`அடடே... சித்தார்த்தா இது?!' - அபிக்கு காத்திருந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 55-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
தூங்கிக்கொண்டிருக்கும் அபிக்கு காபி கொண்டுவந்து தருகிறாள் ஆதிரா. லேட்டாகிவிட்டது என்று பதறி எழும் அபி, `டிபன் செய்து தருகிறேன்' என்கிறாள். `நாங்கல்லாம் சாப்பிட்டுட்டோம். அப்பா டிபன் செய்து கொடுத்துட்டார். ஒரு வேளை மட்டும்தான் ஹோட்டல்ல சாப்பிட்டோம். அப்பாவே சமையல் செய்துட்டார். நிறைய இடங்களுக்கு கூட்டிட்டுப் போனார். எங்களோடு விளையாடினார். ரொம்ப ஜாலியா இருந்தோம்' என்று மகள் சொல்வதைக் கேட்டு, அபிக்கு சந்தோஷமாக இருக்கிறது.
”நீயே சமைக்கும்போது நான் சமைக்க மாட்டேனா? குழந்தைகளுக்குப் பிடிச்சிருக்கு. உனக்கு எப்படின்னு தெரியலை. எல்லா வேளையும் வெளியில் சாப்பிட்டா குழந்தைகளுக்கு ஒத்துக்காதேன்னு நானே பண்ணினேன்” என்கிறான் சித்தார்த். அபி நெகிழ்ச்சியடைகிறாள்.
“மீட்டிங் நேரத்தில் தொந்தரவு பண்ணிட்டேனா? ஃபன் டாஸ்க் எல்லாம் வச்சிருப்பாங்களே?”
“பகல் எல்லாம் மீட்டிங். நைட் ஃபன். ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு பாட்டுப் பாடினோம்...”
“உனக்குப் பாடக்கூடத் தெரியுமா?”
ஏழு வருஷம் வாழ்ந்த பிறகுதான், `மனைவிக்குப் பாடத் தெரியும்’ என்றே ஒரு கணவனுக்கு இப்போதுதான் தெரிகிறது என்றால், என்ன மாதிரியான வாழ்க்கை இது?
நன்றி சொல்லும் அபியிடம், “என்ன புதுசா இருக்கு? ஏதாவது எங்கிட்ட மறைக்கிறியா?” என்று கேட்கிறான் சித்தார்த். அபிக்கு சங்கடமாக இருக்கிறது.
கெளதம் ரூமில் தங்கியது குறித்து பேசியதற்கு மன்னிப்பும் லோகேஷுக்கு விளக்கிப் புரிய வைத்துவிட்டதால் இனி பிரச்னை இல்லை என்றும் மெசேஜ் அனுப்புகிறாள் பெனிடா. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அபியின் போனில் பேச வேண்டும் என்று சித்தார்த் வந்து கேட்கிறான். அவன் கவனத்தைத் திசைதிருப்பி, மெசேஜை அழித்துவிட்டுக் கொடுக்கிறாள் அபி.
கெளதம் அறையில் தங்கிய விஷயத்தைச் சொல்லிவிடலாமா என்று யோசிக்கிறாள். கெளதம் சொன்னது நினைவுக்கு வருகிறது. அனுவுக்கு ஃபோன் செய்கிறாள். நடந்த விஷயத்தைச் சொல்கிறாள். `அப்போ மேட்டர் நடந்துடுச்சா’ என்று அனு கிண்டல் செய்கிறாள். லோகேஷும் இப்படித்தான் யோசிக்கிறான், அபியை நன்கு அறிந்த மாடர்ன் பெண்ணான அனுவும் இப்படித்தான் யோசிக்கிறாள் என்பது எவ்வளவு முரணானது! இந்த நிலை மாறவேண்டும் என்றால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?
அபி கோபித்துக்கொள்கிறாள். விளையாட்டுக்குச் சொன்னதாக அனு மன்னிப்பு கேட்கிறாள். இதில் எல்லாமா விளையாடுவார்கள்? “இந்த விஷயத்தை சித்தார்த்கிட்ட சொல்லாமல் ஒரே குற்ற உணர்ச்சியா இருக்கு. என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு சொல்லிடலாம்னு இருக்கேன்” என்று அபி சொல்கிறாள்.
”ஐயையோ... அந்தக் காரியத்தை மட்டும் செய்யாதே... நீ என்ன தப்பா செஞ்சே, குற்றவுணர்வா இருக்கிறதுக்கு? அந்த சிடுமூஞ்சி கத்தி, ஆர்ப்பாட்டம் செஞ்சு, ஊருக்கெல்லாம் சொல்லிடும். அப்புறம் உன் பெரியம்மா, பெரியப்பா, அம்மா, அப்பான்னு ஒரு பட்டாளமே இங்கே வந்து உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும்” என்கிறாள் அனு.
அபி பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “நான் நினைச்சேன்... இப்படி ஏதாவது நடக்கும்னு” என்றபடி வருகிறான் சித்தார்த்.
அது என்ன?
திங்கள் கிழமை இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா