Published:Updated:

``என்.ஐ.ஏ பணியில் லெஜெண்ட்... வீட்டில் டம்மி பீஸ்!’’ - எப்படி இருக்கிறது #TheFamilyMan சீரிஸ்?

The Family Man

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய போரை உருவாக்கத் துடிக்கும் தீவிரவாதிகள். வீட்டில், அலுவலகத்தில் ஃபைல்களோடு வேலை செய்வதாகப் பொய் சொல்லிவிட்டுத் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு தேசத்தைக் காக்கும் ஹீரோ... எப்படி இருக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியான 'தி ஃபேமிலிமேன்'?

``என்.ஐ.ஏ பணியில் லெஜெண்ட்... வீட்டில் டம்மி பீஸ்!’’ - எப்படி இருக்கிறது #TheFamilyMan சீரிஸ்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய போரை உருவாக்கத் துடிக்கும் தீவிரவாதிகள். வீட்டில், அலுவலகத்தில் ஃபைல்களோடு வேலை செய்வதாகப் பொய் சொல்லிவிட்டுத் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு தேசத்தைக் காக்கும் ஹீரோ... எப்படி இருக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியான 'தி ஃபேமிலிமேன்'?

Published:Updated:
The Family Man

மும்பையின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அதிகாலை நேரத்தில் யோகா செய்தபடி அறிமுகமாகிறார் ஸ்ரீகாந்த் திவாரி. அவரின் மனைவி சுச்சி, கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். மனைவியின் வற்புறுத்தலின் பேரில் தன் மகளையும் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று, வழியில் டிராஃபிக்கில் திட்டு வாங்கி, தாமதமாக அலுவலகம் செல்கிறார் ஶ்ரீகாந்த். பொறுப்பான குடும்பஸ்தனாக முதலில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்ரீகாந்த் திவாரி, என்.ஐ.ஏ உளவுத்துறையின் சிறப்பு அதிகாரி.

இந்தியா மீது தாக்குதல்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் எழுந்தால், அவற்றைக் கட்டுப்படுத்துவது அவரது பணி. தனது பணியில் 'லெஜெண்டாக' ஸ்ரீகாந்த் கொண்டாடப்பட்டாலும், வீட்டில் அவரது குடும்பத்துக்கு அவர் டம்மி பீஸ்தான்.

The Family Man
The Family Man

நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பள்ளியில் குழந்தைகள் மீது புகார் வரும்போது பொறுப்பான தந்தையாகப் பள்ளிக்குச் சென்று திட்டு வாங்க வேண்டும். அதே நேரத்தில் ஐ.எஸ் அமைப்பில் இருந்து தப்பி வந்து இந்தியா மீது தீவிரவாதிகள் நிகழ்த்தப்போகும் தாக்குதலைப் பற்றி துப்பு துலக்க வேண்டும், தாக்குதலை முறியடிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய வேண்டும். இது எதையும் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ தெரியாமல் செய்வது ஸ்ரீகாந்த் மீது விதிக்கப்பட்டிருக்கும் சவால்.

ஸ்ரீகாந்த் திவாரியாக மனோஜ் பாஜ்பாய். இந்தியாவின் டாப் பெஸ்ட் நடிகர்களில் மனோஜ் பாஜ்பாய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. டாக்டரின் அறிவுரையை மீறி எந்நேரமும் சிகரெட் புகைப்பதும், குடும்பத்தோடு நேரம் செலவழிக்கும்போது 'ரெட்' என்ற மெசேஜ் வந்தவுடன், அப்படியே விட்டுவிட்டு தன் பணியைச் செய்ய ஓடுவதும் என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

தப்பியோடும் குற்றவாளியைப் பிடிக்க லிஃப்ட் கேட்டுச் செல்வதும், தவறுதலாக முஸ்லிம் இளைஞர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அதற்காகக் குற்ற உணர்வில் தவிப்பதும், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொள்வதுமென 'தி ஃபேமிலிமேன்' மனோஜ் பாஜ்பாயின் ஒன்மேன் ஷோ!

The Family Man
The Family Man

ஸ்ரீகாந்த் திவாரியின் மனைவி சுச்சியாக, ப்ரியாமணி. 15 ஆண்டுக்கால திருமணப் பந்தத்தையும், ஒரேமாதிரியான பேராசிரியர் பணியையும் வெறுப்போடு சுமந்து திரியும் கேரக்டர். அன்புக்கு ஏங்கித் தன் அலுவலக நண்பரோடு நெருக்கம் காட்டுவதும், அதன் பின்பு குற்ற உணர்ச்சியோடு அந்த உறவைத் துண்டிப்பதும் என தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வேடத்தைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார் ப்ரியாமணி.

வில்லன் வேடத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடித்திருக்கிறார். அப்பாவியாக அறிமுகமாகி பின்பு 'டெரர்' முகம் காட்டுகிறார் நீரஜ். காவல்துறை அதிகாரியாக கிஷோர், ஸ்ரீகாந்த் திவாரியின் நண்பனாக ஷரீப் ஹாஸ்மி, குழந்தைகள் மெஹாக் தாகூர், வேதாந்த் சின்ஹா, ராணுவ அதிகாரியாக சந்தீப் கிஷன் எனப் பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

The Family Man
The Family Man

பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இந்தத் தொடரை இயக்கியுள்ளனர். ஒரு பக்கம் ஃபேமிலி டிராமாவாகவும், மறுபக்கம் உளவாளியின் கதையாகவும் பயணிக்கும் திரைக்கதையைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது இந்த இரட்டையரின் இயக்கம்.

செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளைத் திரட்டி, கதையாக மாற்றி எடுக்கப்பட்டிருப்பதாக 'தி ஃபேமிலிமேன்' கூறுகிறது. சமீபத்தில் 'சேக்ரெட் கேம்ஸ்' தொடர் தொட்டுச் சென்ற அதே விஷயங்களை வேறு வடிவத்தில் பேசியுள்ளது இந்தத் தொடர். பசுப் படுகொலைகள், புலனாய்வு அமைப்புகளால் குறிவைக்கப்படும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள், போலி என்கவுன்டர்கள், காஷ்மீர் விவகாரம் எனப் பல சர்ச்சைக்குரியவற்றைத் தைரியமாக அலசியுள்ளது 'தி ஃபேமிலிமேன்'. இந்தத் தொடர் பேசியுள்ள அரசியலுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

இந்தியா போன்ற நாட்டில் பெரும்பான்மைவாதம், தேசியம் என்ற பெயரில் நிறுவனமயமாக்கப்பட்டு சிறுபான்மையினர் மீது திருப்பிவிடப்படுகிறது. இந்த சூழலில் உதிரிகளாகச் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை நிறுவனமாகியுள்ளதாகவும், அரசு பயங்கரவாதம் உதிரிகளின் செயல் எனவும் பொருள்கொள்ளச் செய்கிறது 'தி ஃபேமிலிமேன்'. ஏற்கெனவே சிறுபான்மையினர் மீது பொதுச் சமூகத்தில் நிலவும் அச்சத்துக்கு இது வலு சேர்க்கவே பயன்படும்.

The Family Man
The Family Man

முதல் சீஸன் தெளிவான முடிவு எதுவும் இல்லாமல் முடிவடைந்துள்ளது. 'தி ஃபேமிலிமேன்' இந்தியாவின் அரசியல் சூழலைப் பேசிக்கொண்டே, தற்போதைய குடும்ப உறவுகளுக்குள் நிலவும் இடைவெளியையும் பேசுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டால் பிரச்னைகளை எளிதாகச் சமாளிக்கலாம் என்பதைச் சொல்கிறது. டெல்லி காப்பாற்றப்பட்டதா, ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதா என்பதை அறிய அடுத்த சீஸன் வரை காத்திருக்க வேண்டும். எனினும், முதல் சீஸனில் 'தி ஃபேமிலிமேன்' நிச்சயம் அனைவரையும் ஈர்க்கிறான்.