Published:Updated:

அபியின் விருப்பம், சித்தார்த்தின் அதிர்ச்சி... முதல் நாளே இவ்வளவு குழப்பமா? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Screenshot from Vikatan TV )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 8-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...

முதலிரவு...

`நமக்கான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆசைப்படுகிறேன். அதனால் இப்போதைக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்' என்கிற தன் விருப்பத்தைத் தயக்கத்துடன் சொல்லும் அபியைக் கண்டு ஆச்சர்யமடைகிறான் சித்தார்த். ``அப்படியென்றால் தாம்பத்யமும் வேண்டாமா?'' என்று கேட்கிறான்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

வேகமாக மறுத்த அபி, பாதுகாப்புடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று காண்டமை எடுத்துக் கொடுக்கிறாள். உடனே சித்தார்த்துக்குக் கோபம் தலைக்கேற, ``இதையெல்லாம் நான் பயன்படுத்துவேனா? அமெரிக்காவில் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று நினைத்தாயா. இதை நீ கடையில் வாங்கினாயா? யார் கொடுத்தது, அனுவா?'' என்றெல்லாம் கத்தித் தீர்க்கிறான்.

`மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா' என்று பெண்ணிடம் கேட்கவே இந்தச் சமூகத்தில் இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. தாம்பத்யத்தில் ஆண்தான் எதையும் முன்னெடுக்க வேண்டும். பெண் தன்னுடைய விருப்பம், விருப்பமின்மை என எதையும் சொல்லக் கூடாது. எழுதப்படாத இந்தச் சட்டமே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் மேற்கண்ட சம்பவம்... `குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம்' என்கிற முதல் முடிவையும், `பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள்ளலாம்' என்கிற இரண்டாம் முடிவையும் ஒரு பெண் - அதுவும் ஃபர்ஸ்ட் நைட்டில் - சொல்வதை ஆண் மனம் ஏற்க மறுக்கிறது.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அபி சொன்னதில் எந்தத் தவறும் இல்லாவிட்டாலும்கூட, இந்திய ஆண் மனம் அதைக் கண்டு அதிர்ச்சியடைகிறது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், ``அமெரிக்காவில் இருந்தால் காண்டம் யூஸ் பண்ணுவேன்னு நினைச்சியா? நம் பாரம்பர்யத்தை மறக்காதவன். அதான் உன்னைக் கட்டிருக்கேன்” என்று சொல்வதில் என்ன லாஜிக், டைரக்டர்?

தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக உலகெங்கும் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்? இந்த விஷயத்தில் பாரம்பர்யம், கலாசாரம் எல்லாம் எங்கே வருகிறது? அதுவரை பேசக்கூடத் தயங்கிய அபி திடீரென இப்படிக் கேட்கிறாள். சித்தார்த் பெருங்கோபத்துடன் வினையாற்றுகிறான். இதைப் பார்க்கும்போது இரண்டு கேரக்டர்களுக்குமே இந்தக் காட்சி பொருந்தவில்லையோ என்றே தோன்றியது.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

மறுநாள் இரு குடும்பங்களும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்கின்றன. அங்கே கட்சியில் வேலை செய்யும் அண்ணன், ஹனிமூன் போகச் சொல்லி ஐடியா கொடுக்கிறார். சித்தார்த்தின் அக்கா குடும்பத்துக்குத் தம்பி மீதுள்ள பாசம் கண்களை மறைக்க, ``எல்லோரும் போகலாம்'' என்று இங்கிதம் இன்றிப் பேசுகிறது. ``நான் சொல்வது டூர் இல்லை, ஹனி மூன்'' என்று அண்ணன் சொன்ன பிறகு, சித்தார்த்தும் அபியும் பாண்டிச்சேரி போவதற்குத் தயாராகிறார்கள்.

ஹனிமூன் கலகலப்பாக இருக்குமா?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு