அபியை அறைக்குள் அழைக்கும் வீணா, ``ஏன் இப்படி நடந்துகிறீங்க? இது ஆபீஸா என்ன? மத்தவங்க பேசாத மாதிரி நடந்துக்கணும்” என்று கேட்கிறார்.
இப்படிப் பேசுபவர்கள் நம்மோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் வலியை இன்னொரு பெண்ணால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதெல்லாம் கிடையாது. அவர்களும் ஆணாதிக்கச் சிந்தனையோடுதான் சக பெண்களைக் கேள்வி கேட்கிறார்கள். இப்படி இருந்தால் பிரச்னை எப்படித் தீரும்?
``நீங்க என்னைக் கூப்பிட்டுக் கேட்கக் கூடாது. அவங்களைத்தான் கேட்டிருக்கணும். கேரக்டரைத் தப்பா பேசினா கேட்காம இருக்க முடியாது. நீங்க இப்படி நடந்துகிறது அதிர்ச்சியா இருக்கு. உங்க மேல நான் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியிருக்கும்” என்கிறாள் அபி.
அதிர்ச்சியடையும் வீணா, உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதைப் பார்வையாலேயே உணர்த்திவிடுகிறார். மாலை அபிக்கு ஒரு டாஸ்க் கொடுத்து செய்யச் சொல்கிறார். இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் வீணாவால்?
நீண்ட நேரத்துக்குப் பிறகு சித்தார்த் அழைப்பை ஏற்கிறான். ``கிளம்பறப்ப ஒரு டாஸ்க் கொடுத்து முடிச்சிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. இல்லைன்னா ரிப்போர்ட் பண்ணிடுவாங்க. என்ன பண்றதுன்னே தெரியல. லேட்டாகும். குழந்தைங்க சாப்பிட்டாங்களா?” என்று அபி கேட்கிறாள்.
``மேடம் உங்க இஷ்டத்துக்குதானே எல்லாம் செய்வீங்க. திடீர் போராளியாயிட்டீங்க. லேட்டா வர்றது என்ன புதுசா? என்ன வேணா காரணம் சொல்லுங்க. ஒரு அம்மான்னா எடுத்தவுடனே குழந்தைங்க சாப்பிட்டாச்சான்னுதானே கேட்கணும்? உன்னை மாதிரி ஆளைக் கல்யாணம் பண்ணிட்டு ஏமாந்துட்டேன்” என்று இணைப்பைத் துண்டிக்கிறான் சித்தார்த்.
அபியைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் சித்தார்த்துக்கு, ஒரு வீடியோவை அனுப்பி வைத்துவிட்டு, ``நம்ம கிட்ட வச்சுக்கிட்டா இப்படித்தான்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.
வீட்டுக்கு வந்த அபி அழைப்பு மணியை பல முறை அடித்தும் சித்தார்த் திறக்கவில்லை. போனையும் எடுக்கவில்லை. இறுதியில் போனை எடுக்கிறான். `தூங்கிட்டீங்களா' என்று அபி கேட்க,`இல்லை' என்கிறான். `பனியில் வெளியில் நிற்கிறேன், சீக்கிரம் திறந்துவிடுங்க' என்கிறாள் அபி.
``நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை வெளியில் நிக்க வைக்காம என்ன பண்றது?”
``ஏங்க, லேட்டாகும்னு சொல்லிட்டுதானே வந்தேன்... முதல்ல திறங்க... எல்லோரும் என்ன நினைப்பாங்க?”
``இரு, ஒரு வீடியோவை அனுப்பறேன். அதுக்கப்புறம் பேசு” என்று வீடியோவை அனுப்பிவிட்டு, போனை அணைத்துவிட்டு, படுத்துவிடுகிறான் சித்தார்த்.
பாண்டிச்சேரியில் கெளதம் அபிக்கு புரொபோஸ் செய்யும் டாஸ்க் வீடியோ அது. அதிர்ச்சியடைகிறாள் அபி.
இந்த டாஸ்க் கேவலம் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த வீடியோ முழுவதையும் பார்த்தால், கெளதம் ரொம்ப நாகரிகமாகப் பேசியிருப்பான். சந்தேகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் சித்தார்த் இதையெல்லாம் யோசிக்கக் கூடியவனாக இருக்க வாய்ப்பில்லை. அதற்காக மனைவியை வெளியே நிற்க வைப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா