களில் உதாசீனம் செய்யப்படுவது, பின்பு சுதாரித்து திருப்பி அடிப்பது என ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு உடல்மொழி. பிரமாதமாக நடித்திருக்கிறார். இதுதான் கதாபாத்திரத்தன்மை என உணர்ந்து பல இடங்களில் அதற்கேற்றபடி ராணி பாரதியாக உருமாறியிருக்கிறார். பீமா பாரதியாக, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக சோஹும் ஷா. ஆதிக்க சாதியினரின் அசம்பாவிதக்காரர்களாக அமித் சியாலும், வினீத் குமாரும். ராணி பாரதியின் உதவியாளராக மலையாள 'பிரியாணி' படத்தில் கவனம் ஈர்த்த கனி குஸ்ருதி. மாநிலத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டறியும் நேர்மையான அதிகாரி பர்வேஷ் அலேமாக இனாமுல் ஹக் என காஸ்ட்டிங் பக்கா.

கால்நடைத் தீவன ஊழலைச் சுற்றி கதைக்களத்தை உருவாக்கியிருந்தாலும், அந்தச் சம்பவங்களை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள். கால்நடைத் தீவன ஊழலுக்கான ஆதிவேர் வேறு எங்கோ இருந்து ஆரம்பிக்கிறது. அதே சமயம், அதை மட்டும் களமாகக் கொள்ளாமல், பீகாரின் படிந்துபோயிருக்கும் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவர் மேல் எழுந்து வரும்போது, இத்தகையவர்களுக்கு ஏற்படும் அஜீரணங்களை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தகைய இடங்களில் வசனங்களும் ஷார்ப். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, சரி தவறு என்கிற நிலைகளுக்கு அப்பாற்பட்டு வளைந்து கொடுத்து சாதிக்க நினைக்கும் பீமா பாரதி, சட்டத்தின்படி தான் செல்வேன் என முறுக்கிக்கொண்டு நிற்கும் ராணி பாரதி. இவர்களின் ஈகோ காட்சிகளும் செம்ம! குறிப்பாக சாமியார் காட்சிகளில் எல்லாம் நிகழ்கால அரசியலையும் நுண்பகடி செய்திருக்கிறது சுபாஷ் கபூர் டீம்.

maharani
maharani
SonyLiv

சட்டசபை காட்சிகளை ஜம்மு & காஷ்மீரில் எடுத்திருக்கிறார்கள். "இந்த சிஸ்டம்ல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கார் பீமா பாரதி" என DGP சித்தாந்த் கௌதம் (கண்ணன் அருணாச்சலம்) சொல்லும்போது, புனைவைக் கடந்து லல்லுவை நினைத்து பெருமை கொள்ள வேண்டியதிருக்கிறது. கிராமங்களில் நடக்கும் துப்பாக்கி யுத்தங்களில் இருந்து, ரெட் சலாம் காட்சிகள்வரை அவ்வளவு யதார்த்தம். இந்தியாவில் நடக்கும் ஆதிக்க சாதியினரின் வன்மங்களை பல இடங்களில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். தொடரை ராப்ரி தேவி பார்த்தால், டைம் டிராவல் செய்து குறைந்தபட்ச நன்மையாவது பீகார் மக்களுக்குச் செய்திருப்பார் என நம்பலாம்.

தொடரின் ஆகப்பெரும் குறை அதன் தமிழ் டப்பிங். இவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கும் தொடரை, இன்னும் சற்று மெனக்கெட்டு டப்பிங் வசனங்கள் எழுதுபவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். ராணி பாரதியை எதிர்கட்சிக்காரர்கள் ஏளனம் செய்ய, அவர் பதிலடி கொடுத்து அவர்களை வாயடைக்க வைக்க வேண்டும். ஆங்கிலத்தில், யானை நடந்து வரும் போது, நாய் குலைக்கத்தான் செய்யும் என்று வசனம் வருகிறது. இவர்கள் யானை என்று வந்ததும், 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த வசனத்துக்கு எதற்கு அனைவரும் சிரிக்க வேண்டும் என்றுகூடவா யோசிக்க மாட்டார்கள்! சத்யேந்திரநாத் மிஸ்ரா பாடும் பாடல்கள் எந்தக் காலம் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றால், பைக்கில் செல்லும் இன்னொருவர், 'ரகிட ரகிட' என 'ஜகமே தந்திரம்' பாடலைப் பாடிக்கொண்டு செல்கிறார். படைப்பின் காலகட்டம் 1990-கள் என யாராவது சொல்லித் தொலைத்திருக்கலாம்.

Maharani
Maharani
SonyLiv
சோனி லைவில் வெளிவரும் தொடர்களில் மிகவும் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறது 'மகாராணி'. ஹூமா குரேஷியின் நடிப்புக்காகவும், சுபாஷ் கபூரின் கதைக்களத்துக்காகவும் நிச்சயம் மகாராணியைப் பாராட்டலாம்.