Published:Updated:

Suzhal Review: காணாமல் போகும் நபர்கள் - பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் சுற்றிச் சுழலும் `சுழல்'!

Suzhal - The Vortex | சுழல்

மேக்கிங், திரைக்கதை மற்றும் சொல்ல வரும் மெசேஜுக்காக தமிழில் வெளியான வெப் தொடர்களுள் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம்பெறுகிறது இந்தச் 'சுழல்'.

Suzhal Review: காணாமல் போகும் நபர்கள் - பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் சுற்றிச் சுழலும் `சுழல்'!

மேக்கிங், திரைக்கதை மற்றும் சொல்ல வரும் மெசேஜுக்காக தமிழில் வெளியான வெப் தொடர்களுள் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம்பெறுகிறது இந்தச் 'சுழல்'.

Published:Updated:
Suzhal - The Vortex | சுழல்
நாம் சொல்லத் தயங்கும் விஷயங்கள், நம்மையே சுழல் போல சுற்றியடித்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் `சுழல்' (Suzhal: The Vortex).

மலைப்பிரதேச கிராமமான சாம்பலூரில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. தொழிற்சாலையின் யூனியன் லீடரான சண்முகம் (பார்த்திபன்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துகிறார். அதே சமயம், காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு போராட்டத்தை அலட்சியமாக டீல் செய்கிறார் திரிலோக் வட்டே (ஹரிஷ் உத்தமன்). அந்த இரவில் தொழிற்சாலை தீப்பற்றி எரிய, யூனியன் லீடர் சண்முகத்தின் இளைய மகள் காணாமல் போகிறார். மயானக் கொள்ளைக்கான 9 நாள்கள் கொண்டாட்டத்தில் ஊரே லயித்திருக்க, பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. பாவம் ஒரு பக்கமும், பழி ஒரு பக்கமும் விழுகிறது.

Suzhal - The Vortex | சுழல்
Suzhal - The Vortex | சுழல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே முட்டிக்கொண்டு நிற்கும் நபர்களின் கொம்புகள் சீவி விடப்படுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்தத் தேடுதல் படலமும், இதற்கு முன்பு அதே ஊரில் அப்படி நடந்த ஒரு சம்பவமும் எல்லோரின் நினைவுக்கும் வருகிறது. யார் நம்மவர், யார் எதிரி என்னும் குழப்பங்கள் சமநிலையை சீர்குலைக்கின்றன. இறுதியில் யார் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதைச் சுற்றிச் சுழற்றி சொல்லியிருக்கிறது இந்தச் 'சுழல்'.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாம்பலூர் இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக ஸ்ரேயா ரெட்டி. ஸ்ரேயா ரெட்டியை தமிழ்ச் சூழலில் பார்த்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அதே 'திமிரு'டன் மிரட்டியிருக்கிறார். கோபம், பாசம், ஏக்கம், அழுகை என எல்லா உணர்வுகளையும் கடத்த வேண்டிய கதாபாத்திரம், பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் நன்கு அறிந்திருந்தாலும், நாம் அறியா பக்கங்கள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். இந்த உண்மையை உணர்ந்து குற்றவாளியைத் தேடும் நபராக சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் கதிர். ஒரு கட்டத்தில் எல்லா பொறுப்பும் தனக்கு வந்துவிட, தவறு செய்துவிட்ட குற்றவுணர்வுடன் அடுத்து அடுத்து நகரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

Suzhal - The Vortex | சுழல்
Suzhal - The Vortex | சுழல்

தனது டிரேட்மார்க்கான நக்கல் வசனங்கள் எதுவும் இல்லாமல், மகளைத் தொலைத்துவிட்டுத் தேடும் பொறுப்புள்ள அப்பா சண்முகமாக பார்த்திபன். யூனியர் லீடராக, தீவிர சித்தாந்தவாதியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்முகத்தின் மூத்த மகள் நந்தினியாக ஐஷ்வர்யா ராஜேஷ், இளைய மகள் நிலாவாக கோபிகா ரமேஷ். ஒரு பெண்ணுக்குத் தன் சிறு வயதில் நடக்கும் பிரச்னைகள் அவளை எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் தள்ளும் என்பதை கண்முன் கொண்டுவருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சில காட்சிகள் மட்டும் ஈஸ்வரனாக வரும் பழநி முருகன் எனத் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூகத்தில் அனுதினமும் நடக்கும் ஒரு குற்றப்பின்னணி கொண்ட கதையை குல தெய்வ வழிபாட்டுக் கதைகளின் வழி சொல்லியிருக்கிறார்கள் தொடரின் கிரியேட்டர்களான புஷ்கரும் காயத்ரியும். ஒருவரை அவர்களின் இனம் சார்ந்து, மொழி சார்ந்து முன் தீர்மானத்துடன் நாம் அணுகுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் கண்முன் நிறுத்துகிறார்கள். முதல் நான்கு எபிசோடுகளை பிரம்மாவும், கடைசி நான்கு எபிசோடுகளை அணுசரணும் இயக்கியிருக்கிறார்கள். திரைப்படங்களின் அனுபவங்களுடன் இவர்கள் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸ், உயரிய தரத்தில் இருப்பது பாராட்டுக்குரியது.

Suzhal - The Vortex | சுழல்
Suzhal - The Vortex | சுழல்

எடுத்துக்கொண்ட கதையில் யார் குற்றவாளி என்பதை இறுதி வரையில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் திரைக்கதை அமைத்து பார்வையாளர்களை கட்டிப் போட வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ, இப்படி நடந்திருக்குமோ என ஒவ்வொரு எபிசோடுக்கும் நம் எண்ணவோட்டங்களை மாற்றி விளையாடியிருக்கிறார்கள்.

தொடரின் பெரும்பலம் சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை. தொடர் பார்த்து முடிந்தும் அது சொல்லும் நீதியும், சாமின் பின்னணி இசையும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. முகேஸின் ஒளிப்பதிவில் டிரோன் காட்சிகள், சுடுகாட்டில் இருந்து திருவிழாவைப் பார்க்கும் விதம் போன்றவை பிரமிக்க வைக்கின்றன. மயானக் கொள்ளை தொடர்பான காட்சிகள், ஃபேக்டரி, இடுகாடு எனத் தொடர் முழுக்கவே கலை இயக்கத்துக்கும், ஒப்பனைக்கும் பெரிய வேலை இருந்திருக்கக்கூடும். அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் கலை இயக்குநர் அருண் வெஞ்சரமுடு.

Suzhal - The Vortex | சுழல்
Suzhal - The Vortex | சுழல்

சில காட்சிகளில் கடந்து போக வேண்டியவற்றை இழுத்துக்கொண்டே செல்லும் அந்த ஒரு எபிசோடை இன்னும் கொஞ்சம் தாராளமாகக் கத்தரித்து இருக்கலாம். அதே போல், சந்தானபாரதியின் கதாபாத்திரம் இன்னும் சிரத்தையுடன் எழுதப்பட்டிருக்கலாம். கொங்கு வட்டார வழக்கை வலிந்து திணித்து சிலர் பேசியிருப்பது சற்று துருத்திக்கொண்டு தெரிவதை டப்பிங்கில் கவனித்திருக்கலாம். இவையெல்லாம் சின்ன சின்ன பிசகுகள்தான். மேக்கிங், திரைக்கதை மற்றும் சொல்ல வரும் மெசேஜுக்காக தமிழில் வெளியான வெப் தொடர்களுள் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம்பெறுகிறது இந்தத் தொடர்.

உடைத்துப் பேச வேண்டியதொரு விஷயத்தைத் துணிச்சலுடன் கையாண்ட விதத்திலும், அதை சுவாரஸ்யமாக சொன்ன விதத்திலும் ஈர்க்கிறது இந்தச் `சுழல்'.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism