Published:Updated:

காட்மேன் முதல் ஃபேமிலி மேன் வரை... கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கலாமா?

The Family Man 2
The Family Man 2

முதலில் அந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகட்டும். அதில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் முன்தீர்மானத்துடன் எதிர்ப்பது சரியல்ல. ஈழத்தமிழர்களையும், ஈழப்போராட்டத்தையும் தவறாக சித்திரித்திருந்தால் 'ஃபேமிலி மேன்' வெப்சீரிஸைக் கடுமையாக விமர்சிப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கையில் நடந்த இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகிய துயரங்களைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே ஈழத்தமிழர்களைச் சித்திரிக்கும் படைப்புகள் குறித்த சர்ச்சைகள் மேலோங்கி வந்துள்ளன. ஈழப்போராட்டத்தையும் ஈழத்தமிழர்களையும் தவறாகச் சித்திரிப்பதாக 'மெட்ராஸ் கஃபே', 'இனம்' போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் படங்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன.

மாவீரர் நாள் கொண்டாடப்படும் நவம்பர் மாதம் மற்றும் இன அழிப்பு நடைபெற்ற ஏப்ரல், மே மாதங்களில் தமிழகக் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் இலங்கைக்குப் பயணம் செல்லக்கூடாது என்றும்கூட எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. இப்போதும் ஒரு 'மாவீரர் நாள்' மாதத்தில் ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் தவறாகச் சித்திரிப்பதாக 'ஃபேமிலி மேன்' வெப்சீரிஸ் தடைசெய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

Madras Cafe
Madras Cafe

'நாம் தமிழர் கட்சி' போன்ற அமைப்புகளே இத்தகைய எதிர்ப்புகளை முன்வைத்து வந்த நிலையில் இப்போது தி.மு.க அரசும் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளது. தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், "ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘The Family Man - 2’ என்ற வெப்சீரிஸ் கண்டனத்துக்குரியது. தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தாவை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும். இந்த தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது.

இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினம். இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்,

ஃபேமிலி மேன் முதல் சீசனின் கதை என்ன?

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களை எப்படி ஶ்ரீகாந்த் திவாரி என்ற உளவுத்துறை அதிகாரி துப்பறிகிறார் என்பதுதான் கதை. வழக்கமான 'பாகிஸ்தான் தீவிரவாதி' கதை என்றாலும் பல நுட்பமான வித்தியாசங்களும் உள்ளன. ஶ்ரீகாந்த் திவாரியை சாகச போலீஸ் அதிகாரியாகச் சித்திரிக்காமல், குடும்பத்தின் பிரச்னைகளைச் சரியாகக் கையாளத் தெரியாத பலவீனமான மனிதனாகவே சித்திரித்தது 'ஃபேமிலி மேன்'. மேலும் இந்துத்துவ அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படிச் சிறுபான்மையினர் மத்தியில் பயங்கரவாதிகளை உருவாக்குகிறது என்பதையும் தேசபக்தி என்பது எப்படி அரசியல் உத்தியாக மாற்றப்படுகிறது என்பதையும் சமநிலையில் சித்திரித்திருந்தது 'ஃபேமிலி மேன்' முதல் பாகம்.

The Family Man
The Family Man

உதாரணத்துக்கு ஒரு காட்சி. மாட்டுக்கறி தின்றார் என்று இஸ்லாமியரை அடித்து உதைக்கிறார் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இந்தக் காட்சியைத் தொலைக்காட்சியில் கண்ட முஸ்லிம் இளைஞர் அதற்கு எதிர்வினையாக ஒரு 'ஆபரேஷன்' செய்ய தன் நண்பர்களுடன் காரில் கிளம்புகிறார். அந்த காரில் இருப்பவர் துப்பாக்கியுடன் கிளம்புவது அந்த முஸ்லிம் இளைஞருக்குத் தெரியாது. இவர்களின் 'ஆபரேஷன்' குறித்த தகவலை உளவுத்துறை துப்பறிந்து அந்த வாகனத்தை சுற்றிவளைக்கிறது. காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட, திவாரி தலைமையிலான குழுவும் பதிலுக்குத் துப்பாக்கியால் சுட, இந்த மோதலில் காரில் இருந்த அனைவரும் இறந்துவிடுகிறார்கள். பிறகு அந்த காரில் இருக்கும் 'பயங்கர ஆயுதம்' என்ன என்று சோதிக்கும்போது அவர்களுக்குக் கிடைப்பது இரண்டு மூன்று பெரிய பாத்திரங்களில் நிரப்பப்பட்ட மாட்டிறைச்சி வறுவல். இந்துத்துவ அரசியல்வாதி வீட்டு விசேஷத்தில் இந்த மாட்டுக்கறியைக் கலந்துவிடுவதுதான் அவர்களின் 'ஆபரேஷன்'. இது தெரியாமல் நடத்தப்பட்ட தாக்குதலில்தான் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்மை தெரிந்ததும் திவாரி குற்றவுணர்வில் கூனிக்குறுகிவிடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி காஷ்மீர் பிரச்னை வரை சமநிலையில் இருதரப்பையும் வைத்துப் பேசும் காட்சிகள் 'ஃபேமிலி மேன்' முதல் பாகத்தில் உள்ளன. ஆனால் இந்தக் கதை எப்படி யு-டர்ன் அடித்து இரண்டாம் பாகத்தில் ஈழப்போராட்டக் கதையாக மாறியது, இரண்டாம் பாகக்கதை முழுக்க ஈழப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கிறதா, முதல் பாகத்தைப் போல் சமநிலையில் நின்று ஈழத்தமிழர்களின் நியாயங்களையும் பேசுமா, 12 ஆண்டுகளுக்கு முன் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்ட ஈழ ஆயுதக்குழுக்கள் குறித்த சித்திரிப்பு இப்போது ஏன், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் இப்போதும் ஒலித்துவரும் வேளையில் இந்த வெப்சீரிஸ் அந்தக் குரல்களை ஒடுக்க முயல்கிறதா? ஏராளமான கேள்விகள் நம்மிடம் உள்ளன. இதற்கான பதில் ஜூன் 4 அன்று ஒளிப்பரப்பாகும் 'ஃபேமிலி மேன் இரண்டாம் பாக'த்தைப் பார்த்தால்தான் தெரியும்.

Godman
Godman
Zee5

ஒரு திரைப்படத்தையோ ஒரு வெப் சீரிஸையோ முழுவதுமாகப் பார்க்காமல் வெறுமனே ட்ரெய்லரை வைத்து மட்டுமே முடிவுக்கு வருவதும் அதைத் தடை செய்யக்கோருவதும் ஜனநாயகத்துக்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் முற்றிலும் எதிரானது. இப்படித்தான் ஜீ 5-ல் ஒளிபரப்பாகவிருந்த, பாபு யோகேஸ்வரன் இயக்கிய 'காட்மேன்' வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியானதும் அதில் இடம்பெற்றிருந்த வசனம் பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்றும் அதைத் தடை செய்யவேண்டும் என்றும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அந்த வெப்சீரிஸில் நடித்த டேனியல் பாலாஜி அவரது பெயருக்காக ஆபாசமாக வசை பாடப்பட்டார். இறுதியில் தொடர்ச்சியான எதிர்ப்புகளாலும் அழுத்தத்தாலும் ஜீ 5 நிறுவனமே அந்த வெப்சீரிஸ் ஒளிபரப்புவதை நிறுத்திவைத்தது. தமிழகத்துக்கும் கருத்துச்சுதந்திரத்துக்குமான தலைகுனிவு அது. அப்போது எதிர்முகாமில் இருந்தவர்கள் இப்போது 'ஃபேமிலிமேன்' தொடரைத் தடை செய்யக்கோருகிறார்கள். இது எந்த வகையிலும் நியாயமல்ல.

முதலில் அந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகட்டும். அதில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் முன்தீர்மானத்துடன் எதிர்ப்பது சரியல்ல. ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் தவறாக சித்திரித்திருந்தால் 'ஃபேமிலி மேன்' வெப்சீரிஸைக் கடுமையாக விமர்சிப்போம். இன்றுள்ள சமூக ஊடக யுகத்தில் எல்லோருடைய குரல்களும் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒரு படைப்பு தவறான கருத்துகளை முன்வைத்தால் அதற்கு எதிரான கூட்டு விமர்சனங்களை முன்வைப்பதற்கான வெளி விரிந்துள்ளது. தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் எழும் வாய்ப்பு உள்ளது.
ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
You tube Screen shot

எனவே ஜூன் 4 வரை பொறுப்போம். 'ஃபேமிலி மேன் - 2' தமிழர்களை இழிவுபடுத்தினால் நம் எதிர்ப்புகளைப் பதிவு செய்வோம். அதற்கு முன்பே படைப்பைத் தடை செய்யக்கோரி தமிழர்கள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம். இந்தியாவே நெருக்கடிநிலையில் சிக்கி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டபோது கருத்துச்சுதந்திரத்துக்காகப் போராடிய பெருமை தமிழகத்துக்கு உண்டு.

படைப்பைத் தடை செய்யும் குரலை ஓர் அமைப்பு, கட்சி, இயக்கம் முன்வைப்பதைப் புரிந்துகொள்ளலாம். (ஆனால், அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல). ஆனால் தமிழக அமைச்சரே ஒரு வெப்சீரிஸைத் தடை செய்யக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது தவறான முன்னுதாரணம். அதுவும் கருத்துச்சுதந்திர மறுப்பால் பலமுறை பாதிக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒரு புதிய அரசின் அமைச்சரே படைப்புச் சுதந்திரத்துக்கு எதிராகக் கடிதம் எழுதுவது வரலாற்றுக்கு எதிரானது.

கலைகளையும் இலக்கியத்தையும் தன் அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தி திராவிட இயக்கம் வளர்ந்துவந்த நேரத்தில் எத்தனையோ தடைகளையும் தணிக்கைகளையும் சந்தித்திருக்கிறது. அறிஞர் அண்ணாவின் 'ஆரிய மாயை', புலவர் குழந்தையின் 'இராவண காவியம்' ஆகிய நூற்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டன. நடிகவேள் எம்.ஆர்.ராதா தன் நாடகங்களுக்காகப் பலமுறை கைது செய்யப்பட்டார். 'நாடகம் நடத்துபவர்கள் அதன் திரைக்கதை வடிவத்தை அரசிடம் காட்டி ஒப்புதல் பெற்றபிறகே நாடகம் நடத்த வேண்டும்' என்னும் நாடகத்தணிக்கைச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முதலாக எம்.ஆர்.ராதாவுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது.

கலைஞர்.மு.கருணாநிதியின் 'பராசக்தி' திரைப்படத்தைத் தடை செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் நீளமும் ஆழமும் நிறைந்த கட்டுரையை எழுதியுள்ளார். மிசா காலத்தில் கருணாநிதியின் முரசொலியே தணிக்கை செய்யப்பட்டது. யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்த நிலையில், அண்ணாவின் நினைவுநாளையொட்டி, 'அண்ணா நினைவிடத்துக்கு வர இயலாதவர்கள்' என்று சாமர்த்தியமாகக் கருணாநிதி முரசொலியில் பட்டியல் இட்டது வரலாறு.

The Family Man 2
The Family Man 2

கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவு என்பது ஏதோ கடந்தகால வரலாறு அல்ல. குஷ்பு தமிழ்பெண்களை இழிவுபடுத்தியதாக அவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தபோது, இன்றைய தி.மு.க. மாநில மகளிரணிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி, கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து 'கருத்து' என்னும் அமைப்பைத் தொடங்கினார். இத்தகைய பாரம்பரியம் கொண்ட தி.மு.க. அரசு தானே படைப்புச் சுதந்திரத்துக்குக் குறுக்கே நிற்பது சரியல்ல. கடந்தகால கருணாநிதி ஆட்சியில் 'ஒரே ஒரு கிராமத்திலே', 'தி டாவின்ஸி கோட்' போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. அந்தத் தவறுகள் இப்போதாவது திருத்தப்பட வேண்டும்.

மேலும் இன்று திரைப்படங்கள் தடைகள், தணிக்கைகளைச் சந்திக்கும் சூழலில் படைப்புச்சுதந்திரத்துக்கான வெளி வெப் சீரிஸ்களிலேயே உள்ளன. 'பாதாள் லோக்', 'லீலா', 'ஃபேமிலி மேன்' போன்ற வெப்சீரிஸ்கள் மதவாத அரசியல், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றைத் துணிச்சலாக விமர்சிக்கின்றன. இதனாலேயே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வெப்சீரிஸ்களைத தணிக்கைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க அரசு மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் மத்திய அரசின் வேலையை சுலபமாக்கிவிடக்கூடாது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு