லன்ச்சுக்கு அபி வரும்போது அங்கே கெளசல்யாவின் கணவர் உட்கார்ந்திருக்கிறார். கெளதம், பெனிடா, ஹர்ஷிதாவும் இருக்கிறார்கள்.
``தான் பண்ணினது தப்புன்னு சித்தார்த் உணர்ந்துட்டான்மா. உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டு அவனால இருக்க முடியல. அக்கா சொல்றதைக் கேட்பான். கொஞ்சம் முன்கோபம். மத்தபடி அவன் மோசமில்லைம்மா. நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்தா போதும்மா” என்கிறார் கெளசல்யாவின் கணவர்.
அமைதியாக இருக்கிறாள் அபி.
``அபி, உங்க ரெண்டு பேருக்குமே அன்பு இருக்கு. உங்களால பிரிய முடியாதுன்னு ஏற்கெனவே சொன்னேன்ல... எல்லாத்தையும் மறந்துட்டு சேர்ந்துடுங்க” என்கிறான் கெளதம்.
``ஆமாம், அபி. சித்தார்த் குடிச்சிட்டு தன்னை மறந்து இருந்தப்பகூட உங்க பேரைத்தான் சொல்லிட்டே இருந்தார். உங்களுக்கும் அவர் மேல அன்பு இருக்கு. அப்புறம் என்ன? ஒரு தடவை சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாம். எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு வரல” என்கிறாள் ஹர்ஷிதா.
இறுதியில் அபி சம்மதிக்கிறாள். மறுநாள் ஆதிரா பர்த்டே பார்ட்டியில் அபியும் சித்தார்த்தும் இணைகிறார்கள் என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் விழாவுக்கு அழைக்கிறார் கெளசல்யாவின் கணவர்.
பர்த்டே பார்ட்டி. அக்கா, மாமாவுடன் சித்தார்த் வருகிறான்.
``என்னை மன்னிச்சிடு அபி. உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால இருக்க முடியல. எங்க அக்கா பேச்சு கேட்டு இப்படி நடந்துகிட்டாலும் எனக்கு அறிவு வேணும்ல? முழுசா மாறிட்டேன்னு சொல்ல மாட்டேன். உன்னைக் காயப்படுத்தாத அளவுக்கு நடந்துக்கறேன்” என்கிறான் சித்தார்த்.
``என்னை நீங்க கொண்டாடணும்னு எல்லாம் நான் நினைச்சதே இல்ல. ஒரு மனுஷியா ட்ரீட் பண்ணினா போதும். பேசறதுக்குத் தயக்கமில்லாம, எல்லாமே ஷேர் பண்ணிக்கக்கூடியவரா இருந்தா எந்தப் பிரச்னையும் வராது” என்கிறாள் அபி.
சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் கெளசல்யாவுக்கு உடன்பாடு இல்லை. எல்லோரும் வருகிறார்கள். கேக் வெட்டி, கொண்டாடுகிறார்கள். ``ஏதோ பொருள்களைத் தள்ளிவிட்ட ஆதிராவைக் கூப்பிட்டு, பொண்ணுன்னா அடக்கமா இருக்கணும்.
இப்படியா நடந்துக்கறது? சொல்றதைக் கேட்டு, எதிர்த்துப் பேசாம இருந்தாதான் கல்யாணம் பண்ணினாலும் குடும்பம் நடத்த முடியும்” என்று தன் வழக்கமான பல்லவியைப் பாடுகிறார் கெளசல்யா.
அதைக் கேட்ட அபி, ``குழந்தைகிட்ட என்ன பேசறீங்க? பொண்ணுங்களை வாயைத் திறக்கக்கூடாதுன்னு சொல்லி வளர்த்தா, தேவையானப்ப கூட அவங்க பேச மாட்டாங்க.
அதுக்கு நானே உதாரணம். பெண்களுக்குக் கட்டுப்பாடு விதிச்சு அடைச்சு வைக்காதீங்க. ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்க கத்துக்கொடுங்க” என்று சொல்கிறாள்.
சரியான கருத்தைச் சொல்கிற இந்தப் பகுதி பாராட்டுக்குரியது. தாமதமாக வரும் கெளதமை லோகேஷும் பெனிடாவும் அழைத்து வருகிறார்கள். சித்தார்த், கெளசல்யா முகம் இறுகுகிறது. அடுத்து?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!