Published:Updated:

அமெரிக்க `அதிர்ச்சி', தோழியின் அட்வைஸ்... அடுத்து என்ன செய்வாள் அபி?

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Screenshot from VikatanTV )

இந்த அபி ஏன் இவ்வளவு பயந்தவளாக மாறியிருக்கிறாள்?

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் என்று நெருங்கியவர்களாலேயே செய்யப்படுகிறது. `குட் டச் பேட் டச்’ பற்றி சமீப ஆண்டுகளில் நகரங்களில் பேசப்பட்டு, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விஷயம் இன்னமும் அதிக பேரைச் சென்றடையவில்லை. `வல்லமை தாராயோ' இரண்டாவது எபிசோடுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு.

கல்லூரிக்குச் செல்லும் அபி, பஸ்ஸில் உரசும் ஒருவனிடம் எதிர்ப்பைக் காட்டாமல் எரிச்சலுடன் ஒதுங்கி, ஒதுங்கி நிற்கிறாள். சட்டென்று அபியின் கல்லூரித் தோழி உரசுபவனுக்கு அறை விடுகிறாள். மிரண்ட அபி, தோழியை இழுத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்குகிறாள். `எல்லாவற்றுக்கும் இப்படி பயந்தால் வாழ முடியாது’ என்கிறாள் தோழி. அவள் சொல்வது சரிதான். இன்று பெண்கள் எதையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சரி, இந்த அபி ஏன் இவ்வளவு பயந்தவளாக மாறியிருக்கிறாள்? அவள் குடும்பம்தான் பெண் குழந்தை என்று சொல்லிச் சொல்லியே அவள் தைரியத்தைத் தொலைய வைத்திருக்கிறது. பிரச்னைகளை எதிர்த்து நிற்கப் பழக்காமல், ஒதுங்கிச் செல்ல வைத்திருக்கிறது. ஒதுங்கிச் செல்வதால் தற்காலிகமாகப் பிரச்னை தள்ளிப் போகுமே தவிர, தீர்வு ஏற்படாதே!

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from VikatanTV

தனியே ஒரு கடை வாசலில் நிற்கும் சிறுமி அபியிடம், அந்தக் கடைக்காரன் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபடத் தொடங்குகிறான். அதைப் பார்த்த ஒருவர் அவனைத் தட்டிக் கேட்கிறார். அபியின் அம்மா கோகிலாவிடம் நடந்ததைச் சொல்கிறார். கோகிலாவோ அந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல், அபியை இழுத்துச் செல்கிறார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.

இப்படித்தான் பலரும் தவறு செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் குற்றங்களும் குறைவதில்லை; குற்றவாளிகளும் திருந்துவதில்லை.

குடும்பத்தினரால் அடக்கமாக வளர்க்கப்பட்ட அபி, ஒரு சாதாரணமான விஷயத்தைக்கூட வெளிப்படுத்த இயலாதவளாக இருக்கிறாள். வளர்ந்த பிறகும் குடும்பத்தினர் சொல்வது தன் நன்மைக்காகத்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறாள். அபியின் பாத்திரப் படைப்பை நன்கு உணர்ந்துகொள்ள இரண்டாவது நாள் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உதவின.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from VikatanTV

காலேஜ் டாப்பராக வரும் அபி, அந்த சந்தோஷத்தைக்கூட வீட்டில் தயங்கித்தான் சொல்கிறாள். மகிழ்ந்த குடும்பம், அபிக்கு அமெரிக்க வரன் வந்திருப்பதைப் பெருமையாகச் சொல்கிறது. அதிர்ச்சியடையும் அபியிடம், குடும்பத்தினரை எதிர்த்தே வளர்ந்த அபியின் அண்ணன், `இப்பவே ஓடிப் போயிடு’ என்கிறான். அண்ணன் மட்டுமா, அவளின் உற்ற தோழிகளில் ஒருத்தியும் அதையேதான் சொல்கிறாள் அபியிடம். இன்னொரு தோழி சற்று நிதானத்துடன், `அந்த வரன் உன் கனவுகளை நிறைவேற்றுபவனாகக்கூட இருக்கலாம், இவள் பேச்சைக் கேட்க வேண்டாம்' என்கிறாள்.

என்ன செய்வாள் அபி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு