Election bannerElection banner
Published:Updated:

அனுவும், பொற்கொடியும் அபியை இப்படி குழப்பிட்டாய்ங்களே..?! #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Screenshot from Vikatan TV )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினந்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 3-வது எபிசோடு குறித்த கருத்துகள் இதோ...

அபியை அவள் அம்மா திட்டுகிறாள். பெரியப்பாவோ, `இனி அபி வீட்டில் இருக்கும் வரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது' என்கிறார். `அபி பிறந்த பிறகுதான் இந்த வீடு வசதியானது. இவ மஹாலஷ்மி’ என்று அபி மீது தனக்கு இருக்கும் பாசத்துக்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.

வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கு ஒருவரின் பிறப்பை அடையாளப்படுத்தி, மகிழ்வது நம் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், இது சரியானதா என்கிற எண்ணத்தை இந்தக் காட்சி எழுப்புகிறது. மஹாலஷ்மி என்று கொண்டாடும்போது பிரச்னை இல்லை. அதுவே ஒருவரின் பிறப்புக்குப் பிறகு, குடும்பம் நொடித்துப்போனால், என்ன சொல்வார்களோ? யோசிக்கும்போதே திகிலாக இருக்கிறது!

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அபியின் கல்யாணம் பற்றியே பெரியவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சங்கடத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள் அபி. அவள் அருகிலிருக்கும் அண்ணன் சாப்பிட்டபடியே உரையாடல்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில், `நீங்களாகவே பேசிட்டு இருக்கீங்களே... கல்யாணத்தில் விருப்பமான்னு அபிகிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா, அவளோட முடிவுதானே இதில முக்கியம்?' என்று குரல் கொடுக்கிறான். உடனே அபியின் பெற்றோர் டென்ஷன் ஆகிறார்கள்.

அபியின் பெரியப்பா அவளை அழைத்து, `அபி உனக்கு கல்யாணத்தில் விருப்பம்தானே?' என்று கேட்கிறார். அபி மிகுந்த தயக்கத்துடன் தன் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறாள். பெரியப்பா வருத்தத்துடன் எழுந்து செல்கிறார்.

அபியின் அம்மாவும் அப்பாவும் அவளைத் திட்டுகிறார்கள். ஓடிவந்த பெரியம்மா, அபியிடம் தான் பேசிக்கொள்வதாக எல்லோரையும் அனுப்பி வைக்கிறார். தனியறையில் அபியை அழைத்து, காரணம் கேட்கிறார். தான் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்கிறாள் அபி. காதல் என்று சொல்லாமல், படிப்பு என்று சொன்னதில் பெரியம்மாவுக்குச் சற்று நிம்மதி. `அவ்வளவுதானே, கல்யாணம் பண்ணினால் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது?' என்று கேட்கிறார்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அப்போது அபியின் அப்பா வந்து, `என்னையும் தம்பியையும் வளர்த்து ஆளாக்கியதே அண்ணனும் அண்ணியும்தான். அவங்க இல்லைன்னா இந்த வசதியெல்லாம் கிடையாது. யோசிச்சு முடிவு எடு' என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

அடுத்த காட்சி... அபி தன் தோழிகளான அனுவையும் பொற்கொடியையும் சந்திக்கிறாள். மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று பிடிக்கவில்லை என்று சொல்லிவிடலாம் என்று அனு வழக்கம்போல ஐடியா கொடுக்கிறாள். அதைப் பொற்கொடி நிராகரிக்கிறாள். எதையும் ஆராயாமல் இப்படி முடிவெடுப்பது சரியல்ல என்பது பொற்கொடியின் வாதம். அது சரியானதுதானே! அதனால் அனுவின் ஐடியாவை அபியும் வேண்டாம் என்கிறாள். அடுத்து மாப்பிள்ளையிடமே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, அவனது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் செல்கிறார்கள்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

`இதுதான் நல்ல சான்ஸ். உங்களைப் பிடிக்கலைன்னு மெசேஜ் போட்டுடு’ என்கிறாள் அனு. `வேண்டாம் அனு. போட்டோவெல்லாம் பார்த்தா நல்ல ஆள்னு தோணுது. இவ பேச்சைக் கேட்டு முடிவெடுக்காதே’ என்கிறாள் பொற்கொடி. அபிக்கும் அவனைப் பார்த்த பிறகு, அவசரப்பட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அதை அனுவிடமும் தெரிவிக்கிறாள். அனு தலையில் அடித்துக்கொள்ள, பொற்கொடியின் முகத்தில் பூரிப்பு.

இப்படி, அபியின் குழப்பமான மனநிலையுடனே மூன்றாவது நாள் கழிந்தது.

என்ன செய்யப் போகிறாள் அபி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு