பள்ளிக்கு போன சித்தார்த், அபியின் `அடடே' தத்துவம்... அபி ஆபீஸில் நடந்தது என்ன? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 40-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
அபி, லோகேஷ், பெனிடா ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, கெளதம் அபியை கேபினுக்கு அழைக்கிறான். உடனே லோகேஷும் பெனிடாவும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். இருவரைப் பற்றியும் காஸிப் பேசுகிறார்கள். ஒரு டீம் ஹெட்டை எல்லோருமே தனித்தனியாகச் சந்திக்க நேரிடும். லோகேஷும் பெனிடாவும்கூட அப்படித்தானே கேபினுக்குச் சென்றிருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, இந்தக் காலத்திலும் இப்படி கிசுகிசுக்கள் தொடர்வது வேதனைதான்.
அபியின் புரொபோசலில் ஒரு தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டி, உடனே சரி செய்யச் சொல்லும் கெளதம், ``யாராக இருந்தாலும் அவங்க தவற்றைத் தனியாகக் கூப்பிட்டுச் சொல்வதுதான் என் வழக்கம். இதுக்காக ரொம்ப வருத்தப்படாதீங்க. ஆரம்பத்தில் இப்படி வருவது சகஜம்தான். ரொம்ப கவனமா இருக்கணும். நீங்க கொடுத்த ஒரு புரொபோசல் ஓகே ஆகப்போகுது. சில மணி நேரம் கூடுதலா வேலை செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பார்த்துக்கிறதில் பிரச்னை ஒண்ணும் இல்லையே?” என்று கேட்கிறான்.
பிரச்னை இல்லை என்று சொல்லிவிட்டு, அபி சந்தோஷமாக வெளியே வரும்போது, காயத்ரி, ``நீங்க எல்லாம் படிச்சவங்களா? ஆணும் பெண்ணும் பேசிக்கிட்டாலே அது தப்பான நோக்கம்தானா? நீங்க எத்தனை தடவை கெளதம் ரூமுக்குப் போயிருப்பீங்க? இந்த ஜெனரேஷனிலும் இப்படி இருக்கிறது அதிர்ச்சியா இருக்கு” என்று பெனிடாவையும் லோகேஷையும் திட்டிக்கொண்டிருக்கிறாள்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அபி, காயத்ரியிடம் பிரச்னையை விட்டுவிடும்படிச் சொல்கிறாள். லோகேஷும் பெனிடாவும் மன்னிப்பு கேட்கிறார்கள்.
சித்தார்த் பேரன்ட்ஸ் மீட்டிங்குக்காக ஸ்கூலுக்குப் போகிறான். அங்கே அம்மாக்கள் குழுமியிருக்கிறார்கள். ஒரே ஓர் அப்பாவாக வந்திருக்கும் சித்தார்த்தைப் பார்த்து, எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் பேசுகிறார்கள். மற்றவர்கள் என்றால் இதற்காகச் சந்தோஷப்படுவார்கள். சித்தார்த் எரிச்சலுடன் அபிக்கு போன் செய்கிறான்.
``கோபப்பட்டு கிளம்பிடாதீங்க. அடுத்தவங்க பேச்சைக் கேட்டு வாழ ஆரம்பிச்சா, நம்ம வாழ்க்கை காணாம போயிரும். நீங்க ஸ்கூலுக்கு வந்ததில் குழந்தைகள் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று அபி சொன்னவுடன், ``நான் பிள்ளைகளுக்கு அப்பா, எனக்கும் தெரியும்'' என்று தொடர்பைத் துண்டிக்கிறான் சித்தார்த்.
அபி பேசியதை அந்த வழியே வந்த கெளதம் கவனித்து, “அடுத்தவங்க பேச்சைக் கேட்டு வாழ ஆரம்பிச்சா, நம்ம வாழ்க்கை காணாம போயிரும்னு நான் சொன்னதை, உடனே பிராக்டிகலா பண்ணிப் பார்த்துட்டீங்க. நீங்க எங்கேயோ போயிருவீங்க” என்று சொல்லவும், அபி மகிழ்ச்சியோடு செல்கிறாள்.
அடுத்து என்ன?
திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா