Published:Updated:

`மிஷன் சக்சஸ்!'- ஒரே திட்டத்தில் இந்தியர்களின் அபிமானம் பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்

மாதம் குறைந்தது 500 ரூபாய் கொடுத்தால்தான் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவைப் பெறமுடியும் என்ற நிலை பல மாதங்களாக இருந்துவந்தது.

நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ்

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இன்டர்நெட் ஊடுருவல் பெருமளவில் நடந்துவிட்டதால், இருந்த இடத்திலேயே விரும்பும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை விரும்பும் நேரத்தில் உயர்தரத்தில் ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்க்கமுடிகிறது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பெருமளவில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் 2015-ம் ஆண்டு சர்வதேச நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவிற்கு வந்தது. நல்ல நிகழ்ச்சிகள், படங்கள் இருந்தும் இந்தியாவில் பெருமளவில் கொண்டாடப்படாமலேயே இருந்தது நெட்ஃப்ளிக்ஸ். காரணம் அதன் விலை. மாதம் குறைந்தது 500 ரூபாய் கொடுத்தால்தான் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவைப் பெறமுடியும் என்ற நிலை அப்போது இருந்தது.

நெட்ஃப்ளிக்ஸின் விலைத்திட்டங்கள்
நெட்ஃப்ளிக்ஸின் விலைத்திட்டங்கள்

இது சரிப்பட்டுவராது என்று மாத்தியோசித்து மொபைல் ஒன்லி திட்டத்தை ஜூலையில் அறிமுகப்படுத்தியது நெட்ஃப்ளிக்ஸ். ரூபாய் 199-க்கு கிடைக்கும் இந்த சந்தாவைப் பெறுவதன்மூலம் நெட்ஃப்ளிக்ஸை மொபைல் சாதனங்களில் மட்டும் பார்க்கமுடியும். SD தரம் வரை அதில் சப்போர்ட் இருக்கும். இந்தத் திட்டத்திற்குத்தான் வேற லெவல் வரவேற்பு கொடுத்திருக்கின்றனர் இந்தியர்கள்.

இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸின் காலாண்டுக் கூட்டத்தில்(q3) அதன் தலைமை தயாரிப்பு அதிகாரியான கிரகரி.கே.பீட்டர்ஸ் பேசினார். அதில், "இந்தியாவில் நாங்கள் அறிமுகப்படுத்திய ₹199-க்கான மொபைல் பிளான் நினைத்ததைவிட மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதை மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். புதிய பிளான்களை அந்தந்த நாட்டின் வாடிக்கையாளர்களின் தன்மைக்கு ஏற்ப வகுக்க உள்ளோம். இது எங்களுக்கு வெற்றியைத் தரும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார் அவர்.

நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ்

வெறும் பிளான் மட்டும் போதுமா நிகழ்ச்சிகளும் முக்கியமல்லவா...! அப்படி தனது தளத்தில் ஹிட்டடித்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டது நெட்ஃப்ளிக்ஸ். சேக்ரட் கேம்ஸ் சீசன் 2, 13 ரீஸன்ஸ் வொய் சீசன் 3, மனிஹெய்ஸ்ட் சீசன் 3 என சீரிஸ்கள் வரிசையாக ஆகஸ்ட் மாதம் வெளியான முக்கிய சீரிஸ்கள் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கிறது அந்த நிறுவனம். இதில் இந்திய அளவில் நெட்ஃபிளிக்ஸில் அதிகமாகப் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் சேக்ரட் கேம்ஸ் சீசன் 2 தானாம்.

இப்போது வரை நெட்ஃபிளிக்ஸ் ஆங்கிலம் அல்லாத உள்ளூர் மொழிகளில் மட்டும் 100 சீசன்களுக்கும் மேலான நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளதாகவும், 7 நாடுகளின் ஒரிஜினல் வெப் சிரீஸ்களை வெளியிட்டுள்ளதாகவும், 2020-ல் கூடுதலாக 130 தொடர்களை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vikatan

நெட்ஃபிளிக்ஸ், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் உலக அளவில் 6.8 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. இது அவர்கள் எதிர்பார்த்த 7 மில்லியன் அளவை விட சற்றே குறைவுதான். வரும் மாதங்களில் ஆப்பிள் மற்றும் டிஸ்னி போன்ற பெரும் நிறுவனங்களும் இந்தச் சந்தையில் நுழையவுள்ளதால் நெட்ஃபிளிக்ஸுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது. என்ன நெட்ஃபிளிக்ஸ் ரெடியா...?