பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நம்மைப்போல் இருவர்!

Web Series
பிரீமியம் ஸ்டோரி
News
Web Series

Web Series

நாம் மனதில் நினைக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துவிட்டு, சில நாள்களோ, மாதங்களோ, வருடங்களோ கழித்து அதைப் புரட்டிப் பார்த்தால், நமக்குப் புலப்படுவது ஒரே ஒரு விஷயம்தான்... நம் வாழ்வில் நம்மால் ஒப்புக்கொள்ள, சகித்துக்கொள்ளவே முடியாத கதாபாத்திரம் நாமாகவே இருப்போம்.

நம்மில் இருக்கும் தவறுகளை நீக்கி, நம்மின் மேம்படுத்தப்பட்ட ‘பெட்டர் பட்டர்’ வெர்சனை யாரேனும் கொடுத்தால் எப்படியிருக்கும்? நெட்ஃபிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘லிவிங் வித் யுவர்செல்ப்’ என்னும் காமெடி வெப் சீரிஸ் இதைப் பற்றித்தான் பேசுகிறது.

நின்ற இடத்திலேயே தூங்கும் சோம்பேறி மைல்ஸ் எலியட். மூச்சு விடுவதையே கடுமையான வேலை என நினைக்கும் நபர். வீடோ அலுவலகமோ எப்போதும் ஒருவித நித்திரையில்தான் இருப்பார். வேலையை விட்டு நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். அவருக்குக் குழந்தையும் இல்லை. மனைவி மருத்துவமனைக்குச் செல்ல வற்புறுத்துவதையும் தட்டிக் கழிக்கிறார்.

அலுவலகத்தில் திடீரென சக பணியாள் ஒருவர் சூப்பர் ஸ்மார்ட் ஆகிறார். அவரின் ஆலோசனைப்படி ஒரு கொரிய ஸ்பாவுக்குச் செல்கிறார். அந்த ஸ்பாவில் இவருக்கு 50,000 டாலர்களுக்கு டி.என்.ஏ புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. ‘தூங்கி எழுந்தால் துபாய்’ என்பதுபோல ‘படுத்து எழுந்தால் புது மனிதன்.’ புதிய மனிதனாக வருகிறார் மைல்ஸ். மைல்ஸிடம் சொல்லாமல், அவரைப் புதைத்துவிட்டு அவரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை அவரது பழைய நினைவுகளுடன் க்ளோனிங் செய்து வெளியிடுகிறார்கள்.

அலுவலகம், வீடு என எல்லா இடங்களிலும் இப்போது மைல்ஸ்தான் சூப்பர் ஸ்மார்ட் ஸ்டார். ஆனால், பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. காட்டுப்பகுதியில் ஒழுங்காகப் புதைக்கப்படாத நிஜ மைல்ஸ் எழுந்துவிடுகிறார். இப்போது இரண்டு மைல்ஸ். வேலையில் நீடிக்க ஸ்மார்ட் மைல்ஸ் தேவை. வீட்டிலும் மனைவிக்கு ஸ்மார்ட் மைல்ஸ்தான் எல்லாம். நிஜ மைல்ஸை யாருக்குமே பிடிக்கவில்லை என்றாலும், நிஜ மைல்ஸை என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது. இனி என்ன நடக்கிறது என்பதை எட்டு எபிசோடுகளாக வெளியிட்டிருக்கிறார்கள்.

நம்மைப்போல் இருவர்!

மைல்ஸ் எலியட்டாக மார்வெல் படங்களில் வரும் ‘ஏன்ட் மேன்’ பால் ரட். ஒரே லுக், ஆனால் ஒன்றில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், இன்னொன்றில் சோம்பலாக இருக்க வேண்டும். காமெடி கதாபாத்திரம் என்பதால் அதகளம் செய்திருக்கிறார். ஸ்டாண்ட்-அப் காமெடிகளில் அதிகம் தோன்றும் ஐலிங் பியா மைல்ஸின் மனைவி கேட்டாக நடித்திருக்கிறார். இரண்டு கணவர்களையும் அவர் டீல் செய்யும் விதம் அடேங்கப்பா ரகம். அதேபோல், எரிச்சலூட்டும் மேனேஜர் சொல்லும் ஆயாச ஐடியாக்களை, ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், திட்டித் தீர்க்கும் காட்சியும் செம.

உலகில் நாம் ஏன் சாதாரணனாக இருக்கக்கூடாது, அது ஏன் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் ஸ்மார்ட் சக்தி இருக்க வேண்டும், ரேங்கிங்கில் டாப் 3-க்குள் வருபவர்கள் மட்டும்தான் பிரபலமாக, எல்லாம் கிடைக்கப்பெறும் வாழ்க்கையை வாழ வேண்டுமா? அனைவரும் க்ளோனிங்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படியே அனைவரும் க்ளோனிங் செய்து சூப்பர் ஸ்மார்ட் ஆனால், அதிலும் ரேங்கிங் அடிப்படையில் பின்தங்கித்தானே இருக்கப்போகிறோம் போன்ற கேள்விகளை அமைதியாக நம்முன் எழுப்புகிறது இந்தத் தொடர்.

ஒரு எபிசோடில் இரண்டாம் பாதியில் வரும் நிகழ்வுகளின் வேறு ஒரு கோணத்தை அடுத்த எபிசோடின் முதல் பாகத்தில் காட்டுகிறார்கள். இப்படி முன்பின்னாகக் கதை சொல்லும் உத்தி, அடுத்தடுத்த எபிசோடுகளைப் பார்க்க வைப்பதற்கான ஒரு தூண்டிலாக இருக்கிறது.

ஜனாதன் டேடன், வெலேரி ஃபேரிஸ் இணை இந்த வெப் சீரிஸை நான் லீனியராக இயக்கியிருக்கிறார்கள். 30 நிமிடத்தில் முடியும் எபிசோடு என்பதால் ஒரே அமர்வில் முழுவதுமாகப் பார்த்துவிடலாம் என்பதும் கூடுதல் ப்ளஸ். அதேபோல், கார்ப்பரேட் ஆபீஸ், ஸ்பா போன்ற இடங்களில் இருக்கும் வாசகங்களும், கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரான வசனங்களும் சிரிக்க வைக்கின்றன. இதே ஜானரில் ‘வியாபாரி’ உட்பட சில படங்களை நாம் ஏற்கெனவே பார்த்திருப்போம் என்பதுதான் இதிலிருக்கும் மைனஸ்.

சிட்காம் வகைமாதிரியில் வந்திருக்கும் இந்த நகைச்சுவைத் தொடர் அர்த்தமுள்ள ஒரு விடுமுறைநாள் டைம்பாஸ்.