Published:Updated:

கௌதமின் ஃபிளாஷ்பேக், சித்தார்த்தின் ஈகோ... கௌசல்யாவை சமாளிப்பாளா அபி? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 35-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

``என்னைப் பத்தி சொல்ல பெருசா ஒண்ணும் இல்ல. கூட்டுக்குடும்பம். எல்லோரும் என்னைத் தலையில் வச்சுக் கொண்டாடுவாங்க. ஏழாவது படிக்கும்போது ஒரு விபத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. குடும்பம் என்னை வித்தியாசமா நடத்த ஆரம்பிச்சது. ரொம்ப கஷ்டப்பட்டேன். தாத்தா என்னை சென்னைக்கு கூட்டிட்டு வந்து படிக்க வச்சார். ஐடியில் வேலை கிடைச்ச சில மாதங்கள்ல அவரும் போயிட்டார். இப்ப என் குடும்பம் நல்லா பழகுது. என்னைப் பத்திப் பெருமையா நினைக்குது. என்னாலதான் பழசை மறக்க முடியல. ஆனா, அவங்களுக்குச் செய்றது எதையும் விட்டுக்கொடுக்கல” என்று கெளதம் சொன்ன கதையைக் கேட்டு அபி நெகிழ்ச்சியடைகிறாள்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

`ஏன் தனியாக இருக்க வேண்டும், கல்யாணம் செய்துகொள்ளலாமே' என்று கேட்டால் பரவாயில்லை. ``நம்ம ஆபிஸ்லயே உங்கள எத்தனை பேர் விரும்பறாங்க. நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று கேட்கிறாள் அபி.

``எல்லாருக்கும் பிடிச்ச என்னை, எனக்குப் பிடிச்ச ஒரு பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டா. டேட்டிங் போய், மணிக்கணக்கா பேசி வாழ்க்கை நடத்துறதில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. நாள்களைத் தள்ளுறதுக்காக வாழாமல், ரசிச்சு வாழ விரும்பறேன். அப்படிப்பட்ட பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணிப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவரை சித்தார்த் என்று அழைக்கிறான் கெளதம்.

அபியின் உடல் நடுங்குகிறது. ``ஏன் இந்தப் பெயரைக் கேட்டு, உங்க கணவர் என்று நினைத்துவிட்டீர்களா" என்று கேட்கிறான் கெளதம்.

``அவர் படிச்சவர். திறமையானவர். குழந்தைகள் மேல ரொம்ப அன்பா இருப்பார். அக்கான்னா அவருக்கு உயிரு. நம்ம கல்ச்சரை ஃபாலோ பண்ணணும்னு நினைப்பார். எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது” என்று சித்தார்த்தின் நல்ல குணங்களை கெளதமிடம் சொல்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமைந்திருக்கிறது" என்று பாராட்டிவிட்டுச் செல்கிறான் கெளதம்.

பள்ளி முடிந்த பிறகு குழந்தைகளை எங்கே விடுவது என்று யோசித்த அபி, டிராயிங் க்ளாஸில் சேர்த்துவிடுகிறாள். டிராயிங் டீச்சர், அபி வரும்வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகச் சொல்கிறார். ஒரு பிரச்னை முடிந்த திருப்தியுடன் வீட்டுக்கு வருகிறாள் அபி.

அந்த மகிழ்ச்சி நீடிக்குமா, என்ன? அங்கே இன்னொரு பிரச்னை. கெளசல்யா வந்திருக்கிறார். சித்தார்த் இல்லாத குறையை கெளசல்யா தீர்த்து வைக்கப் போகிறார் என்பதை அறிந்த அபியும் குழந்தைகளும் சங்கடப்படுகிறார்கள்.

``எனக்கு வேலை இல்லைன்னு நான் சொல்லலை. ரெண்டு நாளில் கிடைச்சிடும். நீ வேலைக்குப் போறதை மட்டும்தான் சொன்னேன். நான் வரும்வரை குழந்தைகளை அக்கா பார்த்துப்பாங்க. உன்ன மாதிரி பொறுப்பில்லாமல் கண்டவங்களிடமும் குழந்தைகளை என்னால விட முடியாது. அவங்கதான் எனக்கு முக்கியம். எனக்கு போஸ்டிங் எந்த ஊரில் போடுவாங்கன்னு தெரியாது. உடனே கிளம்பத் தயாரா இரு” என்கிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அபி தன்னுடைய வேலை என்று ஆரம்பிக்கும்போது, ``இந்த டப்பா வேலையை விட மாட்டீயா? நீ என்ன செய்யறேன்னு பார்க்கிறேன். ரெண்டு நாள்தான் டைம். எவ்வளவு ஆடணுமோ ஆடு” என்று போனை வைக்கிறான்.

குடும்பத்துக்காகத்தானே அபியும் வேலைக்குப் போகிறாள் என்பதை சித்தார்த்தின் ஆண் என்ற ஈகோ மறைத்துவிடுகிறது.

சித்தார்த்துக்கு சென்னையில் போஸ்டிங் கிடைக்குமா?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு