கெஞ்சும் கெளசல்யா... புரபோஸ் செய்யும் கெளதம்... அபியின் முடிவு என்ன? #Climax #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 79-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
அபி அமைதியாக இருக்கிறாள். அமைதிக்குப் பின்னே புயல்?
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் அழுது தீர்க்கிறார் கெளசல்யா. "என் சித்தார்த் ரொம்ப நல்லவன். அவனைக் கெடுத்ததே நான்தான். எனக்கும் அவனுக்கும் இடையில உள்ள பாசம் அபினால குறைஞ்சிடப் போகுதோன்ற பயத்துலதான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னேன் மாமா.
என்னை மன்னிச்சுக்கோங்க. இதுல சித்தார்த்துக்கு எந்த ரோலும் இல்லை. குழந்தைகளையும் அபியையும் நினைச்சு அவன் வருத்தப்படாத நாளே இல்ல.
அவனுக்கு ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணும்போதுதான் தெரிஞ்சது, அபியின் அருமை. என் தம்பி வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு நினைக்கும்போது எனக்குத் தாங்கவே முடியல. நான் செஞ்ச தப்புக்கு என் தம்பியைத் தண்டிச்சிராதீங்க.
இங்க பாரு அபி, சித்தார்த்துக்கு சந்தேகம் தானா வரல. நான்தான் அவனை ஏத்திவிட்டேன். அதனால அவனை நீ ஏத்துக்கணும். உனக்கே தெரிஞ்சிருக்கும் அவன் எவ்வளவு மாறிட்டான்னு. நீ புத்திசாலி. திறமையானவ. நல்லா சம்பாதிக்கிறே. எனக்கு விவரம் பத்தாது. தயவுசெஞ்சு நீங்க ரெண்டு பேரும் சேரணும் அபி" என்று கெஞ்சுகிறார் கெளசல்யா.
அபி அமைதியாக இருக்கிறாள். அபியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள். வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள் அபி.
கெளதம் அபியைச் சந்திக்கிறான். "எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். நல்ல ஃபிரெண்டாதான் பார்த்துட்டிருந்தேன். சமீபமாதான் நட்பையும் தாண்டி வேற ஒரு ஃபீல் உண்டாகுது. உங்க பிரிவுக்கு நான் ஒரு காரணம்கிற குற்றவுணர்வுல இதைச் சொல்லல அபி. உங்க மேல இரக்கப்பட்டும் எனக்கு அந்த உணர்வு வரல அபி.
பலநாள் பழக்கத்திலும் புரிஞ்சுக்கிட்டதிலும் வந்திருக்கு. என்னை ஏத்துக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஏத்துக்கலைன்னாலும் இதே நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் அபி. இதைக் கேட்காம விட்டிருந்தாதான் வருத்தப்பட்டிருப்பேன். இப்போ நீங்க எந்த முடிவை எடுத்தாலும் அதை ஏத்துக்குற நிலையில் இருக்கேன் அபி" என்கிறான்.
அபி அமைதியாக இருக்கிறாள். ஆதிரா போன் செய்கிறாள். "அப்பா உன்னை வந்து பார்த்தாராம். அப்பாவே சொன்னார். எனக்காக நிறைய டாய்ஸ் வாங்கி வச்சிருக்காராம். அதை எடுத்துட்டு வாங்க. அப்பாவையும் கூட்டிட்டு வந்தா ஜாலியா இருக்கும்மா. கெளதம் அங்கிள் இங்கே வரப் போறதா ஹர்ஷிதா ஆன்ட்டி சொன்னாங்க. ரொம்ப நல்லா இருக்கும். நீங்க எப்ப வர்றீங்க?" என்று கேட்கிறாள்.
"பாட்டி ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துடுவாங்க. ஒரு வாரத்துல அங்கே வந்துடுவேன். ஆன்ட்டிகிட்ட சொல்லு. டாய்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்" என்கிறாள் அபி.
என்ன முடிவெடுக்கப்போகிறாள் அபி?
இன்று இரவு 7 மணிக்கு கிளைமேக்ஸில் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா