Published:Updated:

வாழ்க்கை என்பது பழிதீர்த்தல்!

ஹன்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹன்டர்ஸ்

வெப் சீரிஸின் பாதிக்கதை, ஆஸ்விச் (Auschwitz-Birkenau) வதைமுகாம்களில் நடக்கிறது.

வாழ்க்கை என்பது பழிதீர்த்தல்!

வெப் சீரிஸின் பாதிக்கதை, ஆஸ்விச் (Auschwitz-Birkenau) வதைமுகாம்களில் நடக்கிறது.

Published:Updated:
ஹன்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹன்டர்ஸ்

காலம் மாறுகிறது. ஹிட்லருக்குப் பின் நாஜிக்கள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுகிறார்கள். வாழ்க்கை என்னும் வட்டத்தில், யூதர்கள் இப்போது நாஜிக்களை குறிவைத்துத் தாக்குகிறார்கள். நியூயார்க் நகரத்து வீதிகளில் 1970களில் நடந்த கதையாக இப்படி ஒரு புனைவை முன் வைக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் `ஹன்டர்ஸ்.’

ஹிட்லர் மறைவுக்குப் பின், நாஜிக்களை வெறுத்து ஒதுக்குகிறது உலகம். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னும், மீதமிருக்கும் மனிதத்தையும் உயிர்களையும் பலிகொடுக்க, விஞ்ஞானப் போர் புரிய சதியில் இறங்குகின்றன அமெரிக்காவும் ரஷ்யாவும். ஜெர்மானிய வெடிமருந்துகளின் சிந்தனைக் கருவிகளான 1600 நாஜி விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் ஜெர்மனியில் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் தந்து, அமெரிக்கா, தன் வரலாற்றை எழுதத் தொடங்குகிறது. காப்பரேட் கம்பெனிகளின் மூளைகளாக இவர்களே இருக்கிறார்கள். ஆனால், உள்ளிருக்கும் நாஜி மனம் மீண்டும் எழுகிறது. அமெரிக்காவில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள். இவர்களைப் பட்டியலிட்டு, வேட்டையாடத் தொடங்குகிறார்கள் அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள். ஆனால், நாஜிக்களைக் கொன்ற பின், யூதர்கள் யூதர்களாக இருக்கிறார்களா என்னும் கேள்வியுடனும் சிற்சில ட்விஸ்ட்டுகளுடனும் `ஹன்டர்ஸ்’ கதை முன்வைக்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யூதக்குழுவின் தலைவன் மேயெர் ஆஃபர்மேனாக அல் பசீனோ இத்தனை ஆண்டுக்கால நடிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டுகிறார். “நீங்கள் எங்களை சதுரங்கத்தின் சிப்பாய்களென நினைத்துக் கொண்டிருந்த ஆண்டுகளில், நாங்கள் ராஜாக்களாக உருவெடுத்து நிற்கிறோம்’’ என அல் பசீனோ பேசும் வசனங்கள் அனல் கிளப்புகின்றன. தன் பாட்டியைக் கொன்றவர்களைப் பழிதீர்க்க இந்தக் குழுவில் சேர்கிறான் ஜோனா. வாழ்வில் வடுக்களைச் சுமந்து, அடுத்தகட்டத்துக்கு நகரமுடியாமல் சிக்கித் திணறும் ஒடுக்கப் பட்டவர்கள் இந்த ஹன்டர்ஸ் குழுவில் சேர்கிறார்கள். காவல்துறையில் இருந்தாலும், கறுப்பினத்தவர்களைக் கீழான எண்ணத்தில் பார்த்த வரலாறுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறார் காவல்துறை அதிகாரியாக வரும் மில்லி (ஜெரிகா ஹின்டன்). நாஜிக்களின் தலைவி கோலோனெலாக வரும் லேனா ஒலின், தன் ஒவ்வொரு சிரிப்பிலும் அச்சமூட்டுகிறார்.

முகாம்களில் நாஜிக்கள் யூதர்களை வதைத்த காட்சிகளும், பதிவுகளும் என்றும் இந்த உலக வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். வெப் சீரிஸின் பாதிக்கதை, ஆஸ்விச் (Auschwitz-Birkenau) வதைமுகாம்களில் நடக்கிறது. ‘இரண்டு பக்கமும் மனிதர்களை நிறுத்தி, நாஜிப் படை சதுரங்கம் ஆடி மனித உயிர் எடுத்தது’ என்னும் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆஸ்விச் அருங்காட்சியகம் இக்காட்சிக்குக் கடும் கண்டனமும், இப்படி எதுவும் நடக்கவில்லை, ‘உங்கள் கற்பனைகளை எங்கள்மீது திணிக்காதீர்கள்’ எனவும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. ஆஸ்விச் வதைமுகாம்களில் பிழைத்திருந்த தன் பாட்டியின் நினைவாக இக்கதையை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அதன் எழுத்தாளர் டேவிட் வெய்ல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூதர்களின் புனித நூலான டால்மட் `சிறப்பாக வாழ். அதுவே மிகச்சிறந்த பழிதீர்த்தல்’ என்கிறது. ஆனால், வெப் சீரிஸில் வரும் அல் பசீனோ இவ்வாறாகச் சொல்வார். “மிகச்சிறந்த பழிதீர்த்தல் என்பது பழிதீர்த்தல்தான்.” ஹன்டர்ஸ் சறுக்குவதும் அச்சமூட்டுவதும் இங்கேதான். நாஜிக்களின் குரூர பாணியில் கொல்லத் தொடங்கும் யூதர்கள் ஒருகட்டத்தில் நாஜிக்களாகவே மாறிப்போகிறார்கள்.

ஹன்டர்ஸ்
ஹன்டர்ஸ்

போரை உருவாக்கிய நாஜிக்கள் ஒருபக்கம், போர்களால் உருவாக்கப்பட்டு வன்முறையில் ஈடுபடும் யூதர்கள் ஒருபக்கம். யார் சரி, யார் தவறு என்கிற கேள்விகள் பத்து மணி நேரத்துக்குமேல் செல்லும் வெப் சீரிஸில் அடுக்கடுக்காய் விரிகின்றன. ஆனால், அதற்கான பதில்களைத் தீர்க்கமாய் முன்வைக்கத் தவறுகிறது ஹன்டர்ஸ். அடிவாங்கியவர் எதிர்த்தாக்குதல் நடத்துவது நியாயம்தானே என்றாலும், அதைத் திட்டமிட்டு அவர்களைப் போலவே கொல்லும் காட்சிகள் ஒருகட்டத்தில் இருவருக்கும் என்ன வேறுபாடு என்பதாகத்தான் இருக்கிறது.

அட்டகாசமான வசனங்கள், அபாரமான நடிப்பு, வித்தியாசமான த்ரில்லர் அனுபவம் போன்றவற்றை விரும்புவர்கள் ஹன்டர்ஸைத் தாராளமாய்ப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism