Published:Updated:

பெனிடா, லோகேஷால் அபி வீட்டில் நடந்த கலாட்டா... சித்தார்த் ரியாக்‌ஷன் என்ன? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 47-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

பெனிடாவும் லோகேஷும் சந்தோஷமாக இருக்க, அபி சங்கடத்தில் இருக்க, சித்தார்த் கோபத்துடன் இருக்க, கேக் வெட்டப்படுகிறது. அபியோ மற்றவர்களோ கொடுக்கும் கேக்கையும் சித்தார்த் வாங்கவில்லை, அவனும் அபிக்கு கேக் கொடுக்கவில்லை.

சூழலைப் பார்த்து உணர்ந்துகொள்ளும் மனநிலையில் பெனிடாவும் லோகேஷும் இல்லை. வீரியமாகி ஜாலியாகப் பேசுகிறார்கள். ``காயத்ரியைக் கூப்பிடலாம்னு நினைச்சோம். நைட்ல வருவாங்களான்னு தெரியலை. கெளதம் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். செம ஜாலி பெர்சன். ஆனா, அவருக்கு லைன் கிடைக்கல” என்று பெனிடா சொன்னவுடன் சித்தார்த் முகம் மாறுகிறது.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

`கெளதமா' என்று சித்தார்த் கேட்க, ``ஆமா, எங்க டீம் லீடர். அபி சொன்னதில்லையா? சுமாரா வேலை செய்யறவங்களைக்கூட, நல்லா வேலை செய்ய வச்சிடுவார். அவர்னாலதான் நாங்க எல்லாம் வேலையில் இருந்துகிட்டிருக்கோம். நீங்க பார்த்ததில்லையா?” என்று சொல்லிவிட்டு, தன் மொபைலில் இருக்கும் கெளதம் படத்தைக் காட்டுகிறாள் பெனிடா.

அதைப் பார்த்தவுடனே தலைவலி என்று சித்தார்த் எழுந்து செல்ல, பெனிடாவும் லோகேஷும் வந்த காரியத்தை முடித்த திருப்தியுடன் கிளம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்தான். அபிக்கு ஏன் இந்தப் பிறந்தநாள் வந்தது என்கிற திண்டாட்டம். பயந்துகொண்டே அறைக்குச் செல்கிறாள் அவள்.

``ஆக்சிடென்ட் ஆனபோது வந்த கெளதம்தான் எங்க டீம் லீடர்ங்கிற விஷயத்தை மறைக்கணும்னு நினைக்கல. அன்னிக்கு நீங்க கோபப்பட்டதால சொல்லத் தயக்கமா இருந்துச்சு...”

``இந்த விஷயத்தை எதார்த்தமா சொல்லாம இல்ல. உன்கிட்ட தப்பு இருக்கிறதாலதான் மறைச்சிருக்கே. அன்னிக்கே இதைச் சொல்லியிருந்தா பிரச்னை முடிஞ்சிருக்கும்.”

``இல்லங்க, ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு அவரைத் தெரியும். பூந்தோட்டத்துக்குப் போறப்ப பஸ்ல இடம் கொடுத்தவர் அவர்தான்.”

``ஓஹோ... இதை என்கிட்ட சொல்லணும்னு ஏன் தோணலை? ரொம்ப டேஞ்சரஸான பொண்ணு நீ. இதை அன்னிக்கே சொல்லியிருந்தா, ஆக்சிடென்ட் ஆனப்ப நான் ஏன் கத்தியிருக்கப் போறேன்? உனக்குள்ள ஏதோ தவறான எண்ணம் இருக்கு. அதான் மறைச்சிருக்கே...” என்று கத்துகிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

ஒரு சாதாரணமான விஷயத்தைக்கூட ஷேர் செய்துகொள்ளும் அளவுக்கு அவளிடம் தான் நடந்துகொள்ளவில்லை என்கிற உண்மை, சித்தார்த் மாதிரி ஆட்களுக்குப் புரிவதே இல்லை. அதே போல அபியும் என்றைக்குத் தெரிந்தாலும் கத்ததான் போகிறான் சித்தார்த் என்பதால், அதை முன்பே சொல்லியிருக்கலாமோ?

ஆபீஸில் கெளதம் பர்த்டே கிஃப்ட் கொடுக்கிறான். ``நான்தான் இவங்ககிட்ட உங்க பர்த்டேயைச் சொன்னேன். நைட் வந்து கலாட்டா பண்ணிட்டாங்களாம். சாரி” என்கிறான்.

``அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்களைப் பத்தி நான் சொன்னதில்ல. அது தெரிஞ்சிருச்சு” என்கிறாள் அபி.

``ஏதாவது ப்ராப்ளமா?” என்று கெளதம் கேட்க, அமைதியாகிறாள் அபி.

நிகழ்காலத்தில் காயத்ரியின் ஃப்ளாட்டில் இருக்கும் அபிக்கு காயத்ரி போன் செய்கிறாள். ``நம்முடன் வேலை பார்த்த பட்டாச்சார்யா இன்னிக்கு கோவிட்னால இறந்துட்டார்னு ஆர்.கே சொன்னார்” என்கிறாள்.

அபிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதிர்ச்சிகள் அவ்வளவுதானா என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு