பெனிடா சொன்ன அந்த விஷயம்... சங்கடத்துக்கு உள்ளான அபி - கௌதம்! #VallamaiTharayo

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 53-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
``உங்களைத் தொந்தரவு செஞ்சிட்டேன், சாரி கெளதம்” என்று அபி சொல்லவும், ``என்னால நீங்க ஏதாவது அசெளகரியத்தை உணர்ந்தீங்களா?” என்று கேட்கிறான் கெளதம்.
``இல்ல... இல்ல... அதனாலதான் நிம்மதியா தூங்கினேன். எந்தப் பதற்றமோ பாதுகாப்பின்மையோ இல்லவே இல்ல!”

``வெளிப்படையா சொல்லிடறேன். உங்களோட நெருக்கம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு அபி. நட்பைத் தாண்டி ஒரு அன்பு இருக்கிறப்பதான் நம்மளால இப்படி ஒரு நெருக்கத்தை உணர முடியும். நீங்க என்ன சொல்றீங்க?” என்று கெளதம் கேட்க, அது உண்மைதான் என்று ஆமோதிக்கிறாள் அபி.
அபி, பெனிடா, கெளதம் - மூவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அலுவலகத்தைச் சேர்ந்த இருவர் குடித்துவிட்டு வந்து, கெளதமையும் அபியையும் சேர்த்து மோசமாகப் பேசுகிறார்கள். பொறுக்க முடியாமல் இறுதியில் அவர்களை அடித்தே விடுகிறான் கெளதம்.
என்னதான் படித்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், ஓர் ஆணும் பெண்ணும் பழகுவதை இந்தச் சமூகம் தவறாகவே பார்க்கிறது என்பது உண்மைதான். அதற்காக இப்படி நேரடியாக வந்தே பேசுவார்களா?
அறைக்குச் சென்றவுடன் கெளதம் `ஸாரி’ என்று மெசேஜ் அனுப்புகிறான். ``பெண்களைக் கேவலமாகப் பேசினால் யாருக்குமே கோபம் வரத்தானே செய்யும்? அதில் ஒண்ணும் தவறில்லை” என்று அபி சொல்ல, ``உங்களைச் சொன்னதால்தான் அதிகமா கோபப்பட்டுட்டேன் போலிருக்கு” என்கிறான் கெளதம்.

அபிக்கு இரண்டு நாள்கள் கெளதமுடன் இருந்த தருணங்கள் எல்லாம் அவ்வப்போது நினைவுக்கு வந்து, மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
மறுநாள் காலை சென்னைக்கு காரில் வந்துகொண்டிருக்கிறார்கள். அபியின் முகம் மீண்டும் இறுக்கமாகிவிடுகிறது. அதைப் பார்த்த பெனிடா, ``ஏன் அபி, இப்படி சீரியஸா இருக்கீங்க? ஜாலியா இருங்க” என்கிறாள்.
``வீணா சொன்ன புராஜெக்டை நினைத்துக்கொண்டிருந்தேன்’’ என்று அபி சொல்ல, ``உங்க கணவரைப் பிரிஞ்ச வருத்தத்துலதான் இப்படி இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆபீஸ் வேலையை எல்லாம் ஆபீஸோட விட்டுடணும். இப்படிச் சுமந்துட்டே இருக்கக் கூடாது. லோகேஷ் முடிக்க வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு. கொஞ்சமாவது கவலைப்படுறானா பாருங்க. உங்க வீட்டுக்காரர் மாதிரி ஒருத்தர் கிடைச்சா, நான் ட்ரீம்லயே இருப்பேன்... எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கார்!” என்று சித்தார்த் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் பெனிடா.
உடனே லோகேஷ், ``அபி உங்க கணவரைப் பத்திச் சொல்றா. நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க. சித்தார்த்கிட்ட நீ தண்ணி அடிக்கிற விஷயத்தைச் சொன்னால் என்ன ஆகும் தெரியுமா?” என்று பெனிடாவிடம் கேட்கிறான்.

கொஞ்சமும் யோசிக்காமல், ``அபி என்னைச் சொன்னால், அவங்க ரூம்ல கெளதம் ஸ்டே பண்ண விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்குமே... அப்புறம் எப்படிச் சொல்வாங்க?” என்று பெனிடா கேட்கவும் சூழல் மீண்டும் இறுக்கமாகிறது.
பெனிடாவுக்குத் தன் தவறு அப்போதுதான் புரிகிறது.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா