பெனிடாவுக்கு வந்த புது பிரச்னை... அபியை விடாத வீணா... ஆபிஸில் நடந்தது என்ன? #VallamaiTharayo

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 45-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
ஆபிஸுக்குள் அபி நுழையும்போது பெனிடாவைத் தேடி அவள் பெற்றோர் வந்திருப்பதாகவும், ஆபிஸுக்கு வந்த பெனிடா எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை என்றும் ரிஷப்ஷனிஸ்ட் சொல்கிறார்.
பெனிடாவின் பெற்றோரிடம் பேசிவிட்டு அபி கேபினுக்குப் போகிறாள். அங்கு பெனிடா இல்லை. லோகேஷும் அவளும் தேடிச் செல்கிறார்கள். பாத்ரூமில் பயந்தபடி நின்றுகொண்டிருக்கிறாள் பெனிடா.

``தலைமுடி வெட்டி, பேன்ட், சட்டையில் பார்த்தால் அப்பா தொலைச்சிடுவார். நானா வரும்வரை சென்னைப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூடாதுனு டீல் போட்டிருக்கேன். இப்படித் திடீர்னு வந்தால் என்ன பண்றது? அதான் நான் இல்லைனு நானே சொன்னேன்” என்ற பெனிடாவைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அபி.
``டீலா? எதுக்கு?”
``எனக்கு ஆல்பர்ட்னு ஒருத்தனுடன் கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க. `படிச்ச படிப்புக்கு ஒரு வருஷமாவது வேலை பார்த்துட்டுதான் கல்யாணம்'னு சொன்னேன். சரின்னு அனுப்பி வச்சாங்க.”
``என்னது கல்யாணமா? சரி, வா” என்று பெனிடாவை அழைத்துக்கொண்டு போகிறாள் அபி.
அவள் பெற்றோர் கடுமையாகத் திட்டி, ``இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். சீக்கிரம் ஊருக்கு வந்து சேர்” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
அபியும் லோகேஷும் பெனிடாவின் வீட்டுக்கு வருகிறார்கள்.

``அப்போ உன் மனநிலை வேற. இப்போ வேற. கல்யாணம் பிடிக்கலைன்னா ஏன் பண்ணிக்கணும்? முடியாதுன்னு சொல்லிடு” என்கிறாள் அபி.
``அது முடியாது அபி. அருவாளைத் தூக்கிடுவாங்க” என்கிறாள் பெனிடா.
``ஓடிப் போய்விடு" என்கிறான் லோகேஷ். இங்கேயும் அண்ணன் சேது போலவே ஓடிப்போகச் சொல்லும் கேரக்டர்!
``கல்யாணம்கூட ஓகேதான். இங்கே வீணா மாதிரி ஆட்கள்கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கிறதைவிட, ஆல்பர்ட்டைக் கல்யாணம் பண்ணிக்கிறது பெட்டர். அங்கே வேலைக்கு ஆள் இருக்காங்க. எந்த வேலையும் செய்ய வேணாம். கஷ்டப்படாமல் வாழ்க்கையை ஓட்டிடலாம்” என்று சொல்லும் பெனிடாவை அபியும் லோகேஷும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு வேலை என்பது எவ்வளவு பெரிய விஷயம்! பொருளாதாரம்தான் அவளுக்கு உண்மையான சுதந்திரத்தைத் தேடித் தரும். பெனிடா அதை ஜஸ்ட் லைக் தட் ஆகச் சொல்வது நெருடல்.
அப்போது பெனிடாவின் ரூம்மேட் தன் ஃபிரெண்டுடன் வந்து `ஹலோ' சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவளுக்கு நிறைய நண்பர்கள் என்று லோகேஷ் சிரிக்கிறான்.

``அவ எப்படி இருந்தால் என்ன? ரூமை ஷேர் பண்ணிக்கிறோம். அவ்வளவுதான்” என்கிறாள் பெனிடா.
உடனே லோகேஷ் ஃப்ரிட்ஜைத் திறந்து காட்டுகிறான். பியர் பாட்டில்கள் இருப்பதைப் பார்த்து அபி முகம் சுளிக்கிறாள். இதையெல்லாம் பெனிடா இனிவிட வேண்டியிருக்கும் என்கிறான்.
இருவரும் பெனிடாவிடம் விடைபெற்று வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். அப்போது வீணா ஆபிஸுக்கு வரும்படி அபியைக் கூப்பிடுகிறார்.
``இந்த வேலையில் தப்பு இருக்கு. கெளதம் உதவி இல்லாமல் தனியா சரி பண்ணணும்” என்கிறார்.
அபி வேலை செய்யும்போது, கெளதம் வருகிறான். தானே செய்வதாக அவனை அனுப்பி வைக்கிறாள் அபி.
வீட்டில் சித்தார்த், ஆபிஸில் வீணா என்று அபிக்கு எங்கேயும் எப்போதும் பிரச்னைக்குரியவர்களே இருக்கிறார்கள்.
இனி என்ன?
திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா