2019 ஸ்பெஷல்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அவர்தானா அந்த அரசி?

 அவர்தானா அந்த அரசி?
பிரீமியம் ஸ்டோரி
News
அவர்தானா அந்த அரசி?

Queen என்னும் வெப் சீரிஸ்

ரு பெண் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்கிறார்; பின் தமிழக முதல்வராகிறார். உடனே நம் அனைவருக்கும் ஒரு பெயர் நினைவுக்கு வரும். ஆனால், எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகியிருக்கும் Queen என்னும் வெப் சீரிஸ், ‘சக்தி சேஷாத்ரி’ என்னும் பெண்ணைப் பற்றிய கதை என்கிறது.

சிறுவயதிலிருந்து வறுமையுடன் வளரும் சக்தி புத்திசாலி மாணவி. பள்ளியில் அவளுக்கு என்று ஆசிரியைகள் மத்தியில் தனி மரியாதை. அம்மா ரங்கநாயகி, சரியான வாய்ப்புகள் வராமல் சிரமப்படும் துணைநடிகை. ஸ்கூல் டாப்பராக வரும் சக்தி, கல்லூரி சென்று படிக்க ஆசைப்படுகிறாள். ஆனால் அம்மாவோ, அவளை நடிகையாக்க நினைக்கிறார். விருப்பமேயில்லாமல் நடிகையாகும் சக்தி, தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டாரான ஜி.எம்.ஆர் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகிறார். நீங்களும் நானும் முதல் பத்தியில் யார் பெயரை நினைத்தோமோ, அவர் வாழ்வில் என்னவெல்லாம் நடந்ததோ, அவை சற்றே மாறுதல்களுடன் சக்தியின் வாழ்க்கையில் நடக்கின்றன.

தன் வாழ்வில் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார் சக்தி. முதலில் தாய், பின்பு ஜி. எம். ஆர் என நபர்கள் மாறுகிறார்களே ஒழிய, துரோகங்கள் சக்தியின் வாழ்வில் முடிவற்றுத் தொடர்கின்றன. கசிந்துருகும் நபர்களும் சக்தியின் வாழ்வில் ஒரு ரயில் பயணியாய்த் தற்காலிக ஆறுதல் தருகிறார்களே அன்றி, நிரந்தர மீட்பர்கள் என யாருமில்லை. இயக்குநர் ஸ்ரீதர், சிஸ்டர் ஃப்ளாவியா, கார் ஓட்டுநர் சையது என, சிலர் மட்டுமே சக்தியின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நபர்கள். ஆயினும், இந்த அன்பைக் கடந்த துரோகங்கள்தான் சக்தியை, அவரின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு முன்னகர்த்துகின்றன.

பள்ளிவயது சக்தியாக அனிக்கா, திரை நாயகியாக அஞ்சனா, அரசியல் ஆளுமையாக ரம்யா கிருஷ்ணன் என மூன்று பரிணாமங்களில் சக்தி சேஷாத்ரியின் வாழ்க்கை விரிகிறது. துடுக்கான பெண் அனிக்கா என்றால், திரையிலும் வாழ்விலும் துரோகங்களைச் சுமந்து அதிலிருந்து மீளும் பெண் அஞ்சனா. பணக்காரத் தோழியின் வீட்டில் படும் அவமானத்தை அனிக்கா அவ்வளவு யதார்த்தமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். சைதன்யா ரெட்டியுடனான காதல் காட்சிகளிலும், அதற்குப்பின்னான காட்சிகளிலும் மனம் கவர்கிறார் அஞ்சனா.

Queen
Queen

வெப்சீரிஸ், ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளருக்கு அளிக்கும் பேட்டியில் ஆரம்பித்து, பதில்கள் சம்பவங்களாக விரிகின்றன. வாழ்வின் அத்தனை துன்பங்களையும் கடந்து வென்ற நபரின் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன். படத்தின் பெரும்பகுதியில் ரம்யா கிருஷ்ணனின் குரல்தான் நமக்கு அச்சம்பவத்தின் வீரியத்தை உணர்த்துகின்றன. ஜி.எம்.ஆராக இந்திரஜித் சுகுமாறன், சக்தியின் சிறுவயது அம்மாவாக சோனியா அகர்வால், முதிர்ந்த அம்மாவாக துளசி, சூர்யகலாவாக விஜி சந்திரசேகர் என ஒவ்வொரு கதாபாத்திரத் தேர்வும் கச்சிதம்.

அனிதா சிவகுமாரன் எழுதிய ‘குயின்’ என்னும் நாவலை அடிப்படையாக வைத்து, ரேஷ்மா கட்டாலா இதன் கதையை எழுதியிருக்கிறார். கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார்கள். சக்தி என்னும் பெண்ணின் வாழ்க்கை, வெவ்வேறு காலகட்டங்களில் மாறும் காட்சிகள் அவ்வளவு அழுத்தமாய் இருக்கின்றன.

படம் டெக்னிக்கலாக மிரட்டுகிறது. ஒரு தமிழ் வெப் சீரிஸுக்கான மெனக்கெடலில் குயின் தொட்டிருப்பது, புது உச்சம். தர்புகா சிவாவின் இசை, எஸ்.ஆர்.கதிர், வேல்ராஜ், மணிகண்டன் ஆகியோரின் ஒளிப்பதிவு, ஏகா லக்கானியின் ஆடை வடிவமைப்பு என, நாம் பெரிய திரையில் கண்ட அத்தனை பெயர்களும் இந்த வெப் சீரிஸில் ஜொலிக்கின்றன.

கலையரசி, பிகேபி எனப் புத்தகத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களை சக்தி சேஷாத்திரி, ஜி.எம்.ஆர் என மாற்றியிருக்கிறார்கள். ஆனால், வெப் சீரிஸ் முழுக்க இப்படியான பெயர் மாற்றங்கள் சலிப்பைத் தருகின்றன. கருணாமூர்த்தி, ‘சத்ரபதி’ கதிரேசன், பெரியவர் ரத்தினசாமி, அய்யாத்துரை, அஞ்சுளா, சூர்யகலா என நீளும் இந்தப் பெயர் மாற்றங்கள் ஒருவித ‘லொள்ளு சபா’ பார்க்கும் உணர்வைத் தருகின்றன. அதேபோல், 10 மணி நேரத்துக்கு நீளும் வெப் சீரிஸில் 30 நிமிடங்களை நடந்தே கடக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையைத் தெளிவாக ஆராய்ந்து, பல அடுக்குகளுடன் காட்டுவது அவசியம்தான் என்றாலும், இப்படி எல்லாவற்றையும் இழுத்திழுத்து நகர்த்துவது நம்மை ஃபார்வர்டு பட்டனை அழுத்த வைக்கிறது.

முதல் சீசன் முடிந்திருக்கிறது. சக்தி சேஷாத்ரி வாழ்க்கையின் மர்மப் பக்கங்கள், இருண்ட பக்கங்கள் ஆகியவற்றை அடுத்தடுத்த சீசன் வெளிச்சம்போட்டுக் காட்டப்போகிறதா, பார்ப்போம்.