Published:Updated:

அடுத்தவர் வாழ்க்கையில் இப்படி மூக்கை நுழைக்கலாமா... இதெல்லாம் டூ மச் அபி! #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 23-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...

புவனாவும் சேதுராமனும் சொத்தில் பங்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். `அபி வருவாள், பார்த்துவிட்டுப் போகலாம்' என்கிறார் சேதுராமன். `வேண்டாம், நாம் சொத்தை விட்டுக் கொடுத்தது தெரிந்தால் அபி வருத்தப்படுவாள்' என்கிறார் புவனா. சேதுராமன் புவனாவின் தொடர்பு எண் கேட்க, அதையும் கொடுக்க மறுக்கிறார் புவனா. இப்படித் தொடர்புகொள்ள வழியில்லாமல் செய்துவிட்டு, `கல்யாணத்துக்கு ஏன் எனக்குச் சொல்லவில்லை' என்று புவனா கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறதோ?

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

ஹர்ஷிதாவின் செக்ஸ் பார்ட்னர் ரித்விக்கை வைத்துக்கொண்டே குடிக்க ஆரம்பிக்கிறான். திடீரென்று அருகில் இருக்கும் ரித்விக்கிடம் மூர்க்கமாக நடப்பதைப் பார்க்கும் ஹர்ஷிதா, அவனை வெளியே போகச் சொல்கிறாள். அவன் வெளியிலிருந்து அசிங்கமாகப் பேசுகிறான். எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

மறுநாள் ரித்விக்குடன் வரும் ஹர்ஷிதா, தனக்கு ஓர் அவசர வேலை இருப்பதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படி அபியிடம் கேட்கிறாள். தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லும் அபி, ``நீங்க எடுக்கும் முடிவில் அடுத்தவங்களைப் பத்திக் கவலைப்பட மாட்டேன்னு சொன்னீங்க. ஆனா, ரித்விக் பத்தி நீங்க அவசியம் கவலைப்படணும்” என்கிறாள்.

சற்று நேரத்தில் ஹர்ஷிதாவின் பார்ட்னர் வந்து சாவி கேட்கிறார். அவரிடம், ``நீங்கள் ரித்விக்குக்கு யார்'' என்று கேட்கிறாள் அபி. ``அப்பா மாதிரி'' என்கிறார் அவர். ``நீங்க சொந்த மகன் மாதிரி நினைக்கிறதுனா இந்தச் சாவியை வாங்கிக்கோங்க. இல்லைன்னா இனி இங்கே வராதீங்க. ரித்விக் ரொம்பப் பாதிக்கப்படறான்'' என்கிறாள் அபி. அந்த மனிதர் சாவியை வாங்காமலே சென்றுவிடுகிறார்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. நல்லதே சொன்னாலும் அபி செய்தது அநாகரிகமான செயல்தான். யாரும் தெரியாமல் எதையும் செய்வதில்லை. அவரவர் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை அனுபவிக்கிறார்கள். அது கஷ்டமோ சந்தோஷமோ அதற்கு அவர்கள் மட்டும்தானே பொறுப்பு? ஹர்ஷிதாவின் வாழ்க்கையை அபி மட்டுமல்ல, யாருமே புரிந்துகொள்ள முடியாது. பக்கத்து வீட்டுக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி அட்வைஸ் எல்லாம் செய்வது டூமச் அபி!

அபியால் தன் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, நாத்தனார், சித்தார்த் என்று யாரிடமும் நியாயமான விஷயங்களைக்கூட எதிர்த்துக் கேட்க முடியவில்லை. அடுத்தவர் விஷயத்தில் இவ்வளவு தூரம் தலையிட மட்டும் எப்படித்தான் தைரியம் வந்ததோ?

நமக்கே அபியின் செயல் எரிச்சலைத் தரும்போது, சும்மா இருப்பானா சித்தார்த். ``உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? இந்த மாதிரி ஆட்களுடன் சகவாசம் வச்சுக்கிட்டா, உன்னைப் பத்திதான் என்ன நினைப்பாங்க? உனக்கு ஏன் எதுவும் புரிய மாட்டேங்கிது?” என்று சித்தார்த் சொல்லிக்கொண்டிருக்கும்போது காலிங் பெல் அடிக்கிறது.

என்ன பூதம் காத்திருக்கிறதோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு