`என்ன செய்யணுமோ செஞ்சுக்குங்க..!' - சித்தார்த்துக்கு ஷாக் கொடுத்த அபி #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 62-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
கோபத்துடன் வரும் அபி, வீட்டில் எதுவும் நடக்காதது போல் இருக்கும் சித்தார்த்தைப் பார்த்தவுடன் ருத்ரகாளியாக மாறுகிறாள்.
``நீங்க இவ்வளவு வயலன்ட்டான ஆள்னு நான் நினைக்கவே இல்ல. இப்படி ஒரு கேவலமான காரியத்தைச் செஞ்சிட்டு வந்து, எப்படி இயல்பா இருக்க முடியுது உங்களால? ஏதோ கோபக்காரர்னு நினைச்சேன். இவ்வளவு மோசமானவர்னு தெரியாமல் இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன்...”
``ஆமாம், அப்படித்தான் பண்ணினேன். நான் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு நீ சொல்ல முடியாது. முதல்ல ஆபீஸ் கலீக்னு சொன்னே... அப்புறம் ஃபிரெண்டுன்னு சொன்னே... இப்ப என்ன சொல்லப்போறே? எங்கிட்டேயே அவனுக்காகப் பேசுறது உனக்கு வெட்கமா இல்லையா?”
``நான் என்ன தப்பு செஞ்சேன், வெட்கப்பட? நீங்கதான் உங்க குணத்துக்கு வெட்கப்படணும். உங்களை டிபென்ட் பண்ணி இருக்கிறதாலதானே இவ்வளவு பேசறீங்க? இத்தனை வருஷம் குழந்தைகளுக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். இனியும் அப்படி இருந்தா நான் ஒரு மனுஷியே இல்ல. வேலைங்கிறது என்னோட சுயமரியாதை, நம்பிக்கை. வேலை இல்லாததாலதானே உங்களுக்கு என்னை ஒரு மனுஷியா தோண மாட்டேங்குது. இப்ப சொல்றேன், நாளைக்கு நான் வேலைக்குப் போறேன். என்ன செய்யணுமோ செஞ்சுக்குங்க” என்று அபி சொல்லிவிட்டுச் செல்ல, சித்தார்த் அதிர்ச்சியாக அமர்ந்திருக்கிறான்.
ஆபீஸில் அபியைப் பார்த்தவுடன் எல்லோரும் சந்தோஷப் படுகிறார்கள். கெளதமை எல்லோரும் விசாரிக்கிறார்கள். அபி அவனைச் சந்திக்கிறாள். நடந்த விஷயங்களைச் சொல்கிறாள். இந்த வேலைதான் என்னை யார் என்று எனக்கே காட்டியது என்கிறாள். இனி வேலையை விடப்போவதில்லை என்றும் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சொல்கிறாள்.
``உங்க முடிவு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அபி. ஆனா, சித்தார்த்?”
``இவ்வளவு மோசமான குணத்துடன் இருக்கும் ஒருத்தரோடு வாழும்போது குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க. அவங்களுக்காகத்தான் இத்தனை வருஷமும் தாக்குப்பிடிச்சேன். இனியும் அப்படி இருக்க முடியாது கெளதம்” என்று சொல்லிவிட்டு, அபி வெளியே வருகிறாள்.
ஆபீஸ் ஆட்கள் இருவர் அபியையும் கெளதமையும் இணைத்து தவறாகப் பேசுகிறார்கள். உடனே கோபம் கொள்ளும் அபி, ``பெண்கள் எல்லாம் எவ்வளவு பிரச்னைகளோட வேலைக்கு வர்றோம்னு தெரியுமா? இதுல எவ்வளவு ஈஸியா ஒவ்வொருத்தர் கேரக்டரையும் ஸ்பாயில் பண்றீங்க? இனி இப்படி யாரையும் பேசாதீங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீணா வருகிறார். இது என்ன சந்தைக் கடையா என்று கேட்கிறார்.
அபியின் துணிச்சல் இன்று பிரமாதமாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அமைந்தது.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா