Published:Updated:

சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!

வெப் சீரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
வெப் சீரிஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் அலாதியானவர்கள். ஐந்து வயதான குழந்தைகூட சினிமாவைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். 100 வயதைத் தாண்டிய பாட்டி தியேட்டருக்குள்ளே வருவதை யும் பார்த்திருக்கிறோம்.

சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்கள் அலாதியானவர்கள். ஐந்து வயதான குழந்தைகூட சினிமாவைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். 100 வயதைத் தாண்டிய பாட்டி தியேட்டருக்குள்ளே வருவதை யும் பார்த்திருக்கிறோம்.

Published:Updated:
வெப் சீரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
வெப் சீரிஸ்
தமிழர்களின் ஆதிக்கலைவடிவம் கூத்து. மக்கள் கூடுமிடங்களில்தான் கூத்து நிகழ்ந்தது. மாலை தங்களோடு தேநீர் குடித்துக்கொண்டிருந்தவர்தான் இரவில் ராமனாக, அரிச்சந்திரனாக, முருகனாக அவதாரம் எடுப்பதை மக்கள் வாய்பிளந்து பார்ப்பார்கள். சமயங்களில் வள்ளியாக, சீதையாக ஸ்திரீபார்ட் அவதாரம் எடுப்பவர்களும் உண்டு.

அடுத்தநாள் அரிதாரங்கள் கலைந்த அவதாரங்களுடன் அரட்டை தொடரும். புராணங்களை அடிப்படையாகக் கொண்ட தெருக் கூத்துகளுக்கு அடுத்தபடியாக சமூக நாடகங்கள் உருவாயின. உள்ளூர்க் கலைஞர்களைத் தாண்டி வெளியூரிலிருந்து நாடகக்குழு வந்தது. இதற்கென்றே ‘டிராமா குரூப்’கள் உருவாயின.

கதைகளையும் கலையையும் தேடி மக்கள் அரங்குக்கு வந்தார்கள். மேடை, ரசிகனுக்கும் கலைஞனுக்கும் இடையே இடைவெளியை அதிகமாக்கியது. கலைஞர்களை மக்கள் அண்ணாந்து பார்க்கத் தொடங்கினார்கள். மேடை என்பதால் விளக்குகள் மூலம் வெளிச்சம் கூட்டிக் கதைகளை இன்னும் சுவாரஸ்ய மாய்ச் சொல்ல முடிந்தது; கலைத் தன்மை கூடியது. காலம் கடக்க, தொழில்நுட்பம் மேடை நாடகத்தை சினிமாவாக்கியது. சினிமாவின் சாத்தியங்கள் வாய்ப்புகளை அகலப்படுத்தி அதிகப்படுத்தியது. கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே திரை வந்தது. அதுவரை ரசிகர்கள் தன்னைப் போன்ற, தன்னளவிலேயே உள்ள கலைஞர்களையே கண்டுவந்தார்கள். சினிமா அதை மாற்றியது; விஸ்வரூபம் எடுத்தார்கள் கலைஞர்கள். பறந்து பறந்து சண்டை போட்ட நாயகன், நொடிக்கு ஒருமுறை உடை மாற்றிய நாயகி, இரட்டைக் கதாபாத்திரங்கள், வண்ணம யமான லொகேஷன் என சினிமா மேஜிக் காட்டியது. தொழில்நுட்பம் புரியாத ரசிகர்கள் அந்தக் கலையில் மயங்கிப் போனார்கள். பெரிய திரையில் பார்த்ததாலோ என்னவோ கலைஞர்கள் ஹீரோவானார்கள். ரசிகர்கள் அவர்களைக் கடவுளாகவே பார்க்கத் தொடங்கினார்கள். போலவே, கதைகளும் கதை சொல்லும் உத்திகளும் யதார்த்தத்தை மீறிப் போயின. சினிமா ஆரம்பப் புள்ளியான தெருக்கூத்திலிருந்து எவ்வளவோ மாறி வந்திருக்கிறது; விலகி வந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வரலாற்றைச் சொல்லாமல் இந்தக் கட்டுரையைத் தொடங்க முடியவில்லை. காரணம், நாம் பார்க்கப்போவது இந்தக் கலையுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த அவதாரம் பற்றியது. அது, ‘ஓவர் த டாப்’ என்றழைக்கப்படும் ஓடிடி தளங்களும் அதில் வெளியாகும் வெப் சீரிஸ்களும்.

வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

இந்தியாவில் ஓடிடி:

2018-ம் ஆண்டு பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் இந்திய ஓடிடி வியாபாரத்தைப் பற்றி வெளியிட்ட ரிப்போர்ட்டின்படி இந்திய ஓடிடி சந்தையின் அன்றைய மதிப்பு சுமார் 3,700 கோடி. 2023-ல் அது 10 மடங்கு வளர்ச்சி கண்டு 37,000 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டது. இது, இந்திய சினிமாத் துறையின் மொத்த மதிப்பில் (1,35,000 கோடி) 27%. இந்தக் கணிப்பெல்லாம் கொரோனாவுக்கு முன்பு. இப்போது திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் அனைவரின் பார்வையும் ஓடிடி மேலதான். இதனால் வளர்ச்சி இன்னும் அதிகமாகும்; வேகமாகும்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங் களான சூர்யாவும் விஜய் சேதுபதியும் புதிய வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்கள். நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் மணிரத்னமும் வெற்றி மாறனும் கூட இந்த ஆட்டத்தில் களமிறங்கப் போகிறார்கள். ஏற்கெனவே கணக்கைத் தொடங்கிவிட்ட கெளதம் மேனன் அடுத்தடுத்து வெப் சீரிஸ் இயக்கப்போகிறார். உச்ச நடிகர்கள் தொடங்கி டாப் இயக்குநர்கள் பலரும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். ‘அதனால் என்ன, திரைப்படங்கள் போலத்தானே வெப் சீரிஸும்?’ என்று உங்களுக்குக் கேள்வி எழலாம்.

நிச்சயமாக இல்லை. ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸுக்கும் திரையரங்கில் நாம் பார்க்கும் படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு; மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் இருந்ததைப்போல. அவை என்ன என்று பார்க்கும் முன் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். ஓடிடி தளங்களில் வரும் அனைத்துமே வெப் சீரிஸ் அல்ல. அங்கே திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. நாம் இந்தக் கட்டுரையில் பேசப்போவது வெப் சீரிஸ் பற்றித்தான். அதேபோல் சினிமாவைத் தொலைக் காட்சியிலோ மொபைல் போனிலோ லேப்டாப்பிலோ பார்ப்பதைப் பற்றி நான் பேசவில்லை. திரையரங்கில் சினிமா பார்க்கும் அனுபவத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அலாதியானவர்கள். ஐந்து வயதான குழந்தைகூட சினிமாவைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். 100 வயதைத் தாண்டிய பாட்டி தியேட்டருக்குள்ளே வருவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், வெப் சீரிஸ் இதுவரை அப்படியில்லை. பெரும்பாலும் இளைஞர்களே அதன் பார்வையாளர்கள். அதனால், அதன் கதைகளும் அவர்களைக் கவரும்படியாகவே வருகின்றன. இன்னும் வெப்சீரிஸ்களுக்கு சென்ஸார் வரவில்லை என்பதால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இணையம் என்பதால் எந்த நாட்டில் இருந்தும் செயல் படலாம். அதனால் இவற்றுக்கு சென்ஸார் என்பது சாத்திய மில்லை.ஆனால், தொலைக் காட்சிகளுக்கு இருப்பதுபோல வெளியான பின் வாடிக்கை யாளர்கள் புகார் தெரிவிக்கும் முறை எதிர்காலத்தில் வரலாம். இப்போதைக்கு, உச்சக்கட்ட வன்முறை, தகாத வார்த்தைகள், ஆபாசக் காட்சிகள் இல்லாத வெப் சீரிஸே இல்லை என்ற நிலைதான். கதைக்குத் தேவை எனப் பயன்படுத்துபவர்களும் உண்டு. தேவையே இல்லை என்றாலும் வலிந்து திணிப்ப வர்களும் உண்டு. அதே கதை சினிமாவாக எடுக்கப்பட்டி ருந்தால் இவை இடம்பெற வாய்ப்பேயில்லை.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இங்கே சினிமா என்பது ஒரு கூட்டு நுகர்வாகத்தான் இருக்கிறது. 500 பேருடன் சேர்ந்து ஒரு படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு. தனியாக ஒரு படைப்பை ரசிப்பதென்பது வேறு. உதாரணமாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைச் சொல்லலாம். அரங்கில் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்த இந்தப் படத்தைத் தனியாக லேப்டாப்பிலோ தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் “அவ்ளோ பெரிய காமெடி இல்லையே” என்றார்கள். கார்ல் ஜங் என்ற புகழ்பெற்ற உளவியல் ஆராய்ச்சியாளர் இதை “Collective unconscious’’ என்கிறார். பலர் ஒன்றாகச் சேர்ந்து, இருட்டு அறையில் அமர்ந்து படம் பார்க்கும்பொழுது நம் உணர்வுகள் ஒருவரையொருவர் பாதிக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார். யாருடன் சேர்ந்து படம் பார்க்கிறோம், எத்தனை பேர் பார்க்கிறோம் என்பதெல்லாம் ஒரு படம் பார்க்கும் அனுப வத்தை பாதிக்கும் காரணிகளும் கூட. ஆனால், வெப் சீரிஸ் என்பது தனிப்பட்ட அனுபவம். நாம் என்ன பார்க்கிறோம் என்பது அருகிலிருப்ப வருக்குக்கூடத் தெரிவதில்லை. மொபைல் அல்லது லேப்டாப்பில் பார்த்தால் ஹெட்போன் மாட்டிக் கொள்கிறோம். அதனால் சத்தமும் கேட்பதில்லை.

நம் ஊரில் சினிமா என்பது அன்றாடத்திலிருந்து சில மணி நேரம் பிரேக் எடுப்பதுபோல. வீட்டிலிருந்து கிளம்புவதில் தொடங்குகிறது அந்த அனுபவம். ஒரு நல்ல திரையரங்கில், இருட்டு அறையில், பெரிய திரையில், துல்லியமான ஒளியமைப்பில், நுணுக்கமான ஒலியமைப்பில், சில சமயம் 3டி கண்ணாடியுடன், வசதியான இருக்கைகளில் அமர்ந்து ரசிக்கும் ஓர் அனுபவம். இடையில் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் வேறு. திரையரங்கு கள் நமக்கு விற்பது கதைகளல்ல; அனுபவம். அதனால் தான் சுமாரான படம் என்றால்கூட பலர் திரையரங்குக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வெப் சீரிஸ் அப்படியல்ல. அது நம் வீட்டில் அமர்ந்து அதே சூழலில் மொபைலிலோ லேப்டாப்பிலோ பார்க்கும் ஒன்று. இங்கே விற்கப்படுவது கதைகள் தான்.

அடுத்தது நேரம். சினிமாவை ஒரே அமர்வில் பார்த்து விடுகிறோம். அதிகபட்சம் இடைவேளையின் போது சின்ன பிரேக் எடுக்கிறோம். ஆனால், வெப் சீரிஸ் அப்படி யில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார்கள். வேலைக்கு நடுவில் 30 நிமிடங்கள் பிரேக் கிடைத்தால் அப்போது ஒரு எபிசோடு பார்ப்பார்கள். முதல் கால் மணி நேரத்தைக் காலையில் வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அடுத்த கால் மணி நேரத்தை அலுவலகத்தில் மதிய உணவின் போது மொபைலில் பார்ப்பவர்கள் உண்டு. நேரம் மட்டுமல்ல, படம் பார்க்கும் கேட்ஜெட்டே மாறியிருக்கும். வெப் சீரிஸ் பார்ப்பவர்கள் மத்தியில் ‘Binge-watching’ என்றொரு சொல்லாடல் உண்டு. ஒரே அமர்வில் ஒட்டுமொத்தமாகப் பல எபிசோடுகளையும் பார்ப் பதை அப்படிச் சொல்வார்கள். அந்த மாதிரி பார்ப்பவர்களும் உண்டு.

சினிமாவில் ஏ,பி,சி சென்டர் ரசிகர்கள் என்பார்கள். அவர்களை மனதில் வைத்து தான் காட்சிகளை யோசிப் பார்கள். மாஸ் ஹீரோவின் பெரிய பட்ஜெட் படமென்றால் மூன்று தரப்பையும் திருப்திப்படுத்த வேண்டும். சின்ன பட்ஜெட் என்றால் ஏதேனும் ஒரு சென்டரைக் குறி வைத்துப் படமெடுப்பதுண்டு. அதேபோல், வெப் சீரிஸிலும் டார்கெட் ஆடியன்ஸ் உண்டு. வெப் சீரிஸ் இயக்குநர்கள் அதையும் மனதில் வைத்துதான் கன்டென்ட்டை உருவாக்க வேண்டும்.

சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!

சினிமாவில் போரடிக்கும் காட்சிகள் வந்தால் அதிக பட்சம் மொபைலை எடுத்து நோண்டலாம் அல்லது ஸ்நாக்ஸ் வாங்கி வர எழுந்து செல்லலாம். ஆனால், வெப் சீரிஸ் அப்படி யல்ல. ஃபார்வர்டு பட்டன் கைக்கெட்டும் தூரம்தான். அதனால் அரைத்த மாவையே அரைப்பதோ, பட்ஜெட்டைக் காரணமாகச் சொல்லி காட்சிகளை நீளமாக எடுப்பதோ இங்கே உதவாது. ஒரு ஓடிடி தளத்துக்குள் குறைந்தது 50 ஹிட் ஆன வெப் சீரிஸ் உண்டு. எனவே, பார்வையாளரைத் தக்க வைத்துக்கொள்ள சுவாரஸ்ய மான கன்டென்ட் மட்டுமே உதவும் என்பது வெப் சீரிஸின் அடிப்படை.

“வெப் சீரிஸ் என்பது ரைட்டர்ஸ் மீடியா. அங்கே இயக்குநர்களைவிட திரைக்கதை எழுத்தாளர் களுக்கே வேலையும் அதிகம்; புகழும் அதிகம்.” இயக்குநர்களின் கலந்துரை யாடல் ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் சொன்னது இது. ஏற்கெனவே, வெப் சீரிஸ் சக்கைப் போடு போட்ட மொழிகளிலெல்லாம் வெற்றி மாறன் சொன்னதுதான் நடந்திருக்கிறது. பல வெப் சீரிஸ்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குநர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். இங்கே ரைட்டர்தான் கிங்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டி யிருக்கிறது. அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றையும் ஓடிடி தளங்கள் வாங்கி வெளியிட்டிருக்கின்றன. கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஃபிரெண்ட்ஸ், பிரேக்கிங் பேட் போல பெரும்பாலானவை அப்படி வந்தவைதான். அவை வெப் சீரிஸாக உருவாக்கப்பட வில்லை. எனவே, தொலைக் காட்சித் தொடர் களையும் வெப் சீரிஸையும் நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். தொலைக்காட்சித் தொடர் களுக்கு நேர வரையறை உண்டு. ஒவ்வொரு அத்தியாயமும் வெளியாகக் கால இடைவெளி உண்டு. இடையில் விளம்பரங்கள் உண்டு. அதனால் அவை எழுதப்பட்ட விதமே வேறு. வெப் சீரிஸ் அப்படியில்லை. 10 எபிசோடுகளையும் ஒன்றாக வெளியிட்டு விடுவார்கள். நம் வசதிப்படி பார்த்துக் கொள்ளலாம்.

சினிமாவுக்கும் வெப் சீரிஸுக்கும் நடிப்பிலும் வித்தியாசம் உண்டு. ஒரு திரைப்படத்தை 2 மாதங் களிலிருந்து அதிகபட்சம் 2 வருடங்களுக்குள் எடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு வெப் சீரிஸ் ஹிட் அடித்தால் அது பல சீசன்கள் போகலாம். 10 ஆண்டுகள் வெளியான தொடரெல்லாம் இருக்கின்றன. அப்படியென்றால் நடிகர்கள் அதையும் கணக்கில் கொண்டுதான் நடிக்க வேண்டியிருக்கும். முதல் சீசனில் இருந்த உடல்மொழி 10 ஆண்டுகள் கழித்தும் வெளிப்பட வேண்டும். முன்பு சொன்னதுபோல, ஒரே சிட்டிங்கில் வெப் சீரிஸ் பார்க்கப்படுவதில்லை. அதையும் நடிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சினிமாவுக்கு மிக முக்கியம் எதிர்பார்ப்பு. அது நடிகரோ, இயக்குநரோ அல்லது இசையமைப்பாளரோகூட இருக்கலாம். ஆனால் வெப் சீரிஸுக்கு அது தேவையில்லை. பெரும்பாலான ஹிட் வெப் சீரிஸ்களில் தெரிந்த முகங்களே இருந்திருக்காது. இந்த ஆண்டு உலக அளவில் பெரிய ஹிட் ஆன சீரிஸ் ‘டார்க்.’ ஜெர்மன் மொழியில் எடுக்கப்பட்ட இந்தத் தொடரின் நடிகர்கள் யாரும் அதற்கு முன்பு பிரபலம் கிடையாது. இப்போது அவர்கள் எல்லோருமே பிரபலம்தான். வெப் சீரிஸ்கள் மணிக்கணக்கில் ஓடுவதாலும் பல ஆண்டுகள் தொடர்வதாலும் அந்த முகம் நமக்குப் பரிச்சயமாகி அவர் பிரபலமாகிவிட ஒரே ஒரு சீரிஸ் போதும். ஹீரோ வெர்ஸஸ் வில்லன் என்ற ஒற்றைத்தன்மையும் வெப் சீரிஸ்களில் கிடையாது. அதனால் ஒரு வெப் சீரிஸ் பல நல்ல நடிகர்களை பிரபலமாக்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். வெப் சீரிஸ் மூலம் பிரபலம் ஆகலாம். ஆனால், ஸ்டார் ஆவது அரிதிலும் அரிது. காரணம், வெப் சீரிஸில் நடிக்க சினிமாவைப் போன்ற தகுதிகள் கிடையாது. இந்த ஆண்டு ஹிட் ஆன இன்னொரு வெப் சீரிஸ் ‘பாதாள் லோக்.’ அதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெய்தீப் அலாவத். ‘விஸ்வரூபம்’ உட்பட பல படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்தவர், இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் சீரிஸில் முதன்மைக் கதாபாத்திரம். வெப் சீரிஸின் நாயகர்களை அறிமுகப்படுத்தும் போது சினிமா போல ஸ்லோமோஷன் இருக்காது;

அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்ஸ் இருக்காது; மாஸ் பிஜிஎம் இருக்காது. இங்கே கதைதான் நாயகன். நடிகர்கள் இரண்டாம் பட்சம்தான்.

சினிமாவிலிருந்து வெப் சீரிஸ் பக்கம் வரும் ஹீரோக்கள் இதையும் மனதில் கொள்வது தமிழ் வெப் சீரிஸ் எதிர்காலத்திற்கு நல்லது.

கொரோனா காரணமாக சமீபத்தில் ஒரு திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அப்போதும் அதில் ‘இடைவேளை’ இருந்தது. திரையரங்குக்காகச் சேர்க்கப்பட்ட அந்த விஷயத்தைக்க்கூட ஓடிடி ரிலீஸ் என முடிவானபின் அவர்கள் மாற்றவில்லை. “சினிமாவுக்குப் பண்ண ஸ்கிரிப்ட் தான். ஓகே சொன்னா 10 எபிசோடா பிரிச்சிடலாம்” என்ற குரல்கள் கோடம்பாக்கத்தின் பல சந்துகளில் கேட்க முடிகிறது. ஒரு திரைப்படமாக, ஓடிடியின் ஒரிஜினல்ஸ் என்ற பெயரில் எடுக்கப்படுபவை வேறு. ஆனால், வெப் சீரிஸ் என்பவை வேறு.

இனி என்ன?

இப்போது சத்யராஜ் முதல் சூர்யா, விஜய்சேதுபதி வரை தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் வெப்சீரிஸுக்கு வருகிறார்கள். மாஸ் ஹீரோக்களுக்கு என்றே இருக்கக்கூடிய சுமை, இவர்களுக்கு வெப் சீரிஸில் கிடையாது. துணிச்சலாகப் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்க்கலாம். நமக்கும் இதுவரை திரையில் பார்க்காத ஒரு சூர்யாவை, ஒரு விஜய் சேதுபதியைப் புதிய பரிமாணத்துடன் வெப்சீரிஸில் பார்த்து ரசிக்கலாம்.

சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!

தமிழில் பல வெப்சீரிஸ் வந்திருந்தாலும் பாதாள் லோக், ஃபேமிலி மேன், மணி ஹெய்ஸ்ட், டார்க் போன்று மற்ற மொழியினரைக் கவர்ந்த வெப் சீரிஸ் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் ரசிகர்களை முழுவதுமாக ஈர்த்த தமிழ் வெப்சீரிஸே வரவில்லை என்பது வருத்தமான உண்மை. திரையில் மகத்தான உயரங்களைத் தொட்ட தமிழ் நட்சத்திரங்களும் திறமையான கதாசிரியர்களும் இயக்குநர்களும் இணையும்போது நம் தமிழ் வெப்சீரிஸும் உலகளவில் உயரத்துக்குச் செல்லும் என்பதுதான் நம் அனைவரின் நம்பிக்கை.