Published:Updated:

மக்கு சூப்பர் ஹீரோ!

web series
பிரீமியம் ஸ்டோரி
News
web series

web series

சூப்பர் ஹீரோ சீரிஸ்களைப் பொறுத்தவரை மார்வலும் டிசியும்தான் முன்னோடிகள். டேர்டெவில், ஜெஸிக்கா ஜோன்ஸ், ஏஜென்ட் கார்ட்டர் என மார்வலும், தி ப்ளாஷ், பிளாக் லைட்னிங் என டிசி காமிக்ஸும் மாறி மாறி சிக்ஸர் அடிப்பார்கள்.

இதற்கிடையில் எப்போதாவது வெளியே இருந்து ஒரு சூப்பர்ஹீரோ சீரிஸும் சூப்பர்ஹிட் அடிக்கும். அமேசான் ப்ரைமில் வெளியான நியூ இங்லாண்ட் காமிக்ஸின் ‘தி டிக்’ சீரிஸ் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

சூப்பர்ஹீரோக்களும் சூப்பர்வில்லன்களும் பொதுமக்களைவிட அதிகமாய் வாழும் அமெரிக்க நகரம் ஒன்றில் நடக்கும் கதை இது. டெரர் என்ற சூப்பர்வில்லனுக்கும் சூப்பர் ஹீரோ குழு ஒன்றிற்கும் நடக்கும் சண்டையின் நடுவே மாட்டிக்கொள்கிறார்கள் ஆர்தர் என்ற சிறுவனும் அவன் தந்தையும். மோதலில் அவன் தந்தை இறந்துவிட, மன அழுத்தத்திலேயே கழிகிறது ஆர்தரின் பால்யம். வளர்ந்தபின் அவனுக்கு டிக் என்ற பிரமாண்ட புளூ கலர் சூப்பர் ஹீரோவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த நட்பு ஆர்தரை சூப்பர்வில்லன்கள்மீதான பயத்திலிருந்து மீட்டெடுக்கிறது. தன் தந்தையின் மரணத்திற்குக் காரணமான வில்லனைப் பழிவாங்க டிக் துணையோடு ஆர்தர் போராடுவதை கிரேஸி மோகன் டைப் ‘வசன காமெடிகளால்’ சிரிக்கச் சிரிக்கச் சொல்வதுதான் இந்தத் தொடர்.

சூப்பர்ஹீரோ படைப்புகள் மலிந்துபோன 80களின் இறுதியில் அவற்றை நக்கலடிப்பதற் காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த காமிக்ஸ் கதாபாத்திரம். அதற்கு மக்களிடம் நல்ல ரீச் இருக்க, அதை முதலில் அனிமேஷன் தொடராகவும் பின்னர் லைவ் ஆக்‌ஷன் தொடராகவும் கொண்டுவந்தார்கள். இரண்டுமே காமிக்ஸ் அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. ‘சரி கடைசியா ஒருதடவை முயற்சி செஞ்சு பார்ப்போம்’ என 2016-ல் முதல் எபிசோடினை மட்டும் பைலட் எபிசோடாக வெளியிட்டார்கள். ‘இதுவும் மொக்கையாத்தான் இருக்கு’ என விமர்சகர்கள் கழுவி ஊத்தினார்கள். அவர்கள் சொன்ன குறைகளிலெல்லாம் கவனம் செலுத்தி ஹிட் அடித்தே ஆகவேண்டும் என எக்கச்சக்கமாய் மெனக்கெட்டு 2017-ல் கொஞ்சம், 2018-ல் கொஞ்சம் என இரண்டு பகுதிகளாக முதல் சீசனை அமேசான் வெளியிட, திட்டியவர்கள் எல்லாம் தம்ஸ் அப் காட்டினார்கள். 2019-ல் வெளிவந்த இரண்டாவது சீசனும் சூப்பர்ஹிட்.

web series
web series

தொடரின் வெற்றிக்கு முக்கியக் காரணம் டிக் வேடத்தில் நடித்த பீட்டர் செராஃபினோவிக்ஸ் தான். மக்கு சூப்பர்ஹீரோவாக இவர் காட்டும் லேட் ரியாக்‌ஷன்களும் அசால்ட் உடல்மொழியும் குபீர் ரகம். நிஜத்தில் ட்ரம்ப் உட்பட எல்லாரையும் இணையத்தில் நக்கலடிக்கும் வழக்கமுடையவர் என்பதால் தொடரில் சூப்பர்ஹீரோக்களை எல்லாம் கண்டபடி ரோஸ்ட் செய்து விளையாடுகிறார்.

அவர் தவிர்த்த மற்ற சூப்பர்ஹீரோக்களும் சிரிப்புரகம்தான். மீன் பிடிப்பவர்களின் வலையில் மாட்டிக்கொள்ளும் ‘அக்வாமேன்’ சாயல் சூப்பர் ஹீரோ, பி.ஆர் எல்லாம் வைத்து சோஷியல் மீடியாவில் பிராண்ட் புரமோஷனில் ஈடுபடும் சூப்பர்மேன் சாயல் ‘சுப்பீரியன்’, அயர்ன்மேனின் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸான ஜார்விஸை நக்கலடிக்கும் - டிஜே மியூசிக் போட்டு பார்ட்டி பண்ணும் தி போட் ஏ.ஐ என டிசியையும் மார்வலையும் சகட்டு மேனிக்கு ஓட்டியிருக்கிறார்கள். அதேசமயம் வரம்புமீறாமல் ஓட்டியிருப்பதுதான் பெரிய ப்ளஸ்.

‘என் சொந்த ஊரு அட்லாண்டிஸ். எங்க ஏரியா கடல்ல எல்லாம் பிளாஸ்டிக்கைக் கொட்டி வெச்சிருக்கீங்க, அதான் நான் பூமிக்கு வந்துட்டேன்’ என ஒரு லாப்ஸ்டர் சூப்பர்ஹீரோயின் பேசுவதுபோன்ற குட்டி குட்டி அரசியல் நக்கல்களும் ஆங்காங்கே தென்படுகின்றன.

டிக் திரையில் தோன்றும்போதெல்லாம் வேகமெடுக்கும் கதை, அவரைத் தவிர்த்து மற்றவர்கள் வரும்போது ஸ்லோ ஆவதுதான் தொடரின் முக்கியக் குறை. மொத்தமே 22 எபிசோடுகள். ஒவ்வொன்றும் அதிகபட்சம் 25 நிமிடங்கள்தான் என்பதால் ஒரு வீக் எண்டில் உட்கார்ந்து முடித்துவிடலாம். இந்த நேரத்திற்குத் தேவையான சிரிப்பு ஹீரோ இந்த ‘டிக்’.