Election bannerElection banner
Published:Updated:

ஒரு பெண்ணே இப்படிச் செய்யலாமா... சர்ச்சைகளைக் கடந்து `பாம்பே பேகம்ஸ்' வெப் சீரிஸ் எப்படியிருக்கிறது?

Bombay Begums
Bombay Begums

கதைமாந்தர் ஒவ்வொருவரும் சரி - தவறு, நியாயம் - அநியாயம், கற்பு, தர்மம் - அதர்மம் போன்ற அனைத்தையும் தூக்கிக் கடாசிவிட்டு, தங்களின் சூழலை, தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, தங்களின் தேவைக்கு ஏற்றவாறு எவ்விதம் சாதகமாக்கிக்கொள்கின்றனர்.

வயது, பொருளாதார அடுக்கு, வளர்ந்த சூழல், குடும்பப் பின்னணி, குணம் போன்ற பல விஷயங்களில் வேறுபட்ட ஐவர். வாழ்க்கை விளையாட்டில் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் புள்ளி, அந்த ஐவர் கடக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையைச் செலுத்தத் தேர்ந்தெடுத்த திசை, அதில் எதிர்கொண்ட உறவு மற்றும் உணர்வுச் சிக்கல்கள், இவையெல்லாவற்றையும் துணிவுடன் இவர்கள் திறம்பட எதிர்கொண்டார்களா? தங்கள் வாழ்வின் இலக்காக அவர்கள் தீர்மானித்ததை அடைந்தார்களா? அதற்காக என்னவெல்லாம் செய்தார்கள்? - இந்தக் கேள்விகளுக்கான விடையை 'பாம்பே பேகம்ஸ்' என்று கலக்கலான காக்டெயில் ஆக்கி நெட்ஃப்ளிக்ஸில் வெளியிற்றிருக்கிறார் இயக்குநர் அலங்க்ரிதா ஸ்ரீவத்ஸவா.

பாம்பே பேகம்ஸ்
பாம்பே பேகம்ஸ்

ராணி, பாத்திமா, ஆயிஷா, லில்லி, ஷாய் - பரபரப்பான மும்பையில் வசிக்கும் ஐவர். மும்பையில் இருக்கும் வங்கியொன்றில் ஆண்கள் சூழ் கார்ப்பரேட் போரில் வென்று சில நாள்களுக்கு முன்பு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ராணி. உயர் பதவியை ஏற்ற சில நாள்களுக்குள்ளாகவே தன் கணவரின் முதல் தாரத்தின் மகன் மூலமாக ஒரு பிரச்னையைச் சந்திக்க நேர்கிறது. மகன் பாலியல் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்குப் போய்விட்டு வரும் வழியில் ஏற்படும் விபத்தில் ஒரு சிறுவன் தன் காலை இழக்க, அவன் யார் எனில் சற்று முன் தன் மகன் 'கஸ்டமராக' சென்று வந்த பாலியல் தொழிலாளியின் மகன்தான் என்பது தெரிகிறது. விபத்தைக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு போகாமல் இருக்க தன் மகனுக்காக பாலியல் தொழிலாளி லில்லி டீலிங் பேச, குடும்பம், தன் அலுவலக இமேஜைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ராணி அந்த டீலிங்கிற்கு சம்மதிக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அலுவலகத்தில் அவரை எந்நேரமும் விரட்டிவிடத் துடிக்கும் ஆண்கள்... இவர்களுக்கு இடையில் ராணி தன்னை, தன் பதவியை எப்படித் தக்க வைத்துக்கொள்கிறார், தன் குடும்பத்தை சிக்கல்களில் இருந்து விடுவித்தாரரா என்று நீளும் கதை ஒரு புறம். மற்றொருபுறம் IVF மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கும் பாத்திமா. இவர் ராணிக்குக் கீழ் பணிபுரிகிறார். அதே வங்கியில் தொடக்கநிலை ஊழியராக இருந்து கவனக்குறைவால் செய்த பெரிய தவறு ஒன்றிற்காக பாத்திமாவினால் பணிநீக்கம் செய்யப்பட்ட சிறு நகரம் ஒன்றிலிருந்து வேலை குறித்த கனவுகளைச் சுமந்தபடி வந்திருக்கும் ஆயிஷா! ராணியின் கணவரின் மூத்த தாரத்தின் பதின்ம வயது மகள் ஷாய் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி ஆறு எபிசோடுகளாக விரியும் காட்சிகளின் மூலம் பேகத்தை பேஷ் சொல்ல வைத்திருக்கிறது திரைக்கதை.

பாம்பே பேகம்ஸ்
பாம்பே பேகம்ஸ்

தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எதையும் செய்யும் லேடி ராணி தந்திரியாக பூஜா பட்! பதவிச் சண்டையில் அத்தனை ஆண்களுக்கு இடையில் ஆக்ரோஷம் காட்டும் இடங்களிலும், கணவரின் குழந்தைகளின் அன்பைப் பெற தொடர்ச்சியாக முயன்று ஏங்கும் இடங்களிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பாலியல் தொழிலாளி மற்றும் பார் டான்சர் லில்லியாக அமிர்தா சுபாஷ். மும்பை போன்ற பெரு நகரத்தில் தன்னைத் தொலைத்த பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிக்கும்படியான நடிப்பினால் ஈர்க்கிறார். தன்னைப்போல தன்மகனின் வாழ்வும் ஆகிவிடக்கூடாது என்று ராணியிடம் வெடித்துச்சிதறும் காட்சிகளிலும், ஆயிஷாவிடம், “சாரி, ப்ளீஸ் என அந்த ஆள் கிட்ட கெஞ்சுவதைத் தவிர உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? உனக்கு வேற என்ன தெரியும்?” என்று சீறும் இடத்திலும் சிறப்பான பர்ஃபாமென்ஸ்!

படிப்பு ,பொருளாதார அந்தஸ்து, தன் திறமைகளை நிரூபித்து வாங்கும் பதவியுயர்வு என அனைத்திலும் தன் கணவனைவிட `தான் மேல்’ என முன்னேறியிருந்தாலும் கடைசி வாய்ப்பாக IVF செய்தாவது ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற டிபிகல் பெண்ணியப் பார்வையைச் சுமக்கும் பாத்திமாவாக சஹானா கோஸ்வாமி. நீ எத்தனை சாதித்தாலும் எவ்வளவு பெரிய பதவிகளை அடைந்தாலும் ஒரு பெண்ணின் மீது இந்தச் சமுதாயம் குழந்தையை மையப்படுத்தி, கருவுறுதலை மையப்படுத்தி, மகப்பேற்றினையும் தாய்மையையும் மையப்படுத்தி வைக்கும் அழுத்தங்களை பூடகமாக நமக்குள் கடத்துகிறார்.

பாம்பே பேகம்ஸ்
பாம்பே பேகம்ஸ்

வாழ்க்கை, வேலை, தன் பாலினம் குறித்த பல குழப்பங்கள் நிறைந்த இரு பாலின ஈர்ப்பாளரான ஆயிஷாவாக பிலபிதா போர்தாகூர். வீட்டு ஓனரால் வெளியேற்றப்பட்டு மழையில் நனையும் காட்சியிலும் மறுநாள் பாத்ரூமிற்குள் ராணியிடம் உண்மையை உடைத்து அழும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பு.

ராணியின் கணவரின் மூத்த தாரத்தின் மகள் ஷாயாக ஆத்யா ஆனந்த். பதின்பருவத்தில் எல்லோருக்குமே இயல்பாக இருக்கும் “என் மார்பகங்கள் எப்போது பெரிதாகும்?", “ நான் எப்போது பூப்பெய்துவேன்?" போன்ற பல கேள்விகளுடனும், “தன்னுடன் படிக்கும் நண்பனின் கவனத்தைத் தன்வசம் திருப்ப என்ன செய்ய வேண்டும்?”, "இது அன்பா… காதலா… ஈர்ப்பா?”, “கணவனின்/நாம் விரும்பும் ஆணின் நலத்திற்காக நாம் ஏன் விரதம் இருக்க வேண்டும்?” போன்ற அத்தனை கேள்விகளையும் குழப்பங்களையும் தூக்கிச் சுமக்கும் பெண். அதே சமயம், “உன் உடல்… உன் உரிமை… உனக்கு யாருடன் தோன்றுகிறதோ அவருடன் நீ உறவு வைத்துக்கொள்ளலாம்” என சிற்றன்னையை பார்த்து சொல்லும் இடத்தில் நம்மை அதிரச் செய்கிறார்.

கதைமாந்தர் ஒவ்வொருவரும் சரி - தவறு, நியாயம் - அநியாயம், கற்பு, தர்மம் - அதர்மம் போன்ற அனைத்தையும் தூக்கிக் கடாசிவிட்டு, தங்களின் சூழலை, தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, தங்களின் தேவைக்கு ஏற்றவாறு எவ்விதம் சாதகமாக்கி கொள்கின்றனர். இந்த ஆண் - பெண் பேதம் தாண்டிய மனித இயல்பை படு போல்டாக சொல்லியிருக்கிறது இந்த சீரிஸ்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, நடிகர்களின் தேர்வு என எதிலுமே வழக்கம்போல எந்தக் குறையும் வைக்கவில்லை நெட்ஃப்ளிக்ஸ்.

பாம்பே பேகம்ஸ்
பாம்பே பேகம்ஸ்

ஒரு நிறுவன நிர்வாகத்தின் முடிவு என்பது தன்னை தாண்டித்தான் தன் குழுவை, தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைப் பாதிக்கும் எனும் மனப்பாங்குதான் ஒரு லீடரின் ஆகச்சறந்த பண்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, தனக்கு கீழே பணிபுரிந்த ஒரு பெண்ணிற்கு, சக உயர் அதிகாரியால் பாலியல் கொடுமை நடந்திருக்கிறது. ஆனால், அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதும், அதன் மூலமாக தனக்கு கிடைக்கும் பதவி உயர்வை ராணி பெறுவதும் எப்படிச் சரியாகும் என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது.

பொதுவாகவே, ஆண்கள் தங்களுக்குத் தேவையான சமயங்களில் தேவையான விதங்களில் அல்லது முறைகளில் ஒரு பெண்ணை/பெண்களை உபயோகித்துக் கொள்வது தவறு என்ற பரவலான கருத்து இங்கு உண்டு. அவ்விதம் ஆண்கள் செய்வது தவறு என்றால்… அதே தவற்றை ஒரு பெண் அல்லது பெண்கள் செய்வது மட்டும் எப்படி சரியாகும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பெண்ணியம், பெண் சுதந்திரம், வுமன் எம்பவர்மெண்ட் என்ற போர்வையில் ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணிற்கு தன் கண்ணுக்கு முன் நேர்ந்த பாலியல் கொடுமையை கண்டிக்காமல் விடுவதுடன் அதை தனக்கு… தன் சூழலுக்கு… தன் பதவி உயர்வுக்குச் சாதகமாக்கி கொள்வதை என்ன காரணங்களை சொல்லி நியாயப்படுத்துவது அலங்க்ரிதா?
பாம்பே பேகம்ஸ்
பாம்பே பேகம்ஸ்

அதேபோல, குழந்தைகளைத் தவறாக காட்சிப்படுத்தியதாகக் கூறி இந்தத் தொடருக்கு ட்விட்டரில் பெரும் எதிர்ப்பலைக் கிளம்பியது. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், 13 வயது பதின் பருவக்குழந்தை ஒன்று கொக்கைன் எனும் போதைப் பொருளை உபயோகிப்பதைப் போன்று இருந்தது. அதேபோல் செல்ஃபி தொடர்பான மற்றொரு காட்சியும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நெட்ஃப்ளிக்ஸுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டது. தற்போது இது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

மற்றபடி, பல்வேறு சமூக அடுக்குகளைச் சார்ந்த பெண்கள் ஒரு மாபெரும் நகரத்தில் எப்படித் தங்களின் வாழ்வுக்காக, தங்களின் சுதந்திரத்துகாகப் போராடுகிறார்கள் என்பதை எந்தச் சமரசமும் இல்லாமல் பதிவு செய்தமைக்காக இந்த 'பாம்பே பேகம்ஸ்' தொடரை நிச்சயம் பார்க்கலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு