காயத்ரிக்கு கேப் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறான் கெளதம். அபி அறைக்குத் திரும்பும் வழியில் ஒருவன், ``என்ன, இருந்த ஒரு ரூம்மேட்டும் போயிட்டாங்களா? தனியாதான் இருக்கீங்களா?” என்கிறான். அபி வேகமாக அறைக்குச் சென்றுவிடுகிறாள்.
அதிராவுக்கு போன் செய்து பேசுகிறாள். ``அப்பா எங்களை பார்க்குக்கு அழைச்சிட்டுப் போனார். ஜாலியா இருந்தோம். பர்கர் வாங்கிக் கொடுத்தார். நீங்க ஜாலியா இருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு, இணைப்பைத் துண்டிக்கிறாள் மகள்.

அப்போது காலிங் பெல் விடாமல் அடிக்கிறது. கதவைத் திறக்காமல், யார் என்று கேட்கிறாள் பதில் இல்லை. பெனிடா, லோகேஷ் என்று கூப்பிடுகிறாள், பதில் இல்லை. சிறிது நேரத்தில் மீண்டும் யாரோ படபடவென்று கதவைத் தட்டுகிறார்கள். யாரென்று கேட்டால் பதில் இல்லை. பெனிடாவும் லோகேஷும் போனை ஆஃப் செய்து வைத்திருக்கிறார்கள். வேறு வழியின்றி கெளதமை அழைக்கிறாள் அபி.
``இங்கே யாரும் இல்லையே அபி?” என்று கேட்கும் கெளதமிடம், `தனியாக இருக்கிறாயா’ என்று ஒருவன் கேட்டதைச் சொல்கிறாள் அபி.
இது போன்ற ரிசார்ட்டுகளில் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவது அரிது. அப்படியே பிரச்னை வந்தாலும் ரிசப்ஷனுக்கு ஒரு போன் செய்தால் போதும். பயந்து நடுங்க வேண்டியதில்லை. ஆனால், இப்படி எதுவும் செய்யாமல் கெளதம் துணைக்கு இருப்பதாகச் சொல்லி, அபியைத் தூங்கச் சொல்கிறான். அலுவலக ரீதியாகப் பெண்கள் தனியாகப் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆண்தான் பாதுகாப்பு என்ற சிந்தனை மாறிவருகிறது. பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் டாக்ஸி, பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய பாதுகாப்பான ஹோட்டல்கள் எல்லாம் இப்போது புதுவரவாகியிருக்கின்றன.

கெளசல்யா வீட்டுக்கு பெயின்ட் அடிக்க அந்த நிறுவனத்தின் ஆளை சித்தார்த் அனுப்பி வைத்தது ஓகே. ஆனால், இன்றைய எபிசோடில் சென்னையில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த், பூந்தோட்டத்தில் பெயின்ட் அடிக்கும் ஆட்களுடன் இருப்பதில் ஒரு லாஜிக் சறுக்கல்!
புதுச்சேரியில்...
அபியும் கெளதமும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். ``இந்த க்ளைமேட் இந்த நடையை அழகாக்குகிறது" என்கிறாள் அபி. ``அதெல்லாம் இல்லாவிட்டாலும் உங்களைப் போன்று நமக்குப் பிடித்தவர் இருந்தால்கூடப் போதும், இந்த நடை அழகாக மாறிவிடும்" என்று கெளதம் சொல்லிக்கொண்டிருக்கும்போது பெனிடா வருகிறாள்.
தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறாள்.

``சுதந்திரத்தை இப்படி மிஸ்யூஸ் பண்றதால, மத்த பெண்களையும் வெளியில் விடவே தயங்கறாங்க. உன் சுதந்திரத்தை இப்படித் தவறா பயன்படுத்தறதால மத்த பெண்களின் நியாயமான உரிமைகளையும் நீ தடுக்கறே. தப்பு பெனி. ஒவ்வொரு தடவையும் சாரி சொல்லிட்டு, இப்படித்தான் பண்றே” என்று கெளதம் கடிந்துகொள்ள, ``இனி இப்படி நடக்காது" என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் பெனிடா.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா