Published:Updated:

நவரசா: சித்தார்த், பார்வதியின் நடிப்பில் ‘இன்மை’... பயம் எனும் ரசம் எப்படியிருந்தது?

'பயம்' என்ற ரசத்தைக் கடத்த, 'ஹாரர்' கதை என்ற சுலபமான ரூட்டில் பயணித்திருக்கிறார்கள். சித்தார்த், பார்வதி போன்ற தேர்ந்த நடிகர்களை வைத்து ஒரு ஸ்லோபேர்ன் (Slowburn) த்ரில்லராக படம் நகர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவரசாவின் பல ரசங்களில் முக்கியமான ரசம் ‘பயம்’(Bhaya). 'இன்மை' என்கிற பெயரில் சித்தார்த், பார்வதி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க, புதுமுக இயக்குநர் ரதிந்திரன் பிரசாத் இயக்கியிருக்கிறார். இந்த கதைக்கு பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான விஷால் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். அதன் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இங்கே!

புதுச்சேரியில் ஆள் அரவமற்ற பங்களாவில் ராணியாக இருக்கும் பார்வதியைச் சந்தித்து ஒரு கையெழுத்து வாங்குவதற்காக வருகிறார் சித்தார்த். கேலிகிராஃபி, பிற கலைகள் குறித்துச் செல்லும் அவர்களின் (இரட்டை அர்த்த) உரையாடல், அதன் பின் இருக்கும் ஒரு திகிலூட்டும் ஃப்ளாஷ்பேக்கையும், அது ஒளித்து வைத்திருக்கும் பழிவாங்கும் படலத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.

நவரசா - இன்மை
நவரசா - இன்மை

'பயம்' என்ற ரசத்தைக் கடத்த, 'ஹாரர்' கதை என்ற சுலபமான ரூட்டில் பயணித்திருக்கிறார்கள். சித்தார்த், பார்வதி போன்ற தேர்ந்த நடிகர்களை வைத்து ஒரு ஸ்லோபேர்ன் (Slowburn) த்ரில்லராக படம் நகர்கிறது. இந்த ஆந்தாலஜியில் ஓரளவேனும் ஒரு புதியதொரு கதைக் களத்துடன் வந்திருப்பது இந்த 'இன்மை'யாகத்தான் இருக்கும். குறும்படத்துக்கே உரிய எழுதப்படாத இலக்கணங்களான த்ரில், ட்விஸ்ட் கொண்டு முடியும் க்ளைமாக்ஸ் என எல்லாமும் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

சித்தார்த், பார்வதி இருவருக்குமான அந்த உரையாடலில், சித்தார்த்தின் உண்மை முகம் புலப்பட்டபின் வரும் வசனங்கள், அதற்கு அவரின் உடல்மொழி படத்தின் டெம்போவை ஏற்றியிருக்கின்றன. பார்வதி, தேம்பி அழும் அந்த இறுதி காட்சியில் ஸ்கோர் செய்கிறார். இளவயது பார்வதியாக வரும் அம்மு அபிராமி தன் கதாபாத்திரத்தின் ஆழம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

நவரசா - இன்மை
நவரசா - இன்மை

எடுத்துக்கொண்ட கதைக் களத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஸ்க்ரிப்டுக்காக உழைத்திருக்கிறார் இயக்குநர் ரதிந்திரன். விஷால் பரத்வாஜின் பின்னணி இசை, ஒரு ஹாரர் படத்துக்கான அதிர்வுகளை அவ்வப்போது கடத்தியிருக்கிறது. படம் நெடுகிலும் விரவிக்கிடக்கும் பச்சை வண்ணம், திரையில் நிறைந்திருக்கும் அமானுஷ்யம் போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் வீரஜ் சிங் கோஹில் மற்றும் கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகனின் உழைப்பு தெரிகிறது.

‘நவரசா’ : ‘கிட்டார் கம்பி மேலே நின்று' இதை நாங்க சொல்லியே ஆகணும் கெளதம் மேனன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படம் 'பயம்' என்ற ரசத்தை இறுதிவரை கடத்த முயன்றாலும், அந்த ட்விஸ்ட் வெளிப்பட்ட பின்பு, அந்த உணர்வு சுத்தமாக மிஸ்ஸான ஃபீலிங்கே வருகிறது. புதியதொரு ட்ரீட்மென்ட் கொண்ட கதைக்களம் என்றாலும் இறுதியில் பழிவாங்கும் டிராமாவாக மட்டும் படம் தன்னை சுருக்கிக்கொள்வது ஏமாற்றம். 'இன்மை'யில் இருக்கும் சிக்கல், அந்தப் பய உணர்வின் போதாமைதான்!

இருந்தபோதும், பெரும்பாலான பிற ரசங்கள் சிங்கிள் அடிக்கவே தட்டுத் தடுமாற, சித்தார்த் தயாரித்திருக்கும் 'இன்மை' பவுண்டரி லைனைத் தொட்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு