வெற்றிமாறன், சுதா, கெளதம், விக்னேஷ் சிவனின் பாவங்களும், பார்வைகளும்! #PaavaKadhaigal

"நிச்சயம் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்..." ஆணவக்கொலைகள் பற்றி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் நெட்ஃபிளிக்ஸுக்காக இயக்கியிருக்கும் ஆந்தாலஜி படமே 'பாவக்கதைகள்'!
குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கலாம்!
லவ் பண்ணா உட்றணும்!
நான்கு இயக்குநர்களில் இளையவரான விக்னேஷ் சிவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் லவ் பண்ணா உட்றணும்.
சாதி வெறிப்பிடித்த சாதிக்கட்சித்தலைவர், ஊருக்கு முன் 'சமநிலை' திருமணங்களை நடத்திவைத்துவிட்டு, பின்பக்கமாக தன் அடிப்பொடியைவைத்து ஆணவக்கொலைகள் செய்கிறார். அவருக்கு இரட்டை மகள்கள். இரண்டு பேருமே சாதி மாறி காதலிக்கிறார்கள். ஈவு இரக்கம் இல்லாமல் ஆணவக்கொலைகளை ஆணையிடும் அப்பா, தன் வீட்டுக்குள் என்ன செய்கிறார் என்பதே கதை.
அஞ்சலி ஜோதிலட்சுமி, ஆதிலட்சுமி என டபுள் ஆக்ட்டில் நடிக்க, அவரின் நண்பியாக நடித்திருக்கிறார் கல்கி கோச்சலின். அஞ்சலியின் அப்பா வீரசிம்மனாக பதம் குமாரும், அல்லக்கை நரிக்குட்டியாக ஜாஃபர் சாதிக்கும் நடித்திருக்கிறார்கள்.

அஞ்சலி நடிப்பிற்கு அஞ்சு நட்சத்திரங்கள் கொடுக்கலாம். அழுகை, சிரிப்பு என இரண்டிலுமே தன் அனுபவத்தை அசால்ட்டாக காட்டியிருக்கிறார். பதம் குமார், ஜாஃபர் சாதிக்கின் நடிப்பும் மிகையில்லாமல் இருக்கிறது. கல்கி கோச்சலினுக்கு படத்தில் முக்கிய வசனம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
ஆனால் நான்கு பாவக்கதைகளில் விக்னேஷ் சிவனின் கதையும், பார்வையும்தான் மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்று முடிப்பதில் என்ன பிரச்னை என்பதில் ஆரம்பித்து, ஆணவக்கொலை செய்யும் தந்தைக்கு, "நீ நான் செய்த தவறினை மறந்து மன்னித்திடு மகளே" எனப் பாடல் வைத்திருப்பதுவரை விக்னேஷ் சிவனின் பார்வைகள் எல்லாமே அபத்தம். கொலை செய்யும் அப்பாவிடம், அதுவும் அக்காவைக் கொலை செய்த அப்பாவிடம் ஒரு மகள் அனுமதி வாங்கிக்கொண்டிருப்பாரா, சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல் கொடூர கொலை செய்யும் அப்பா எப்படி சட்டென மாறி ராப் பாடல் கற்றுக்கொள்கிறார்?!
Grow Up Bro!
வான்மகள்!
"இந்த உடம்புக்காக நிறைய பேர் ஆசைப்பட்டு வருவாய்ங்க, அலைவாய்ங்க, அழகாப் பேசுவாய்ங்க, அடிச்சிக்குவாய்ங்க, மிருகம் மாதிரிகூட நடந்துக்குவாய்ங்க... ஆனா இந்த உடம்பு உன்னுது... உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. அதனால உன் உடம்பை மதிக்க கத்துக்க, பாதுகாக்க கத்துக்க, அழகா சுத்தமா வெச்சுக்க கத்துக்க!"
இப்படி மகள்களிடம் வசனம் பேசும் மதியழகு (சிம்ரன்) எப்படி ஒரு கட்டத்தில் மதியிழந்து யோசிக்கிறார் என்பதே கெளதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியிருக்கும் 'வான்மகள்'.

ஒரு மகன், இரு மகள்கள்களுக்குத் தந்தையான கெளதம் மதுரையிலும், ஒரு சென்னைக்காரராகவே 'வாழ்ந்திருக்கிறார்'. எந்தப் பதற்றமும் இல்லாத 'கூல்' டாடி. 'நீ எல்லோரையும் வெல்லுவ' என உடைந்துபோயிருக்கும் மகளிடம் இலக்கியத்தரத்தில் வசனம் பேசுகிறார்.
"அவனுங்க மிருக சாதி... சில பேர்தான் மிருகம் மாதிரி நடந்துப்பாங்க... அவனுங்களைத்தாண்டி நீ போயிட்டே இருக்கணும். உன்ன நான் கூட்டிட்டுப்போவேன்" என்று வசனம் பேசும் தந்தைக்கு நிஜத்தில் எந்தப்புரிதலும் இல்லை என்பது படத்தில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
ஆணவக்கொலை உங்க கப் ஆஃப் காபி இல்லை கெளதம்... Sorry!
தங்கம்
கதை, திரைக்கதை, வசனம் என இயக்கத்தை தவிர மற்ற எல்லாவற்றிலும் கூட்டணி போட்டிருக்கிறார் சுதா கொங்கரா. ஷான் கருப்பசாமி கதை, திரைக்கதை, வசனம் மூன்றிலும் சுதாவோட இணைந்து பணியாற்றி, திரைக்கதையில் கூடுதலாக கணேஷா என்பவரும் பணியாற்றியிருக்கிறார்.
1981-ம் ஆண்டு கோவை மாவட்டம் காடம்பாளையம் கிராமத்தில் நடக்கும் கதை. முஸ்லிமான திருநங்கை காளிதாஸ் ஜெயராமின் தங்கை பவானி ஶ்ரீயை (ஜி.வி.பிரகாஷின் சகோதரி) காதலிக்கிறார் சாதி இந்துவான சாந்தனு பாக்யராஜ். சாந்தனுவின் மேல் காளிதாஸுக்கும் காதல் இருக்க அதன்பிறகு அவர்களுக்குள் என்ன ஆனது, அவர்களுக்கு என்ன ஆனது என்பதே கதை.
திருநங்கை சத்தாராக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். வாழ்த்துகள் ப்ரோ... இனி எல்லா கதவுகளும் திறக்கும். சாந்தனுவுக்கும், பவானி ஶ்ரீக்கும் தங்கள் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான இடம் பெரிதாக இல்லை.

வசனங்களில் கவனம் ஈர்க்கிறது சுதா- ஷானின் 'தங்கம்'. "நான் யாரையாச்சு இப்படி தொட்டா ஒண்ணு தப்பா நினைப்பாங்க... இல்லைன்னா தள்ளிப்போவாங்க... யாரும் என்னை இப்படி அன்பா கட்டிப்பிடிச்சது இல்ல தங்கம்" என்று காளிதாஸ் உடைந்து அழும் இடம் கண்கலங்கவைக்கிறது.
"அடி உதை எனக்குப் புதுசா தங்கம்... நான்லாம் வந்தா அங்க வீடு கொடுக்கமாட்டாங்க தெரியுமா" என்கிற வசனமும் யதார்த்த நிலைமையை எடுத்துரைக்கிறது.
"கொலை பண்ணவனைவிட கொலை பண்ணவிட்டவன்தான் பெரிய கொலைகாரன்" என்கிற வசனத்தில் முடிகிறது படம். நான்கு கதைகளில் இந்தக் கதையில் மட்டுமே எதிர்க்குரல் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. ஆனால், பார்வையாளர்கள் அழுது புலம்பவேண்டும் என்பதற்காகவே காளிதாஸின் காட்சிகளை நீட்டி முழக்கி கழிவிறக்கம் கோருகிறார் சுதா.
கிளைமாக்ஸ் சிறப்பு... ஆனால் இன்னும் கொஞ்சம் கதையில் மெனக்கெட்டிருக்கலாம் சுதா - ஷான்!
ஓர் இரவு!
வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஓர் இரவு'. பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, ஹரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆணவக்கொலையை மிகவும் நேரடியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். பெங்களூருவுக்குபோன கர்ப்பிணி மகளை வளைகாப்பு நடத்த ஊருக்குக் கூட்டிவரும் தந்தை அங்கே என்ன செய்கிறார் என்பதே கதை.
"நீ படிச்சதுனாலதான் இப்படி பண்ணிட்டன்னு அப்பா எங்களைப் படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாருக்கா!"

"நான் கொடுத்த தண்ணியைக் குடிக்கக்கூட உங்களுக்குத் தயக்கமா இருக்கு... உங்களை நம்பி நாங்க எப்படி உங்க ஊருக்கு வரமுடியும்?"
"புள்ளங்களை நாம வளர்க்கும்போது ஊராங்க கூட வந்துச்சு... இந்த ஊருக்காக நீங்க நிக்குறீங்களே..."
- வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. பெங்களூரு வாழ்க்கையில் 'தண்ணி' கலப்பதையும், கிராமத்துக்குள் 'மேகி' நுழைவதையும் தன் ஸ்டைல் வசனங்களின் மூலம் கடத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஆனால், வெற்றிமாறனின் படமாக இந்தக் கதையில் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்பது பெரிய ஏமாற்றம்!
ஆணவக்கொலைகள் குறித்த பார்வையில் நான்கு இயக்குநர்களுக்குள் பெரிய குழப்பம் இருந்திருக்கிறது என்பது படத்தின் முடிவில் நிரூபணமாகிறது. ஆணவக்கொலையின் பயங்கரத்தையும், அதற்கான தீர்வையும் சொல்லாமல் 'பாவக்கதைகள்' அதை ரொமான்டிசைஸ் செய்திருக்கிறது.