Published:Updated:

`இனிமே சேர்ந்து வாழ முடியாது!' - அபியைக் கடுப்பாக்கிய சித்தார்த்... என்ன நடந்தது? #VallamaiTharayo

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 75-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆதிராவுக்கு கிஃப்ட் கொடுத்துவிட்டு, சித்தார்த்திடம் ஒரு கவர் கொடுக்கிறான் கெளதம். ``கனடா போகும் வாய்ப்பு. அபியை நான்தான் ரெகமண்ட் பண்ணினேன். அவங்க என்னோட ரொம்ப நல்ல ஃபிரெண்ட். தவறா புரிஞ்சுகிட்டதால என்னால உங்க ஃபேமிலில சிக்கல் வந்துருச்சு. இந்தப் புது வாழ்க்கையில் ஹேப்பினஸ் மட்டும்தான் இருக்கணும். நீங்க குடும்பத்தோடு கனடா போங்க. அங்கே உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்” என்று சொல்கிறான் கெளதம்.

அபிக்கும் சித்தார்த்துக்கும் இந்த விஷயம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மறுநாள் இரவு. அபியும் சித்தார்த்தும் படுக்கையறையில் அமர்ந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ் என்கிறான் சித்தார்த். ``கடந்து போன விஷயங்களுக்காக இனிமே சாரியோ, தேங்க்ஸோ சொல்ல வேண்டியதில்லை. அதையெல்லாம் மறந்துடலாம். இனி எப்படி இருக்கப் போறோம்ங்கிறதை மட்டும் பேசுவோம்” என்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``நீ அப்படியேதான் இருக்கே. நான்தான் மனசு மாறிட்டேன். உங்கள விட்டுப் பிரிஞ்சப்பதான் எனக்கு உன்னோட அருமை புரிஞ்சது. நீ என்னை எப்படிப் பார்த்துக்கிட்டேன்னு தெரிஞ்சது. கண் முன்னால நீதான் வந்துகிட்டேயிருந்த. குழந்தைகளைப் பார்க்கிற சாக்கில் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். குழந்தைங்க வீட்டுக்குக் கூப்பிட்டவுடன் வந்துட்டேன். அன்னிக்கு உன்னைப் பார்த்த பிறகு, என்னவோ ஆயிருச்சு. கல்யாணம் ஆகி ஏழு வருஷத்தில் தெரியாத காதல், அன்பு எல்லாம் உணர முடிஞ்சது” என்கிறான் சித்தார்த்.

``எனக்கும் அன்னிக்கு நைட் உங்களை அப்படிப் பார்த்ததும் மனசு வலிச்சது. உங்களை யாராவது சிடுமூஞ்சின்னு சொன்னால் கோபம் வரும். அப்போ ஏன்னு காரணம் புரியல. இப்ப உங்க மேல வச்சிருக்கிற அன்புதான்னு புரியுது. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்ககிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம்னு நம்பிக்கை வந்துருச்சு.”

சித்தார்த் ஏதோ யோசிக்கிறான். எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க என்கிறாள் அபி.

``அன்னிக்கு நைட் உங்க ரெண்டு பேருக்குள்ளே எதுவும் தப்பா நடந்துடலையே?” என்று மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறான் சித்தார்த்.

அதிர்ச்சியடைகிறாள் அபி.

``இல்ல அபி, அன்னிக்கு தப்பு நடந்திருந்தால்கூட எனக்கு ஒண்ணும் இல்லை. நடந்துச்சா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான். இல்லைன்னா, யோசிச்சு யோசிச்சு நிம்மதியே போகுது” என்கிறான் சித்தார்த்.

அபி எரிச்சலுடன் பார்க்க, ``தப்பு நடந்திருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனா, என்ன நடந்துதுன்னு மட்டும் தெரிஞ்சா போதும்” என்கிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அபி எழுந்து சென்றுவிடுகிறாள். இரவு முழுவதும் யோசிக்கிறாள். காலையில் தூங்கி எழுந்து வருகிறான் சித்தார்த். அனு முறைத்துக்கொண்டு செல்கிறாள்.

``அனு கிட்ட சொல்லிட்டியா? நான் தெரியாம கேட்டுட்டேன்” என்கிறான் சித்தார்த்.

``நான் சொல்றதை மட்டும் கேளுங்க. இனிமேல் நாம சேர்ந்து வாழ முடியாது. குழந்தைகளுக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தா அது குழந்தைகளையும் பாதிக்கும். தனித்தனியா இருந்தாலும் நல்ல பேரன்ட்டா இருக்க முடியும்” என்கிறாள் அபி.

``எனக்குக் கொஞ்சம் டைம் குடு. சரியாயிருவேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சந்தேகம் என்னிக்கும் சரியாகாது. ஆபீஸிலிருந்து லேட்டா வந்தால் தப்பா தோணும். நானும் நீங்க தப்பா நினைப்பீங்களோன்னு பயந்து பயந்து வாழ முடியாது.”

``தப்பு நடந்தாலும் பரவாயில்லைன்னுதானே சொல்றேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே. அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்” என்று குரல் உயர்த்துகிறான் சித்தார்த்.

``இதுதான் நீங்க. உங்க கிட்ட பேசி பலன் இல்ல. அவரவர் வழியைப் பார்த்துக்கலாம். கிளம்புங்க.”

``ரொம்ப இன்சல்ட் பண்றே. இது என் வீடு. நான் இருக்கறது உனக்குத் தொந்தரவா இருக்கோ? இங்கே தான் இருப்பேன்” என்கிறான் சித்தார்த்.

இனி?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்.

- எஸ். சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு