அத்தனைக்கும் பதில் சொன்ன அபி... இறுதியில் எடுத்த `சபாஷ்' முடிவு! #Climax #VallamaiTharayo

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 80-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
சித்தார்த் கெளதமைச் சந்திக்கிறான். ``உங்களையும் அபியையும் ரொம்ப மோசமா பேசிட்டேன். இப்பதான் எனக்கு தப்பு புரியுது. ரொம்ப சாரி கெளதம். என்னால எங்க குடும்பம் மட்டுமில்லை, நீங்களும் கல்யாணம் பண்ணிக்கல. இது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. அதே மாதிரிதானே அபியும் வருத்தப்படுவா... இப்போ நாங்க ரெண்டு பேரும் சேரப் போறோம். இந்த நாளுக்காக ரொம்ப காத்திருந்தேன். நாளைக்கு கிரஹபிரவேசம் வச்சிருக்கேன். நீங்க அவசியம் வரணும்" என்று சொல்லிவிட்டு, கிளம்புகிறான் சித்தார்த்.

முதல் நாள்தான் அபியிடம் தன் விருப்பத்தைச் சொன்ன கெளதமுக்கு இது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். கலங்கி நிற்கிறான்.
மறுநாள் புதுவீட்டில் எல்லோரும் கூடியிருக்கின்றனர். அபியின் குடும்பம் மகள் மருமகனுடன் சேர்ந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் ஆசையோடு காத்திருக்கிறது. கெளதம் தம் எதிர்பார்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பதுபோல இருக்கிறான்.
கெளசல்யா மோதிரத்தை எடுத்து அபியின் விரலில் போடச் சொல்கிறாள். சித்தார்த்துக்கும் மற்றவர்களுக்கும் ஆர்வம் அதிகமாகிவிடுகிறது. விரலில் மோதிரம் போகும்போது, சட்டென்று கையை இழுத்துவிடுகிறாள் அபி. அனைவரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள்.
``என்ன அபி? ஏன் இப்படிப் பண்றே? உன்கிட்ட சொல்லிட்டுதானே செஞ்சேன்? அப்போ அமைதியாதானே இருந்தே?" என்று கேட்கிறார் கெளசல்யா.
``அமைதியா இருந்தா சம்மதமா? எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. என்னால சேர்ந்து வாழ முடியாது" என்று சொன்னவுடன் வழக்கம்போலவே அபியின் குடும்பம் கோபத்தில் குதிக்கிறது.
``நாங்க அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை சரியாயில்லைன்னு பேர் வரக் கூடாது. ஊர்ல நாலு பேர் என்ன பேசுவாங்க?" என்று கேட்கிறார் அபியின் பெரியப்பா.

``இப்பக்கூட என் வாழ்க்கை, என் சந்தோஷம் உங்களுக்கு முக்கியமில்ல. அந்த நாலு பேர் யாரு? என் விருப்பத்தை எப்பதான் கேட்கப் போறீங்க?
சித்தார்த், நீங்க குழந்தைகளுக்கு அப்பா. எப்ப வேணா பேசலாம், வரலாம், பழகலாம். அதுக்கு உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு. ஆனா, என்னால சேர்ந்து வாழ இனி முடியாது.
கெளதம், உங்கள நான் ஃபிரெண்டா, வெல்விஷரா, மென்ட்டாரா, நல்ல மனிதராதான் பார்க்கறேன். அதைத் தாண்டி யோசிக்கல. நீங்க புரிஞ்சுப்பீங்கனு நம்பறேன்" என்று இருவரையும் புறக்கணிக்கிறாள் அபி.
உடனே, ``ஆம்பள துணையில்லாமல் வாழ முடியுமா?" என்கிறார் அபியின் அம்மா.
ஹர்ஷிதாவும் கௌதமும்கூட சித்தார்த்திடம் சேர்ந்து வாழச் சொல்வது, அவர்களின் கேரக்டர்களுக்குப் பொருத்தமாக இல்லையே!

``வாழ முடியும். என்னிக்காவது என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஒருத்தரைச் சந்திச்சா, அவரோட சேர்ந்து வாழறேன். இல்லைன்னாலும் நானும் குழந்தைகளுமா வாழ்ந்துட்டுப் போறோம். நான் வரேன்" என்று கிளம்புகிறாள் அபி.
சபாஷ் அபி!
இப்படி ஒரு நல்ல முடிவைத் தந்த இயக்குநரைப் பாராட்டலாம்!
- எஸ்.சங்கீதா