பிரச்னையில் முடிந்த அபியின் செயல்... கௌதம் vs சித்தார்த்தில் அடுத்து என்ன? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 26-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...
ஓர் அழகான சந்திப்பை நாம் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க மாட்டோம். ஆனால், கெளதமைச் சந்தித்ததைக் காலப்போக்கில் மறந்ததாகச் சொல்லும் அபி, மீண்டும் சந்திக்கிறாள். ஆனால், அந்தச் சந்திப்பு இனிமையானதாக இல்லை.
இனிமேல் குழந்தைகளைத் தானே காரில் சென்று அழைத்து வந்துவிடுவதாக சித்தார்த்திடம் சொல்கிறாள் அபி. ஆச்சர்யமடைந்த சித்தார்த், ``ஊரில் கார் ஓட்டிப் பழகியதை வைத்து, சென்னையில் எல்லாம் ஓட்ட முடியாது. நீ டிரைவிங் கிளாஸ்க்குப் போ” என்று முதல் முறையாக நியாயமாகச் சொல்கிறான்.
அடுத்தவர்களின் உயிர் மேல் அக்கறை இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? முறையாகப் பயிற்சி எடுத்து, தனியாக ஓட்ட முடியும் என்கிற நம்பிக்கை வந்த பிறகே, காரைத் தொடுவார்கள். எல்லாவற்றுக்கும் பயப்படும் அபியோ, சித்தார்த் சொல்வதை எப்படி அலட்சியம் செய்கிறாள்? தெரியவில்லை! தானே காரை எடுத்துக்கொண்டு செல்கிறாள். ஒரு நபர் மீது மோத, பிரச்னையாகிறது. மக்கள் கூடிவிடுகிறார்கள். அப்போது அந்த வழியே வரும் கெளதம், பிரச்னையைச் சமாளித்து, அபியைக் காப்பாற்றுகிறான். மீண்டும் காரை எடுக்கும்போது அது மக்கர் செய்கிறது. அபியை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, தானே ரிப்பேர் செய்து எடுத்து வருவதாகச் சொல்கிறான். இப்போதெல்லாம் இதுபோன்ற சூழலின்போது சர்வீஸ் சென்டருக்கு போன் செய்தால், அவர்களே உடனடியாக வந்து காரை எடுத்துச் சென்றுவிடுகிறார்களே!
அபி வீட்டுக்கு வந்து டென்ஷனாக இருக்கிறாள். திடீரென்று சித்தார்த் வர, தான் காரை எடுத்துச் சென்றதையும் சிறிய விபத்து நடந்ததையும் சொல்கிறாள். தன் பேச்சைக் கேட்காமல் அபி செய்த காரியம் சித்தார்த்தைக் கோபம் கொள்ளச் செய்கிறது. சித்தார்த் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும்!
`காரை எடுத்துச் சென்றது யார்' என்ற கேள்விக்கு அபி பதில் சொல்லவில்லை. ஒரு போன் நம்பர்கூடத் தெரியாத ஒருவனிடம் காரைக் கொடுத்ததாகச் சொன்னால் யாருக்குத்தான் எரிச்சல் வராது? அப்போது சர்வீஸ் சென்டரிலிருந்து கால் வருகிறது. 12,000 ரூபாயைக் கட்டிவிட்டு, காரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
சித்தார்த் கடுங்கோபத்தில் இருக்கும்போது காலிங்பெல் அடிக்கிறது. கெளதம் நின்றுகொண்டிருக்கிறான். காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டதாகவும் காருக்குள் இருந்த முக்கியமான பேப்பர்ஸைக் கொடுக்க வந்ததாகவும் சொல்கிறான். ``பொண்ணுங்கன்னா இப்படி உதவி செய்ய வந்துடுவீங்களா?” என்று மிக மோசமாகப் பேசும் சித்தார்த்தையும், எதையும் பேசாமல் நிற்கும் அபியையும் கண்டு அதிர்ச்சியடைகிறான் கெளதம். சட்டென்று கிளம்பிச் செல்கிறான்.
``அவன் என்னை எதிர்பார்க்கல. நான் இல்லைன்னா உன்னை இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணிருப்பான்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் சித்தார்த். அபி வருத்தத்துடன் கெளதம் சென்ற பாதையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இனி என்ன ஆகும்?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா