அபியின் வேலையைத் தடுக்கும் சித்தார்த், முடிவுடன் கிளம்பும் கௌதம்... மோதல் தீருமா? #VallamaiTharayo

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 60-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
அபி எட்டு மணிக்கு எழுந்து வரும்போது கெளசல்யாவின் மகள் `மாப்' போட்டுக்கொண்டிருக்கிறாள். கெளசல்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். ``இதெல்லாம் ஏன் நீங்க பண்றீங்க? நான் பண்ணிக்கறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்கிறாள் அபி.
``நீங்க வேலைக்குப் போறீங்க... டயர்டா இருக்கும்... 8 மணிக்கு எழுந்து வருவீங்க... அதுவரைக்கும் சாப்பிடாம இருக்க முடியாது இல்லையா? ஏதோ தம்பி வீட்டுக்கு வந்தா ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைப்பேன். நேத்து நடந்த விஷயத்துக்குப் பிறகு, தண்டச்சோறு திங்கிறதா சொல்லிடுவீயோன்னு பயமா இருக்கு. வேலை செஞ்சிடறேன்” என்கிறார் கெளசல்யா.

யார் வீட்டுக்குச் சென்றாலும், அந்த வீட்டுப் பெண் வேலைக்குப் போனாலும் போகாவிட்டாலும் வேலைகளை ஷேர் செய்துகொள்வதுதான் மகிழ்ச்சியாக இருக்க உதவும் என்பதைப் பலரும் கருத்தில் கொள்வதில்லை. பிறகு, எப்படி உறவுகள் மேம்படும்?
அபார்ட்மென்ட் செகரட்டரி மெய்ன்டனன்ஸ் பணத்தைக் கொடுக்கச் சொல்கிறார். தந்துவிடுவதாகச் சொல்கிறான் சித்தார்த். ``உங்க அக்கவுன்ட்டில் பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கேனே. அதை எடுத்துக் கொடுத்துடுங்க” என்கிறாள் அபி.
``நீ எனக்குப் பணம் கொடுக்கறதைச் சொல்லிக் காட்டறியா? அதை உன் அக்கவுன்ட்லேயே போட்டுட்டேன். இனி நீ வேலைக்குப் போகப் போறதில்லை” என்று கத்துகிறான் சித்தார்த்.

``அவசரப்பட்டு அப்படிச் சொல்லாதடா. உனக்கு வேலை இன்னும் கிடைக்கலையே... எப்படிச் சமாளிப்பே? என் நகை வேணா வச்சுக்க” என்கிறார் கெளசல்யா.
இரண்டே வாரங்களில் வேலை கிடைத்துவிடும் என்று சொல்லும் சித்தார்த், நண்பர்களிடம் பணம் கேட்கிறான். கிடைக்கவில்லை.
அபி ஆபீஸ் செல்லவில்லை. அதற்காக ஆபீஸுக்குத் தகவலும் சொல்லாமல், ஆபீஸிலிருந்து வரும் அழைப்புகளையும் ஏற்காமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. வீணா சொல்வதுபோல பொறுப்பில்லாதவளாகத்தான் இருக்கிறாள் அபி, இந்த விஷயத்தில்.
லோகேஷ், பெனிடா ஆகியோரிடம் அபியைப் பற்றி விசாரிக்கிறான் கெளதம். பிறகு லேண்ட்லைன் மூலம் அபியைத் தொடர்புகொள்கிறான். அந்த அழைப்பை ஏற்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள் அபி. சித்தார்த் எடுத்து, `இவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா' என்றெல்லாம் கெளதமிடம் கேட்டு, `இனி வரமாட்டாள்' என்று சொல்லி இணைப்பைத் துண்டிக்கிறான்.
சித்தார்த் மீது வரும் அளவுக்கு அபி மீதும் கோபம் வருகிறது. போனில் பேச முடியாவிட்டாலும் அலுவலகத்துக்கு ஒரு மெசேஜ் போட்டிருக்க முடியாதா?

கெளதம் நேரில் சென்று இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் போவதாகக் கிளம்புகிறான். லோகேஷ் தடுக்கிறான். அதைக் கேட்காமல் கெளதம் செல்கிறான்.
கெளசல்யா குடும்பம் ஊருக்குக் கிளம்ப, அவர்களை வழியனுப்ப சித்தார்த்தும் செல்கிறான்.
அடுத்து என்ன?
திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா